தீபாவளி விடுமுறையை மாற்றுவதா? இந்து சங்கம் கண்டனம்

deepதிரெங்கானு  கல்வி  அமைச்சு, நோன்புப்  பெருநாள் விடுமுறை  நீட்டிப்பதற்குத்  தீபாவளி  விடுமுறையைப்  பயன்படுத்திக்  கொண்டிருப்பதற்கு  மலேசிய  இந்து  சங்கம்  கண்டனம்  தெரிவித்துள்ளது.

மற்றவர்களின்  உணர்வுகளுக்கு  மதிப்பளிக்காத  போக்கு  வளர்ந்து  வருவதற்கு  திரெங்கானு  கல்வித்  துறையின்  சுற்றறிக்கை  ஓர்  எடுத்துக்காட்டு  என  இந்து  சங்கத்  தலைவர்  ஆர்.எஸ், மோகன் ஷான்   கூறினார்.

“எப்படிப்பட்ட  எதிர்காலத்தை  நோக்கிச்  சென்று  கொண்டிருக்கிறோம்? ‘மலேசியா  உண்மையிலேயே  ஆசியா’  என்பது  சுற்றுலாவை விளம்பரப்படுத்துவதற்காக  சொல்லப்படும் வெற்று  வார்த்தைகள்தானா? பல  இனங்களும்  சமயங்களும்  அமைதியுடனும்  இணக்கத்துடனும்  ஒன்றிணைந்து  வாழும்  நாடு  என்ற  நிலை  இப்போது  இல்லாமல்  போய்விட்டதா?”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

அந்தச்  சுற்றறிக்கை  1மலேசிய  உணர்வுக்கும்  எதிரானது  என  மோகன்  கூறினார்.

“தீபாவளி  இந்துக்களுக்கு  மட்டுமல்ல.  அது  பல்லினக்  கொண்டாட்டம்  என்பதை  அத்துறை  அறிந்திருக்க  வேண்டும்.

“சுதந்திரம்  பெற்றதிலிருந்து  எல்லா இனங்களும்  ஹரி  ராயா,  சீனப் புத்தாண்டு,  கிறிஸ்மஸ்,  தீபாவளி  போன்ற  முக்கிய  பண்டிகைகளைச்  சேர்ந்தே  கொண்டாடி  வந்துள்ளன.

“அவ்விழாக்களின்போது  திறந்த  இல்ல உபசரிப்பு  வைப்பது  மலேசியப்  பண்பாட்டின்  ஒரு  பகுதியாகும்”, என  மோகன்  ஷான்  அந்த  அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தார்.