உத்தம வில்லன் – திரை விமர்சனம்

images (4)மரணத்தைக் கண்ணில் பார்த்துவிட்ட ஒரு நடிகன், சாகாவரம் பெற்ற கலைஞனாக நடிக்கிறான். இந்த முரண்பாட்டில் மையம் கொண்டிருக்கும் உத்தம வில்லன், மரணத்தை எதிர்நோக்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்புகளைப் பற்றிப் பேசுகிறது.

தமிழ் சினிமா கொண்டாடும் சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன் (கமல்ஹாசன்). ஒரு டீன் ஏஜ் பையனின் தந்தையான மனோரஞ்சனுக்கு ரகசியக் காதலியும் உண்டு (ஆண்ட்ரியா). வாழ்க்கையின் உச்சகட்ட வெற்றியைச் சுவைத்துக்கொண் டிருக்கும் தருணத்தில் கொடிய நோய் தாக்க, செய்யத் தவறிய பரிகாரங்கள், கடமைகளை வேகமாக நிறைவேற்ற முடிவுசெய்கிறான். ஒரு கலைஞனாக மக்கள் மனதில் இறவா இடம் பிடிப்பதற்காகத் தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்குநர் மார்க்கதரிசியிடம் (கே. பாலசந்தர்) சென்று ஒரு சினிமா எடுக்கவும் வேண்டுகிறான்.

மனோரஞ்சனின் தனிப்பட்ட வாழ்க்கையும் மார்க்கதரிசியின் இயக்கத்தில் நடிக்கும் சினிமாக் கதையும் அடுத்தடுத்துச் சொல்லப்படுகின்றன. ஒரு நடிகனின் தனிப்பட்ட வாழ்க்கை, புகழும் செல்வமும் தரும் சங்கடங்கள், அவனுக்கு நேரும் பெண் உறவுகள், அதனால் எழும் சிக்கல்கள் ஆகியவை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள சம்பவங்களால் சித்தரிக்கப்படுகின்றன. ஐம்பது வயதுக்கு மேல் ஆன பிறகும் டூயட் பாடி ஆடும் கிளீஷேவை நாயகனின் மகனே விமர்சிக்கும் காட்சியுடன் படம் தொடங்கினாலும் இந்தப் படமும் கிளீஷேக்களில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறது. கதாநாயகனின் கடைசி ஆசையான, உத்தமன் என்ற சினிமாக் கதை நடக்கும் காலம் எட்டாம் நூற்றாண்டு. எல்லாருமே மேடை நாடகம் போலச் சுத்தத் தமிழில் கதைப்பது ஒரு கட்டத்தில் நெளிய வைக்கிறது. அரண்மனை, பழைய கட்டிடங்கள் அனைத்தும் கிராபிக்ஸாகக் கண் முன் இளிக் கின்றன. நாசர், ஞானசம்பந்தம், சண்முக ராஜா செய்யும் சேட்டைகளும் பரிதாபமானவை. தெய்யம் எனும் பாரம்பரியக் கலையையும் அந்தக் கால கட்டத்தையும் விரிவாகச் சொல்வதாக நினைத்துக் கொண்டு பொறுமையைச் சோதிக்கின்றன இந்தக் காட்சிகள்.

நடிப்புத் திறனுக்கு வாய்ப்புள்ள கதையை ஆண்ட்ரியா, கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், பூ பார்வதி அருமை யாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஜெயராமை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. சில தருணங்கள் அபாரமாக அமைந்துள்ளன. கமல் அருகில் உட்கார்ந்து பேசும்போது பார்வதியின் உடல் மொழி அவரை விஸ்வரூபமாகக் காட்டுகிறது. கடிதத்தைப் படிக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். அப்போது கமல் தன் முகத்தில் உள்ள ஒப்பனையைக் கலைக்கிறார். நடிகனின் ஒப்பனைக்குப் பின் உள்ள நிஜ முகம் வெளிப்படும் நேரத்தில் அவன் நிஜ வாழ்க்கையின் ஒரு பகுதியும் வெளிப்படும் தருணம் அழகாக உள்ளது.

கமல் தன் மகனை ஆற்றுப்படுத்தும் காட்சி கலங்க வைக்கிறது. தன் மகனும் தன் முன்னாள் காதலியின் மகளும் சகோதர உணர்வைப் பரிமாறிக்கொள்ளும்போது அந்த இடத்தை விட்டு வெளியேறிக் கண்ணாடிச் சன்னலின் வழியாக அவர்களைப் பார்க்கும்போது கமல் எனும் படைப்பாளி நிமிர்ந்து நிற்கிறார். எம்.எஸ். பாஸ்கர் தன் துயரத்தை வெளிப்படுத்தும் இடமும் தன் தவறை ஒப்புக் கொண்டு குமுறும் இடமும் மனதைத் தொடுகின்றன. கமல் என்னும் நடிகனைப் பற்றிப் புதிதாக என்ன சொல்ல? பெரும் துயரத்தைச் சுமந்த வாழ்வை அடங்கிய தொனியில் சித்தரிக்கிறார். தெய்யம் நடனத்தில் அவரது உழைப்பு பளிச்சிடுகிறது. தன் காதலையும், துக்கத்தையும் கடைசிவரை வெளிப்படுத்த முடியாத கதாபாத்திரத்தில் நுட்பமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவும் கமலும் பகிர்ந்துகொள்ளும் காட்சிகளும் கமலுக்கும் அவரது நெருங்கியவர்களுக்கும் இடையே நிகழும் உணர்ச்சிகரமான தருணங்களும் படத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

பூஜா குமார் அழகாக இருக்கிறார். படத்துக்கு வசீகரம் கூட்டுகிறார். ஆனால் 8-ம் நூற்றாண்டு இளவரசி வேடத்தில் அவரது நடிப்பும் தோற்றமும் மிகவும் அன்னியமாக உள்ளன. கே. பாலசந்தரைப் பயன்படுத்தியிருக்கும் விதம் அந்தச் சாதனையாளருக்குப் பொருத்தமான காணிக்கை. ஜிப்ரானின் இசை நன்றாக அமைந்துள்ளது. குறிப்பாகப் பின்னணி இசை பல இடங்களில் உருக்குகிறது. உத்தம வில்லன் கதையை அல்ல, கதைகளைச் சொல்கிறது. இறப்புக்கும், இருப்புக்கும் இடையேயான மோதலை சொல்ல எத்தனிக்கிறது. மனிதன் இறக்கலாம்; கலைஞன் இறக்க மாட்டான் என்பதுதான் கமல் சொல்லியிருக்கும் செய்தி. ஆனால் கதைக்குள் மற்றொரு கதையாக எடுக்கப்படும் படத்தின் தன்மையும் நீளமும் தான் உத்தம வில்லனுக்கு லேசான வில்லன். அதேசமயம், கிளைமாக்ஸில் பயன்படுத்தப் படும் காட்சி, இந்தப் படத்துடன் அழகாக இணைந்து கொள்கிறது.

கமல் என்னும் நடிகரைத் தாண்டி, கமல் என்னும் எழுத்தாளர் வலுவாக வெளிப்பட்டுள்ளார்.