20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் : ஸ்டாலின்

stalinஆந்திராவில் சுட்டு கொல்லப்பட்ட தமிழர்களின் வழக்கில் இனிமேலாவது தமிழக அரசு தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகனூலில் பதிவு செய்துள்ளார்.

’’ஆந்திரப் பிரதேசத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு நாளுக்கு நாள் குழப்பமடைந்து கொண்டே செல்கிறது. முந்தைய நாள் இரவில் இந்த மரம் வெட்டும் தொழிலாளிகள் சேஷாச்சலம் காட்டில் செம்மரங்களை வெட்டி கட்டைகளை கடத்திச் சென்றதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொலை செய்யப்பட்டவர்கள் சிலரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகள் இந்த தகவலுக்கு முரணாக உள்ளன. இவர்களில் இரண்டு பேர் அன்றைய தின இரவில் பெரும்பாலான நேரங்கள் பயணம் செய்து, கொலை செய்யப்பட்ட இடத்துக்கு, கொலை செய்யப்படுவதற்கு 3 மணி நேரம் முன்பு தான் வந்திருக்கிறார்கள்.

அதேநேரம், மூன்றாவது நபர் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழ்நாடு-ஆந்திர எல்லையை, முந்தைய தினம் மாலை 5.30 மணிக்கே அடைந்திருக்கிறார். இம்மூன்று பேரும் முந்தைய தினம் வனத்துறை அதிகாரிகள் மற்றும், அதிரடிப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் 3 பேரின் சாட்சி கூறியுள்ளனர்.

இந்த சாட்சியங்கள் கொலை செய்யப்பட்ட 3 பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவுகளை உறுதி செய்கின்றன. படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களில் காணப்படும் கொடும் சித்தரவதை காயங்கள், தற்காப்புக்காக சுட்டோம் என்ற ஆந்திரப் காவல்துறையினரின் வாதத்துக்கு முரண்பாடாக இருக்கிறது. எனவே, இனிமேலாவது தமிழக அரசு தம்மைத் தாமே இந்த வழக்கில் ஈடுபடுத்திக்கொண்டு, வழக்கை துரிதப்படுத்தி, உரிய நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என நான் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.’’

-http://www.nakkheeran.in

TAGS: