வித்தியா கொலை விசாரணைக்கு விசேடநீதிமன்றம்! மைத்திரி அறிவிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பினில் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து, அதனூடாகவே கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுமெனவும் அத்துடன் மிக விரைவில் அத்தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, வேம்படி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.

மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னதாக காலை 10 மணியளவில் யாழ்.வருகை தந்த ஜனாதிபதியை, யாழ் பழைய மாநகர சபை வளாகத்தில் வட மாகாண ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றிருந்தனர்.

அதனையடுத்து வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி, அங்கு விஷேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். பின்னர் அவர் வேம்படி மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்திருந்தார்.

-http://www.pathivu.com

TAGS: