இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? ஜீவி. காத்தையா

இந்தியர்இந்நாட்டின் குடிமக்களாகிய இந்திய மலேசியர்களுக்கும், சீன மலேசியர்களுக்கும், மலாய் மலேசியர்களுக்கும், இதர மலேசியர்களுக்கும் சமமான உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன. மலேசிய அரசமைப்புச் சட்டம் இதனை உறுதி செய்கிறது.

ஆனால், நடைமுறையில் உரிமைகள் இன அடிப்படையில் வேறுபடுத்தப்படுகின்றன. எல்லாம் மலாய்க்காரர்களுக்கே; மிஞ்சியதுதான் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும். ஏனென்றால், மலாய்க்காரர்கள் இந்நாட்டின் இளவரசர்கள், மற்றவர்கள் எல்லாம் எச்சிலைப் பொறுக்கிகள். இது அரசமைப்புச் சட்டத்தின் நிலைப்பாடு அல்ல. இது மலாய், குறிப்பாக அம்னோ, அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.

இந்நாட்டில் மலாய்க்காரர்களின் எண்ணிக்கையை நிலைநிறுத்த இந்தோனேசியர்களை கொண்டு வருவோம் என்றார் அம்னோவின் முதல் தலைவரான ஓன் பின் ஜாபார்.

மலாயாவில் அனைவருக்கும் இடம் உண்டு என்று சிரித்தே காரியம் சாதித்த துங்கு அப்துல் ரஹ்மான், மலாயா மலாய்க்காரர்களுக்கே என்றார்.

இனங்களுக்கிடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வை அகற்றும் நோக்கத்துடன் புதிய பொருளாதார கொள்கையை அறிவித்த அப்துல் ரசாக் அக்கொள்கையை மலாய்க்காரர்களின் மேம்பாட்டிற்கு மட்டுமே என்றாக்கி விட்டார்.

மலாய்க்காரர்களின் ஆளுமைக்கு வித்திட்ட மகாதிர் முகமட் ரப்பர் மற்றும் செம்பனைத் தோட்டங்களை பிரிட்டீஷாரிடமிருந்து கைப்பற்றி இந்தியர்கள் தோட்டங்களிலிருந்து வெளியேற வழிவகுத்தார்.

DNdebateஇந்நாட்டு பொருளாதாரத்தில் அனைவருக்கும் சம பங்குண்டு என்று கூறிய அப்துல்லா படாவி, இந்நாட்டு இந்தியர்களின் சொத்துடமையை அதிகரிப்பதற்கு உதவுமாறு விடுத்த வேண்டுகோளுக்கு அது இந்திய சமூகத்தின் பொறுப்பாகும் என்று மலேசிய நாடாளுமன்ற மேலவையில் கூறினார்.

இந்திய சமூகத்திற்கு உரியதை முந்திய தலைவர்கள் செய்யத் தவறி விட்டதற்காக மன்னிப்பு கோரிய நஜிப் ரசாக், இந்தியர்களுக்கு வேண்டியதைச் செய்வதாக உறுதி கூறி இந்திய சமூகம் அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு “இஞ்சி சப்பாத்தி” போடுவதிலிருந்து அரிசி மற்றும் மேகி மீ பொட்டலங்கள் போன்றவற்றை விநியோகிப்பது, ஏகப்பட்ட இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு மானியங்கள் வழங்குவது போன்றவற்றை பெரும் ஆரவாரத்துடன் செய்து வந்தார். தாய்மொழிப்பள்ளிகள் (தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள்) அரசாங்க நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து எதிர்பார்த்திருக்கக் கூடாது என்றும் அறிவித்தார். இறுதியில், இந்தியர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராட வேண்டும் (“Indians must fight for their rights”)  என்றும் நஜிப் பாரிசான் பங்காளியான மஇகாவின் 66 ஆம் ஆண்டு பொதுக்கூட்டத்தில் முழங்கினார்.

இந்தியர்களுக்கு உரிமைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றுக்காக அவர்கள் போராட வேண்டும். யாருக்கு, எந்த அரசாங்கத்திற்கு, எதிராக அவர்கள் போராட வேண்டும்? நஜிப்பின் கூற்றுப்படி, இந்தியர்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக நஜிப்பையும், அவருடைய அரசாங்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும், இல்லையா?

திரும்பிப் போ

மலாய்க்காரர் அல்லாதவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பிய டி.ஆர் சீனிவாசகத்தை சிலோனுக்கு திருப்பிப் போ என்றார் துங்கு அப்துல் ரஹ்மான். மகாதிர் விருந்தினர்கள் (வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்) விருந்து முடிந்ததும் அவர்களுடைய வீட்டிற்கு திரும்பிப் போக வேண்டும் என்றார். இப்போது, நஜிப் காலத்தில் அதே “திரும்பிப் போ” என்ற அம்னோ தலைவர்களின் கொள்கை பெர்காசா போன்ற மலாய்க்காரர்களின் ஆளுமைக்காக போராடும் அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திரும்பிப் போ என்றால் போக மாட்டார்கள். அவர்கள் மனம் நொந்து வேறு வழியில்லை, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் அவர்கள் வெளியேறுவார்கள் என்பது ஒரு திட்டமிட்ட கொள்கையாகும். அதன் அமலாக்கத்தால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட இந்தியர்களும் சீனர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

estate-workers-old-photoதங்களுடைய கடும் உழைப்பால் இந்நாட்டை வளப்படுத்தியவர்கள் இந்தியர்கள். 1957 ஆம் ஆண்டில், மலாயாவின் தேசிய வருமானம் $180 மில்லியன். அதில் தோட்டத்துறையின் பங்களிப்பு (இந்தியர்களின் உழைப்பால் கிடைத்த வருமானம்) 68 விழுக்காடு, சுரங்கத்துறை (சீனர்களின் உழைப்பு) 30 விழுக்காடு. மற்ற துறைகளிலிருந்து கிடைத்த வருமானம் வெறும் 2 விழுக்காடுதான்! வெறும் 2 விழுக்காட்டை அளித்தவர்கள் 98 விழுக்காட்டை அளித்தவர்களை விரட்டுகிறார்கள்!

திருப்பிப் போ என்று முழங்கிய, முழங்கிக் கொண்டிருக்கும் இதர தலைவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்?

துங்கு அப்துல் ரஹ்மான் பாதி சயாமியர். டி.ஆர் சீனிவாசன் அவரை சயாமிற்கு திரும்பிப் போங்கள் என்று பதிலடி கொடுத்தார்.

அப்துல் ரசாக் இந்தோனேசிய சுலுவாசி தீவிலிருந்து வந்தவர்களின் வாரிசு. நஜிப் ரசாக் இப்பின்னணி குறித்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார். ஹுசைன் ஓன் துருக்கிய பின்னணியுடையவர். அப்துல்லா படாவி சீனப் பூர்வீகம் கொண்டவர். இந்தியாவிலிருந்து பிரிட்டீஷ் நீராவிக் கப்பலில் ஏறி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் வாரிசு மகாதிர் முகமட். இவர்களுக்கெல்லாம் இந்நாட்டில் முழு உரிமையுண்டு. பிரிட்டீஷ் பேரரசின் ஒரு பகுதியான இந்தியாவிலிருந்து அப்பேரரசின் மற்றொரு பகுதியான மலாயாவுக்கு அதே பிரிட்டீஷ் நீராவிக் கப்பலில் ஏறி இங்கு வந்த இந்திய வம்சாவளியினரின் இன்றைய சந்ததியினருக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது.

najib and mahathirஆனால், தமது உடம்பில் இந்திய இரத்தம் ஓடுவதில் பெருமைப்படுவதாக கூறிக்கொள்ளும் மகாதிர் முகமட், இந்நாட்டின் மேம்பாட்டிற்கு இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்று கூறியுள்ள மகாதிர் முகமட், இந்நாட்டை மேம்படுத்திய இந்தியர்கள் மேம்பாடு அடைவதற்கு என்ன, எப்போது செய்தார்?

இந்தியர்கள் அவர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டும் என்றும், தம் மீது நம்பிக்கை வைக்குமாறும் இந்தியர்களை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ள நஜிப் ரசாக் இந்தியர்களின் மேம்பாட்டிற்காக என்ன, எப்போது செய்தார்?

இக்கேள்விகளுக்கு விடை காண மலேசியாகினி மேடையில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே அரசியல் கட்சி என்று கூறிக்கொள்ளும் மஇகாவின் தலைவர்களில் ஒருவரான எஸ். கே. தேவமணி, பிஎஸ்எம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, ஹிண்ட்ராப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் நா. கணேசன் மற்றும் பிகேஆரின் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் ஆகியோர் தமிழில் மே 8 இல் இரவு மணி 8.00 லிருந்து விவாதம் நடத்தவிருக்கின்றனர்.