11வது மலேசியத் திட்டத்தில் 1எம்டிபி-யைக் காணோம்

axmஐந்தாண்டுகளுக்குமுன்  10வது  மலேசியத்  திட்டத்தைத்  தாக்கல்  செய்த  நஜிப்  அப்துல்  ரசாக், கோலாலும்பூர்  அனைத்துலக  நிதி  மாவட்டமும் (இப்போது  துன் அப்துல் ரசாக் எக்ஸேஞ்ச்)  பண்டார்  மலேசியாவும்  நாட்டின்  உருமாற்றத்  திட்டத்துக்கு உதவப்  போகும் முக்கிய  வளர்ச்சித்  திட்டங்கள்  என்றார்.

ஐந்தாண்டுகளுக்குப்  பிறகு,  நஜிப்பால்  உருவாக்கப்பட்டு  இன்று  கடனில்  சிக்கித்  தவிக்கும் 1எம்டிபி பற்றி  11-வது  மலேசியா  திட்டத்தில்  எந்தக்  குறிப்புமில்லை.

“1எம்டிபி விவகாரத்துக்குத்  தீர்வு  காணும்  செயல்திட்டத்துக்காகக்  காத்திருக்கிறோம். 10வது திட்டத்தில்  அது  குறிப்பிடப்பட்டது. 11-வதில்  அடியோடு காணாமல் போய்விட்டது. ஆனால்,  அதனால்  உண்டான பிரச்னைகள்  அப்படியே  இருக்கின்றன”, என  கிளானா  ஜெயா  எம்பி வொங்  சென்  கூறினார்.

அவ்விவகாரத்தைத் தொடாதது  முதலீட்டாளர்களிடம்  எதிர்மறையான  தாக்கத்தை  ஏற்படுத்தும்  என  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  கூறினார்.

“அதனால்  உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முதலீட்டாளர்களின்    நம்பிக்கை  குறையும். நம்  பொருளாதாரத்தை  விரிவுபடுத்தும் கடினமாகும்”, என்று  கோம்பாக்  எம்பியுமான  அஸ்மின்  கூறினார்.