இஸ்லாமியர் அல்லாத மெட்ரிகுலேசன் கல்லூரி மாணவிகள் ஏன் அவர்களின் தலையை மறைக்க வேண்டும்?

-ஜீவி காத்தையா, ஜூன் 13, 2015.

Handkissingk4மெல்ல மெல்ல குரங்கைப் பிடிக்கும் முயற்சி இந்நாட்டில் பல்வேறு இடங்களில், குறிப்பாக கல்விக்கூடங்களில், பல்வேறு வகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மே மாத இறுதியில், சிலாங்கூர், பந்திங் மெட்ரிகுலேசன் கல்லூரி அதன் புதிய மாணவர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 25 இஸ்லாமியர் அல்லாத மாணவிகள் தூடோங் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்ததாகவும், பெற்றோர்கள் தெரிவித்த ஆட்சேபத்தின் விளைவாக துணைக் கல்வி அமைச்சர் ப. கமலநாதன் தலையிட்டு அவ்விவகாரத்திற்கு “உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று கூறப்படுகிறது. ஆனால், அது என்ன நடவடிக்கை என்று கூறப்படவில்லை.

 

நோக்கம் என்ன?

 

college matriculation selangorஅந்த அறிமுக நிகழ்ச்சி மெட்ரிகுலேசன் கல்லூரியின் “மீரா மண்டபம் என்றழைக்கப்படும் தொழுகை இல்லம், டேவான் கூலியா கெச்சில், டேவான் அந்தராஸ், டேவான் கூலியா புசார்1, டேவான் கூலியா புசார் 2” ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்த ஐந்து இடங்களில், மீரா மண்டபம் தொழுகை இல்லமாகும். அது இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் இடம். அவ்விடத்தில் கூடும் நபர்கள் இஸ்லாமிய சம்பிரதாயங்களை கடைபிடிக்க வேண்டும். இதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. அங்கு கூடும் பெண்கள் சம்பிரதாயப்படி தலையை, தலைமுடியை, மறைக்கும் துணி, (ஹிஜாப்=தூடோங்= headscarf=தலையை மறைக்கும் துணி) அணிந்திருக்க வேண்டும். இது இஸ்லாமிய பெண்களுக்குரிய கடப்பாடாகும்.

இவ்வாறான பாரம்பரியத்தைக் கடைபிடிக்க வேண்டிய இல்லத்திலும் அந்த மெட்ரிக்குலேசன் கல்லூரி புதிய மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் 25 இஸ்லாமியர் அல்லாத மாணவிகளை கல்லூரி நிருவாகம் சேர்த்திருந்தது. அந்த 25 மாணவிகளில் 15 பேர் இந்தியர்கள்; மற்றவர்கள் சீனர்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லர் என்பது அக்கல்லூரிக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்திருந்தும், ஏன் அவர்களை இஸ்லாமிய பாரம்பரியத்தை கடமை உணர்வுடன் பின்பற்றப்பட வேண்டிய அந்த இல்லத்திற்கு அனுப்பியது?

இஸ்லாமியர் அல்லாத மாணவிகளை இஸ்லாமிய சம்பிரதாயம் கடைபிடிக்க வேண்டிய தொழுகை இல்லத்திற்கு அனுப்பியதோடு, அவர்கள் “ஒரு வாரத்திற்கு அவசியமாக தூடோங்கை அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தாக” செய்தி வெளியாகியுள்ளது. அதன் நோக்கம் எப்படியாவது குரங்கை மெல்ல மெல்ல பிடித்து அவர்களின் கூண்டில் அடைத்து விடலாம் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது!

 

தலையை மட்டுமே மறைக்கச் சொன்னார்களாம்

 

Handkissingk5இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்களை அழைத்து தங்களுக்கு தூடோங் வாங்கி வரும்படி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அம்பலமாகி விட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கம் போல் மூடிமறைக்கும் படலமும் தொடங்கிற்று.

இந்த விவகாரம் கல்வி அமைச்சின் துணைக் கல்வி அமைச்சர் கைமுத்தம் பி. கமலநாதனின் கவனத்திற்கு வந்ததாகவும் அவர் டபார் டபார் என்று செயல்பட்டு அக்கல்லூரியின் இயக்குநர் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தி உண்மையைக் கண்டுபிடித்து விட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், “திடீரென மாணவர்களை மெட்ரிகுலேசன் கல்லூரி தூடோங் அணிய கட்டாயப்படுத்தியதும், அதைக் கல்வி அமைச்சு கண்டு கொள்ளாமல் இருந்ததும் உண்மை இல்லை”, என்று அவர் தெளிவுபடுத்தியதாக செய்தி கூறுகிறது.

இந்த அறிக்கையில் உண்மை இருக்கிறது. தூடோங் இஸ்லாமிய சமயத்துடன் ஒன்றிணைந்த அடையாளமாகும். மலேசிய பள்ளிகள், குறிப்பாக தேசிய பள்ளிகள், இஸ்லாமியமயமாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை ஊரும் உலகமும் அறியும். மலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடு என்று அறிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லாதிருந்தும் அவ்வாறு அறிவித்த முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஆகவே, சம்பந்தப்பட்ட மாணவிகளை  தூடோங் அணியும்படி கல்லூரி கட்டாயப்படுத்தியது “திடீரென” எடுக்கப்பட்ட முடிவாக இருக்காது. இது நீண்ட கால திட்டத்தின் வெளிப்பாடாகும். இது போன்ற விவகாரத்தில் கல்வி அமைச்சும் “கண்டு கொள்ளாமல்” இருந்திருக்காது என்பதை சுங்கை பூலோ ஶ்ரீ பிரசன்னா பள்ளி மற்றும் கோலகுபு பாரு பள்ளி ஆகியவை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கமலநாதன் செயல்பட்ட விதத்தையும் வேகத்தையும் நாடறியும்.

மேலும், துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் வெளிட்டதாக கூறப்படும் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் “மாணவர்கள் தூடோங் அணிய கட்டாயப்படுத்தப்படவில்லை…மாறாக தலையை மறைக்க மட்டுமே அறிவுரை வழங்கப்பட்டது” என்பது அறியப்பட்டதாம்.

இந்தக் கண்டுபிடிப்பின் சாரம் இதுதான்: சம்பந்தப்பட்ட இஸ்லாமியர் அல்லாத அந்த மாணவிகள் அந்த தொழுகை இல்லத்தில் இருக்கையில் இஸ்லாமிய சம்பிரதாயப்படி நடந்துகொள்ள வேண்டும். இது உத்தரவா அல்லது அறிவுறுத்தலா என்பது வேறு விசயம். மேலிடத்திலிருந்து விடுக்கப்படும் ஆலோசனை, அறிவுறுத்தல், கண்சாடை காட்டுதல் போன்றவை அதிகாரத்தினரின் உத்தரவுக்குச் சமமானது. அந்த 25 மாணவிகளும் அவர்களுடைய தலைமை மறைத்துக்கொள்ள வேண்டும். அதாவது அந்த மாணவிகள் இஸ்லாமிய சம்பிரதாயப்படி நடந்து கொள்ள வேண்டும்.  அதுதான் தேவைப்பட்டது. ஆது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

 

தனிப்பட்ட விசாரணை

 

தலையை எப்படி மறைப்பது? கைகளால் மூடிக்கொள்வதா? ஹெல்மெட் போட்டுக்கொள்வதா? அல்லது, ஆதாம் மற்றும் ஏவாள் தங்களுடைய பிறப்புறுப்புகளை மறைக்க இலைகளை பயன்படுத்தினார்களாம். அப்படி மறைத்துக்கொள்வதா? இப்படி கேட்பதெல்லாம் மடத்தனம். தலையை துணியால்தான் மறைத்துக்கொள்ள வேண்டும் என்று அக்கல்லூரியின் இயக்குநர் மற்றும் கமலநாதன் போன்றோர் பதில் கூறுவர் என்று எதிர்பார்க்கலாம். தூடோங் என்ற தலைமறைப்பும் துணியால் உருவாக்கப்பட்டதுதானே! பிறகு ஏன் தூடோங் அணியுமாறு கட்டாயப்படுத்தப்படவில்லை என்ற விளக்கம்?

Tudongதூடோங் அணிவது இஸ்லாத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர் அல்லாத அந்த 25 மாணவிகளையும் தூடோங் அணிய வேண்டிய, இப்போது மாற்றாக தலையை மறைக்க வேண்டிய கட்டாயமான, சூழ்நிலைக்குத் தள்ளி விட்ட கல்லூரியின் திட்டமிட்ட செயல் சம்பந்தப்பட்ட அந்த மாணவிகளின் பெற்றோர்கள் மேற்கொண்ட எதிர்நடவடிக்கைகளால் அம்பலமாகிவிட்டது. அதிலிருந்து தப்பிக்க தயாரிக்கப்பட்டதுதான் இந்த “தலையை மறைக்க மட்டுமே அறிவுரை வழங்கப்பட்டது” என்ற நாடகம்!

இச்சம்பவம் ஒரு சமயத்தின் சம்பிரதாயத்தை இன்னொரு சமயத்தினர், அதுவும் பள்ளி மாணவிகள், மீது திணிக்க மேற்கொண்ட ஒரு சதித் திட்டம் மட்டுமல்ல என்பதோடு, இதில் குண்டர்தனமும் இருப்பதை காண முடிகிறது.

சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் 25 மாணவிகளில், “ஏறக்குறைய 23 மாணவிகளிடம் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் கட்டாயத்தின் பேரில் தூடோங் அணியவில்லை. மாறாக தலையை மறைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது என தெரிவித்ததோடு, அதற்குச் சான்றாக மாணவிகள் தாங்கள் எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தப்படாததை எழுதியும் தந்துள்ளனர்”, என்று வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்படுகிறது.

 

பதில் கூற வேண்டும்

 

ஏன் மாணவிகளிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை? ஏன் மாணவிகளிடமிருந்து சான்றிதழ்? எஞ்சிய “ஏறக்குறைய” இரு மாணவிகள் என்ன சொன்னார்கள்?

செய்யக் கூடாததை செய்து விட்டு, அகப்பட்டுக் கொண்டதும் அதிலிருந்து தப்பிக்க, அது செய்தது சரி என்று நிரூபிக்க பாதிக்கப்பட்ட அதன் மாணவிகளிடமிருந்தே சான்றிதழ் பெறும் ஒரு கல்லூரி. அதற்குத் துணையாக ஒரு துணை கல்வி அமைச்சர். இது ஒன்றும் புதிதல்ல. இது இந்நாட்டில் வளர்ந்து வரும் பாரம்பரியம்!

இஸ்லாமியர் அல்லாத மாணவிகளை இஸ்லாமியர் தொழுகை செய்யும் இடத்திற்கு அனுப்பியது ஏன் என்று அக்கல்லூரி விளக்கம் அளிக்க வேண்டும்.

இஸ்லாமியர் அல்லாத மாணவிகள் அவர்களின் தலையை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு/அறிவுரை அளிக்க இக்கல்லூரிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இக்கல்லூரிக்கு மாணவர்களை மத மாற்றத்திற்கு தயார் படுத்தும் பணியும் உண்டா?

இஸ்லாமியர் அல்லாத அந்த மாணவிகளின் சமய உணர்வுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கல்லூரியின் பதில் என்ன?

இஸ்லாமியர் அல்லாத அந்த மாணவிகளை இஸ்லாமியர் தொழுகை இடத்திற்கு அனுப்பி அவர்களின் சமய உணர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோடு அம்மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கிடையிலான அமைதி மற்றும் நல்லிணக்கம் போன்ற பெரும் சொத்துகளுக்கு பாதகத்தை விளைவிக்கும் செயலை மேற்கொண்ட அக்கல்லூரிக்கு எதிராக கல்வி அமைச்சு எடுக்கப் போகும் நடவடிக்கை  என்ன?

இது போன்ற சம்பவங்கள் கல்விக்கூடங்களில் இனிமேலும் ஏற்படாமல் இருக்க அரசாங்கத்தின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் என்ன?

இவற்றுக்கான பதிலை எதிர்பார்க்கும் உரிமை மக்களுக்கு உண்டு.

 

தாய்மார்கள் கனவிலும் அனுமதிக்கக் கூடாது

 

Sarong1இப்போதெல்லாம் சம்பந்தமில்லாதவர்கள் தங்களுடைய சமய சம்பிரதாயங்களையும் கலாச்சாரங்களையும் மற்றவர்கள் மீது திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கல்விக்கூடங்களில் இது போன்ற நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இது போன்றவற்றால் நாட்டின் அமைதியும் மக்களுக்கிடையிலான நல்லிணக்கமும் பாதிக்கப்படுவதோடுHandkissingk2 மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்ட தனிநபர்கள், குறிப்பாக பெண்கள், பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

பெண்களுக்கு, குறிப்பாக இந்திய பெண்களுக்கு, அவர்களின் தலைமுடி அவர்களுடைய அழகின் உச்சம். அதற்கு எந்த விதமான மாசும் ஏற்படாமல் இருப்பதைப் பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள், தங்களுடைய கனவில்கூட அனுமதிக்கக் கூடாது. இல்லையேல், முடியிலிருந்து முட்டி வரையில், ஏன், கணுக்கால் வரையில் கூட, மறைக்க வேண்டும் என்ற கலாச்சாரம் பிரகடனம் செய்யப்படலாம்.

இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் கூர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கைமுத்தம் போன்ற துணை அமைச்சர்களை நம்பவே கூடாது. இவர்களால்தான் ரோஷீத்தா போன்றவர்கள் இன, சமய விஷத்தைக் கக்குகின்றனர்.

 

——————————————————————————————————————————————————————————————–

 

நமது நாட்டின் பள்ளிகளில் நடக்கும் சம்பவங்கள் பற்றி செம்பருத்தி மாத இதழில் வெளியிடப்பட்ட சில கருத்துகள் இங்கு தரப்பட்டுள்ளன.

 

Keling memang dasar pariah sejak sejarah lagi   

 

தேசிய தொடக்கப்பள்ளிகளிலும், இடைநிலைப்பள்ளிகளிலும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. ஆகவே, சுங்கை பூலோ குளியலறை ஒன்றும் புதியதல்ல.

 

அவ்வாறே, இந்திய மாணவர்களை இழிவுபடுத்திய பள்ளி ஆசிரியர்களைத் தற்காப்பதற்காக விரைந்தோடும் துணை அமைச்சர்களின் செயல்பாடுகளும் புதிதல்ல.

 

சுங்கை பூலோ ஸ்ரீ பிரஸ்தானா பள்ளி குளியலறை விவகாரத்தில் அப்பள்ளியின் விடுப்பில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

 

இன்றுயச் செய்தியின்படி, கடந்த திங்கள்கிழமை ஷா அலாம் இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்திய, சீன மாணவர்களிடம் “பாலே இந்தியா, பாலே சீனா” என்று கூறினார். அது குறித்து தெரிந்து கொள்வதற்கு அப்பள்ளிக்குச் சென்ற போது தலைமை ஆசிரியர் விடுப்பில் சென்று விட்டாராம்!

 

இண்டர்லோக் விவகாரத்தில் கோலகுபு பாரு தேசியப்பள்ளியின் இந்தியர் மாணவர்கள் இண்டர்லோக் நாவலை பள்ளியிடம் திருப்பி ஒப்படைக்கச் சென்று போது அவர்களை அப்பள்ளியின் ஒழுங்குமுறை ஆசிரியர் திட்டி இந்தியர்களின் வரலாறு என்ன என்று இப்படிக் கூறினாராம்: ,  “Kenapa orang India garang? India memang suka rosakkan nama sekolah. Keling memang dasar pariah sejak sejarah lagi (Why are the Indians so fierce? Indians really like to tarnish the school’s name. The keling have been pariahs since historical times).”

 

இந்த விவகாரத்தில் தலையிட்ட இப்பகுதியில் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி. கமலநாதன் விரைந்து செயல்பட்டு விவகாரத்தைத் தீர்த்து விட்டார், தற்போது சுங்கை பூலோ விவகாரத்தைத் தீர்த்து வைத்தது போல்.

 

இந்த பிராமணர் ஆசிரியர் இந்தியர்களை இழிவுபடுத்தியதின் வழி இந்நாட்டிற்கு களங்களத்தை உலகளவில் ஏற்படுத்தி வருவதைப் பற்றி எண்ணுவதில்லை, எண்ணத் தேவையில்லை, ஏனென்றால் இந்த ஆசிரியர் வெறும் அம்புதான். அதனை எய்தவர், எய்து கொண்டிருப்பவர் நாட்டின் பிரதமர்.

 

தேசியப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களை இழிவுபடுத்துவது தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. இந்தியர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் போது இந்திய துணை அமைச்சர்களில் யாராவது ஒருவர் ஓடிப் போய் பள்ளியில் யாரையாவது பார்த்து வீட்டு, விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டது என்று அறிக்கை விடுவார்.

 

சுங்கை பூலோ ஸ்ரீ பிரஸ்தானா குளியலரை விவகாரத்தை ஓடிப் போய் தீர்த்து விட்டதாக இன்றைய துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன் கூறியது போல் 2009 ஆண்டில் தெலுக் பங்ளிமா காராங் இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்களிடம் இந்தியர்களின் பின்னணி என்ன என்று அப்பள்ளியில் வரலாறு போதிக்கும் ஆசிரியை ரோஷீத்தா மிகத் தீவிரமாக போதித்தார்.

 

இப்போதனையைத் தாங்கிக்கொள்ள இயலாத இந்தியர் மாணவர்கள் போலீஸ் புகார் செய்தனர். மக்கள் கொதித்தெழுந்தனர். (இந்தியர்கள் கொதித்தெழுவதை அலுமியப் பாத்திரத்திரம் வேமாகச் சூடேறி அதே வேகத்தில் அச்சூடு தணிந்து விடுவதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.) அப்பள்ளியை முற்றுகையிட்டனர். ஓடி வந்தார் அன்றைய துணை அமைச்சர் டி. முருகையா. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுப்பில் சென்று விட்டார். முருகையா பேசினாராம். பிரச்னை தீர்ந்து விட்டது என்று தெரிவித்தார்.

 

இந்த ரோஷீத்த விவகாரத்திலும் அவர் அம்புதான். அதை எய்தவர் யார் என்று வினவி, அன்று அந்த அம்பை எய்வதவர் அன்றைய பிரதமர் அப்துல்லா படாவி என்று செம்பருத்தி இதழில் கூறப்பட்டிருந்தது. இன்றைய சுங்கை பூலோ ஸ்ரீ பிரஸ்தானா விவகாரத்திலும் அம்பை எய்தவர் இன்றைய பிரதமர் நஜிப். ஏன்? பிரதமர்துறையின் ஒரு பிரிவான பீரோ டாட்டா நெகாரா (பிடிஎன்) என்ற அமைப்புதானே அரசு ஊழியர்களுக்கும், ஆசியர்களுக்கும் இனவாதத்தையும், மலாய்க்காரர்களின் மேலாண்மை சிந்தாந்தத்தையும்  ஊட்டி வளர்த்து வருகிறது.

 

இதனைச் சுட்டிக் காட்டி செம்பருத்தி செப்டெம்பர், 2009 .இதழில் … என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை இங்கு மீண்டும் பதிவு செய்கிறோம். இதன் நோக்கம் இது போன்ற விவகாரங்கள் எவ்வாறு கையாளப்பட்டு வருகின்றன என்பதை நினைவுறுத்துவதாகும்.

 

 

“ரோஷீத்தாவின் இனவாத நடத்தைக்கு யார் பொறுப்பு – ரோஷீத்தாவா? அப்துல்லாவா?”

 

கோலலங்காட் தெலுக் பங்லிமா காராங் இடைநிலைப்பள்ளியில் வரலாறு போதிக்கும் ஆசிரியை ரோஷித்தா அவரிடம் வரலாறு பயிலும் பத்து இந்திய மலேசிய மாணவர்களிடம் கடுமையாகவும் வன்மையாகவும் நடந்து கொண்டதோடு இந்திய இனத்தை கொச்சைப் படுத்தி பேசியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களில் இருவர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

 

படிவம் நான்கு மற்றும் படிவம் ஐந்து மாணவர்களான ச. தனசேகரன் மற்றும் து. வினோத் ஆகிய அவ்விருமாணவர்களும் ஆகஸ்ட் முதலாம் நாள் தெலுக் பங்லீமா காராங் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்த புகாரில் அவர்களது ஆசிரியை ரோஷித்தா பயன்படுத்திய இனப் பகைமையைத் தூண்டும் வார்த்தைகளை குறிப்பிட்டள்ளனர். அத்துடன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையையும் குறிப்பிட்டுள்ளனர்.

 

அவர்களது புகாரில் ஆசிரியை ரோஷித்தா அம்மாணவர்களிடம் இந்தியர்களை:

  • “கிளிங் பறையா”,
  • “நீக்ரோ”,
  • “கருங்குரங்கு”,
  • “இந்திய இனத்தினர் நாயின் சந்ததியினர்”,
  • “இந்தியர்கள் மடையர்கள்”,
  • “வேலைநிறுத்தம் செய்ய விரும்புகிறவர்கள்”,
  • “இண்ட்ராப்பினர்”,
  • “எப்போதும் திருடுகிறவர்கள்”,
  • “சம்செங்கள்”,
  • “இந்தியர்கள் விபசாரிகள்”.
  • “விபசாரிகளின் பிள்ளைகள் இப்படித்தான் செய்வார்கள்”,
  • “இளைஞர்களுக்கு விறைகள் கிடையாது”,
  • “உங்களுக்கு எப்போதும் மாதவிடாய்”.

 

இந்தியர்களை கேவலப்படுத்தும் மேற்கூறப்பட்டுள்ள வார்த்தைகளை ஒரு தடவையல்ல பல தடவைகள் அந்த ஆசிரியை கூறியிருப்பதாக மாணவர்கள் இருவரும் தங்களின் போலீஸ் புகாரில் கூறியுள்ளனர்.

 

வரலாறு போதிக்கும் ரோஷித்தாவின் இந்தியர்களைப் பற்றிய தொடர் வர்ணனைகளைக் கேட்டு வந்த இந்திய மலேசிய மாணவர்கள் அவ்வாறு சொல்லக் கூடாது என்று கூறும் போது, அப்படி சொல்லக் கூடாது என்றால் எழுதிக் காட்டுகிறேன் என்று கரும்பலகையில் எழுதிக்காட்டியுள்ளார் அந்த ஆசிரியை.

 

மேலும், ஆசிரியை ரோஷித்தா இந்திய மாணவர்களை அடித்து காயப்படுத்தியுள்ளதோடு 10 தடவைகள் புஷ்டி செய்யும் தண்டனையும் கொடுத்துள்ளார். 10 தடவைகள் செய்ய முடியாத போது அம்மாணவர்களின் இடுப்புப் பகுதியில் ஏறி மிதித்துள்ளார்.

 

மேற்கூறப்பட்டுள்ளவை எல்லாம் ஜூலை மாதம் 17 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடந்ததாக போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ளன.

 

இதன் பின்னர், இன்னும் பல மாணவர்கள் ஆசிரியை ரோஷித்தாவைப் பற்றி பல்வேறு குறைகளைக் கூறியுள்ளனர். ஆசிரியர் தினத்தன்று அவருக்கு வாழ்த்து கூறாததும் பரிசுகள் எதையும் வழங்காமல் போனதும் அவருக்கு சினத்தை உண்டாக்கியது என்று மாணவர்கள் கூறினார்கள்.

 

ரோஷித்தாவிடம் வரலாறு பயிலும் இந்திய மலேசிய மாணவர்களின் பொறுமையைச் சோதிக்கப் போகிறேன் என்று கூறி இவ்வாறானச் சொற்களை அள்ளிவீசி இருக்கிறார்.

 

ரோஷித்தா சோதித்தது இந்திய மலேசிய மாணவர்களின் பொறுமையை மட்டுமல்ல. அவர் இந்நாட்டு இந்திய மலேசியர்கள் அனைவரின் பொறுமையையும் சோதித்து விட்டார்.

 

குட்டக்குட்ட குனிய மறுத்து விட்ட து. வினோத் மற்றும் ச. தனசேகரன் ஆகிய இரு மாணவர்கள் செய்த போலீஸ் புகாரின் வழி ரோஷித்தா நடத்திய “பொறுமைச் சோதனை” இப்போது அம்பலத்திற்கு வந்து விட்டது.

 

இந்தியர்களின் எதிர்ப்பு

 

வினோத், வயது 17, தனசேகரன், வயது 15, ஆகிய இருவரும் ரோஷித்தா மீது செய்த போலீஸ் புகார் நாளிதழ்கள், மின் ஊடகங்கள் மற்றும் எஸெஎம்எஸ் வழியாகப் பரவி நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

சம்பந்தப்பட்ட மாணவர்கள் போலீசில் புகார் செய்வதற்கு முன்பே இந்த ஆசிரியையின் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் குறித்து பள்ளியின் முதல்வரிடம் புகார் கடிதம் கொடுத்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால், இன்றுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

போலீசில் ரோஷித்தாவிற்கு எதிராகப் புகார் செய்யப்பட்ட அடுத்த நாளே (ஆகஸ்ட் 2) பெற்றோர்களில் சிலர் பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர். தலைமையாசிரியர் இல்லாததால், துணைத் தலைமையாசிரியரிடம் இனப்பாகுபாட்டை தூண்டிவிடும் ரோஷித்தாவின் நடத்தை பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று கூறினர்.

 

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 11.00 மணியளவில் 1000க்கு மேற்பட்ட பெற்றோர்களும் பல அமைப்புகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும் அப்பள்ளியின்முன் திரண்டு இந்திய இனத்தை இழிவு படுத்திய ஆசிரியை ரோஷித்தாவை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

 

இந்த எதிர்ப்பு பேரணியில் அரசியல் கட்சி பேதமின்றி மஇகா, இண்ட்ராப், கெஅடிலான், ஜசெக ஆகியவற்றுடன் இதர அரசுசார்பற்ற அமைப்புகளும் ஒரே மக்கள் சக்தியாக திரண்டு நின்றன.

 

பள்ளியின் தலைமையாசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியை ரோஷித்தா ஆகியோர் விடுமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டதால், பள்ளியின் துணைத் தலைமையாசிரியருடன் பேச்சுகள் நடத்தப்பட்டன.

 

இப்பேச்சுவார்த்தையில் இப்பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினர் இ. முனுசாமி, மலேசிய பொது அமைப்பின் பொதுச்செயலாளர் ஜி. குணராஜ், மஇகா தொகுதித் தலைவர் சு. பத்துமலை, மஇகா தேசிய இளைஞர் கல்விக்குழு தலைவர் சரவணன் மற்றும் சிலர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

 

நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு கோரிக்கைகளும் ஒரு எச்சரிக்கையும் முன்வைக்கப்பட்டன.

 

  • ரோஷீத்தா சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
  • ரோஷீத்தா உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் (இப்போது பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.)

 

குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாவட்ட கல்வி இலாகா முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது.

 

ஆறப்போட்டு ஏமாற்றும் திட்டமா?

தெலுக் பங்லீமா காராங் பள்ளியின் முன் திரண்ட மக்கள் சக்தி இதுவரையில் எதுவுமே சாதிக்க இயலாத இரண்டு துணையமைச்சர்களின் கவனத்தை மட்டுமே ஈற்றுள்ளது.

 

என் டிவி 7 விடம் கருத்து தெரிவித்த துணைக் கல்வி அமைச்சர் வீ கா சியோங் ஆசிரியர்கள் மாணவர்களிடையே இன ஒற்றுமையை வளர்க்க வேண்டுமேயன்றி, “இது போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவதை அமைச்சு கடுமையாகக் கருதுகிறது”, என்றார்.

 

தகாத வார்த்தைகளால் மாணவர்கள் திட்டப்பட்டது நிரூபிக்கப்பட்டால், “பள்ளி ஆசிரியை நீக்கம் செய்யப்படலாம்” என்றும் அவர் கூறினார்.

 

விரைவாக நகரும் துணையமைச்சர் தோ. முருகையா நேரடியாக அப்பள்ளிக்குச் சென்று பெற்றோர்களையும் மாணவர்களையும் சந்தித்துப் பேசினார்.

 

சம்பந்தப்பட்ட ஆசிரியை மன்னிப்பு கேட்பதன்வழி இப்பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என முருகையா தெரிவித்த கருத்தை பெற்றோர்கள் நிராகரித்து விட்டனர்.

 

இந்த ஆசிரியையின் நடத்தையை விவரித்த பெற்றோர்கள் இவர் வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டாலும் அங்கும் இப்பிரச்னை எழும். எனவே, இந்த ஆசிரியை பணிநீக்கம் செய்யப்படுவதே சரியான முடிவாக இருக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினர்.

 

இது குறித்து மேலும் ஆய்வு செய்து கல்வி அமைச்சருக்கு அறிக்கை வழி தெரிவித்து முடிவு எடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கூறி முருகையா சென்று விட்டார்.

 

இதற்கிடையில், பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் இனத்திற்கும் நாட்டின் அமைதிக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வரலாற்றுப் பாட ஆசிரியை ரோஷீத்தாவை அவரின் பாதுகாப்பைக் கருதி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வசதியானப் பள்ளிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்!

 

இவ்வாசிரியர் பின்னர் ஆலோசனை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றப்படுவார் என்று கல்வி அமைச்சு அறிவித்திருக்கிறது.

 

கல்வி அமைச்சின் இச்செயலை மஇகாவின் தலைவர் கடுமையாகக் கண்டித்துள்ளார். “அந்த ஆசிரியரை வேறொரு பள்ளிக்கு மாற்றுவது என்ற கல்வி அமைச்சின் நடவடிக்கையானது அவரின் அந்நடவடிக்கையை (இழிவுப்படுத்துவதை) பாராட்டுவதற்கு சமமாகும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். (தமிழ்நேசன் 14.8.2008)

 

“மாணவர்களை இழிவுபடுத்திய அந்த ஆசிரியருக்கு சிறிய தண்டனை கொடுப்பதை மஇகாவும், இந்நாட்டிலுள்ள இந்திய சமூகமும் ஒருபோதும் ஏற்றுக்  கொள்ளாது”, என்றுரைத்தார் சாமிவேலு. இவ்விவகாரத்தில் இந்திய மக்களின் அதிர்ப்தியை சுட்டிக்காட்டி பிரதமர் படாவிக்கு கடிதம் எழுதப் போவதாகவும் சாமிவேலு கூறினார். மஇகாவின் தேசிய இளைஞர் பகுதியும் கல்வி அமைச்சர் ஹிசாமுடினுக்கு ஒரு மகஜர் அனுப்பப் போவதாக அதன் தலைவர் கூறியுள்ளார்.

 

இந்த ஆசிரியை ரோஷீத்தா உருவாக்கியுள்ள இனவாதப் பிரச்னைக்கு பதில் கூற வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி அமைச்சர் ஹிசாமுடினுடையதாகும். இன்றுவரையில் பேசாமடந்தையாக இருந்து வருகிறார். இன்னும் சில நாள்களில் இந்தியர்கள் இப்பிரச்னையை மறந்து விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறார் என்று கூறலாம்.

 

ஓர் இந்திய ஆசிரியர், மலாய் மாணவர்களை ரோஷீத்தா இந்திய மாணவர்களை இழிவு படுத்தியது போல் இழிவு படுத்தியிருந்தால், ஹிசாமுடினின் குரலை உலகமே கேட்டிருக்கும். பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் அதனை ஓர் ஆயுதமாக்கியிருப்பார். இப்போது, ஹிசாமுடின் எங்கே?

 

இனவாதம்தான் அரசின் கொள்கை 

 

இனவாதத்தை மாணவர்களுக்கு ஊட்டுவதுதான் அரசின் அடிப்படை கொள்கை. தேசியப்பள்ளி என்ற ஒன்று உருவாக்கப்பட்டதே இனவாதத்தை வளர்ப்பதற்காகத்தான். அரசில் உள்ள ஓரு சிலருக்கு அந்த எண்ணம் இருந்திருக்காது. ஆனால், பெரும்பானமையோரின் இலட்சியம் அதுதான்.

 

மலாயா மலாய்க்காரர்களுக்கே என்ற முழக்கம் துங்கு அப்துல் ரஹ்மான் காலத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. காலப்போக்கில் இந்த கோரிக்கை வலுவற்று போய் விடும் என்று அம்னோபுத்ராக்கள் கருதுவதால், அக்கோரிக்கை என்றும் நிலைத்திருக்கவும் அதனை அடைவதற்கும் இளம் பிஞ்சுகளை அவர்களின் பள்ளி நாள்களிலிருந்தே தயார் செய்ய வேண்டும். அப்பணியின் ஓர் அங்கம்தான் ரோஷீத்தா.

 

நாடு முழுவதிலுமுள்ள தேசியப்பள்ளிகளில் இந்த இனவாதப் பயிற்சி பல்வேறு உருவங்களில் தோன்றுகிறது. தெலுக் பங்லீமா காராங் பள்ளியில்தான் இது முதல் முறையாகத் தோன்றியிருக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். பொட்டு வைக்கக் கூடாது, திருநீறு பூசியிருக்கக் கூடாது, குறிப்பிட்ட உணவுகள் கொண்டுவரக் கூடாது, குத்து விளக்கு ஏற்றக் கூடாது: இப்படி பல்வேறு பாகுபாடுகள். இது வெளிப்படையாக நடப்பவை.

 

அன்றாடம் நடக்கும் இனவாத வசைபாடுகள் எண்ணற்றவை. அவற்றில் சிலதான் ரோஷித்தா பாடியவை.

 

இவற்றுக்கெல்லாம் மேலாக, பாடப்புத்தகங்களில் திணிக்கப்பட்டிருக்கும் இனவாத போதனைகள். இவற்றை தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி புத்தகங்களில் மட்டுமல்ல, பல்கலைக்கழக புத்தகங்களிலும் காணலாம்.. 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான “இன உறவு” என்ற வழிகாட்டி நூல் இன உறவை வளர்க்கும் நூல் அல்ல, அது இன உறவை அழிக்கும் நூல் என்று நாடாளுமன்றத்தில் கடுமையாக கண்டனம் செய்யப்பட்டு இறுதியில் அரசாங்கம் அந்நூலை திரும்பப் பெற்றுக் கொண்டது.

 

பள்ளி பாடப் புத்தகங்களில் இனவாதம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் போதிக்கப்படுகிறது. முன்னாள் கிளானா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லோ செங் கோ சிலவற்றை பட்டியலிட்டுள்ளார்.

 

மாணவர்களுக்கான வரலாற்று பாடப் புத்தகங்களில் “மலாய்க்காரர்களின் மேலான்மை” பற்றி கூறப்படும் அதே வேளையில் மற்ற இனங்கள் தரக்குறைவாகக் காட்டப்படுகின்றன. நாடு மூவினங்களின் கூட்டு முயற்சியில் சுதந்திரமடைந்தது என்று குறிப்பிடும் வேளையில் இந்நாடு மலாய்க்காரர்களுடையது, அது அவர்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை லோ சுட்டிக் காட்டியுள்ளார். (The Sun 7.8.2008)

 

இன்னும் விஷமத்தனமானது: தேசிய தொடக்கப்பள்ளிகள் மட்டுமே அனைத்து இனங்களையும் ஒன்றுபடுத்த முடியும் என்று வரலாற்றுப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாகும். அப்படியென்றால், சீன, தமிழ்ப்பள்ளிகள் ஒற்றுமையை உருவாக்க முடியாது என்பது போதனை. இது உண்மையல்ல என்றார் லோ. ஏற்றுக்கொள்ள முடியாத, உண்மையற்ற பல விசயங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் இருக்கின்றன.

 

இவை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக லோ செங் கோ தெரிவித்திருக்கிறார். மறு ஆய்வு செய்யப்பட வேண்டியவற்றை அரசியலாக்க வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டிருப்பதாக லோ குறிப்பிட்டுள்ளார்.

 

தலையை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கப் பார்க்கிறோம்

 

மலாய் சமுதாயத்தில் உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் உன்னத வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்வதற்காக சாதாரண மலாய்க்காரர்களை இதர இனங்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் இனவாதக் கொள்கையை திட்டமிட்டு அமல்படுத்திக் கொண்டிருக்கிரார்கள். இந்த இனவாதிகள் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்றுதான் ரோஷீத்தா. இவ்வாறு ஏராளமானோர் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் அகப்பட்டுக் கொள்ளும் போது பலிகடாவாக்கப்படுகின்றனர். சிலர் தப்பித்துக் கொள்கின்றனர். அப்படி தப்பித் கொண்டவர்களில் ரோஷீத்தாவும் ஒருவர். அவர் தப்பித்து விட்டார்.

 

மேலிடத்தில் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படும் இனவாதக் கொள்கையால் நாம் ரோஷித்தா போன்றவர்களைச் சாடுகிறோம்; அவர்களுக்கு எதிராக மறியல் செய்கிறோம்; அவர்களைத் தண்டிக்கச் சொல்கிறோம்.

 

ரோஷீத்தா போன்றவர்களுக்கு எதிராக நமது தலைவர்கள் விடுக்கும் கண்டனங்களையும் வீராவேச எச்சரிக்களையும் கண்டு ஆண்டவரே ஆடிவிடுவார். அம்பை எய்தவணை விட்டுவிட்டு அம்புவிடம் வீரம் காட்டுகிறோம்.

 

ரோஷீத்தா வெறும் அம்புதான். அம்மாதிரி பல அம்புகள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

 

தெலுக் பங்லீமா காராங்கிற்கு ஓடிவந்த தோ. முருகையா, ரோஷீத்தாவிற்கு ஏதேனும் செய்து அங்குள்ள இந்தியர்களின் கோபத்தைத் தணிக்க வேண்டும். இல்லையேல், வாக்குகள் போய் விடும் என்று மேலிடத்தில் முறையிட்டுக் கொண்டிருப்பார்.

 

இங்கு, மஇகா தலைவர் ச. சாமிவேலு கூறியிருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். “இது போன்ற ஒழுக்கமில்லாத ஆசிரியர்களின் செயலினால் தேசிய முன்னணிக்கு கெட்ட பெயரே ஏற்படும் என்பதோடு, இதனால் தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் ஆதரவு குறையக்கூடும்”, என்று அம்பான ரோஷீத்தா போன்றவர்களை தேசிய முன்னணியின் தோல்விக்கு காரணமாக்குகிறார் மஇகா தலைவர். இனவாதக் கொள்கையை உருவாக்கி, புத்தகமாக்கி, ஆசிரியர்களைப் பயிற்றுவித்து, பள்ளிகளுக்கு அனுப்பி, இனவாதத்தை அமலாக்க வைக்கும் அப்துல்லாவையும் ஹிசாமுடினையும் ஏன் இனவாத அம்புகளை எய்து கொண்டிருக்கிறீர்கள் யாரும் கேட்க முன்வருவதில்லை.

 

பெரும் தலைவரான சாமிவேலு பொடியன் ஹிசாமுடினிடம், “Stop it, boy”, என்று கூற வேண்டும்! ரோஷீத்தா போன்றவர்களை அவர் ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது.

 

நாம் எதிர்க்க வேண்டியது, மறியல் செய்ய வேண்டியது, தோற்கடிக்க வேண்டியது இனவாதக் கொள்கைகளை உருவாக்கி அவற்றை செயல்படுத்தும் அப்துல்லாக்கள், ஹிசாமுடின்கள் போன்றவர்கள்.

 

வெற்றி பெற வேண்டுமானால் தலையைப் பிடிக்க வேண்டும், வாலையல்ல.