மே 18 இல் சுமந்திரன், சம்பந்தன் எங்கே ஒளித்தார்கள்? தமிழன் என்று சொல்ல தயங்குகின்றார்களா?

sampanthan_and_sumanthiranதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள்.

இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின் மனங்களில் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத வலிகள் நிறைந்த நாளாகவே இருக்கும். இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் கடந்தாலும், குறித்த நாளில் அனைத்து தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் பல அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அஞ்சலி செய்து கொண்டே வந்துள்ளனர்.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்பின்னர் தமிழ்மக்களின் தலைவராக வந்தவராக சொல்லப்படும் திரு சம்பந்தன் அவர்களும், அரசியல் இராஜதந்திரியாக தன்னை வெளிப்படுத்தி வரும் திரு. சுமந்திரன் ஆகியோர்கள் வடகிழக்கில் நடைபெற்ற எந்த அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டு வெறுக்கபட்ட சிங்கக் கொடியை ரணில் அவர்களோடு சேர்ந்து உயர்த்திக் காட்டியபோதும், தந்தை செல்வா காலம் தொட்டு புறக்கணித்து வந்த சிறிலங்கா சுதந்திர தின விழாவில், சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தது அது காலத்தின் தேவை என மழுப்பினார்கள்.

சிங்கள படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் விட்டமையானது இவர்கள் மீது மிகுந்த கோபத்தினையே தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. இப்படியான இவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தருவார்கள் என்றோ, எமது மக்களிள் விடிவிற்காக எப்படி குரல் கொடுப்பாகள் என்றோ நம்பவே முடியாது. கலந்து கொள்ளாமைக்கான காரணங்கள் எதைச் சொன்னாலும்; மக்கள் எனியும் அதனை நம்ப தயாராகவில்லை.

தமிழ் மக்களின் நிகழ்வில் கலந்து கொண்டால் சிங்கள ஆட்சியாளர்களை அல்லது சிங்கள மக்களின் இதயத்தை நோக வைக்கும்  என்று நினைத்து அன்று ஓய்வு எடுத்தார்களோ தெரியவில்லை.

அல்லது சர்வதேச அழுத்தம், இந்தியாவின் அழுத்தம் என்று காரணத்தை சொல்லப்போகின்றார்களோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் என்ன காரணத்தினை சொன்னாலும், தமிழ் மக்களின் முக்கியமான ஒரு நினைவு நாளில் கண்டிப்பாக கலந்து கொள்ளாமையானது பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்துவதோடு கடும் சினத்தினையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தான் தமிழ் இனத்தின் தலைவர்கள் என்று சர்வதேசம் பார்க்கும் போது, அவர்களே தமிழ் மக்களின் நினைவு தினத்தினை புறக்கணிப்பு செய்யும் போது அனைத்துலகத்திற்கு பிழையான ஒரு எண்ணப்பாட்டினை ஏற்படுத்துவதோடு, தமிழ் மக்களோ ஐ. நா நோக்கிய எமக்கான நீதியை வேண்டி கையேந்திக் கொண்டிருக்கும் போது, இப்படியான தலைவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை சிதைத்து, இனப்படுகொலை நடைபெற்றதை மறுதலித்து சிறிலங்கா அரசாங்கமே விசாரணையை மேற்கொண்டு தீர்கட்டும் என்ற நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ என்று எண்ண தோன்றுகின்றது.

சிங்கள் மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என்றும் ஆட்சியாளர்களின் இதையத்தோடு பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டு இறுதியில் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரியவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்களோ என எண்ணத் தோன்றுகின்றது.

தமிழ் மக்களின் மனங்களில் இருந்து நிரந்தரமாக பிரிந்தாலும் பறவாயில்லை, ஆனால் எமது மக்கள் என்ன நோக்கத்திற்காக மாண்டு போனார்களோ அவர்களின் நோக்கத்தை இலட்சியத்தினை, விடுதலைக் கனவை ஏறி மிதித்து தமிழர்களை நிரந்தர அடிமைகள் ஆக்கப்பார்க்கின்றார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கு எந்த தமிழ் மக்களும் இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதோடு, ஜனநாயக வழியில் அவர்களுக்கான தண்டனையை மக்கள் நிச்சயம் கொடுத்து அவர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவார்கள்.

– ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

-http://www.pathivu.com

TAGS: