புதிய இஸ்லாமியக் கட்சி உண்மையிலேயே முற்போக்கான கட்சியாக இருத்தல் வேண்டும்

faizபாஸ் கட்சியிலிருந்து  பிரிந்து  செல்ல  நினைப்போர்  புதிய  கட்சி  அமைத்தால்  அக்கட்சி  முஸ்லிம்களையும்  முஸ்லிம்- அல்லாதாரையும்  உறுப்பினர்களைக்  கொண்டிருக்க  வேண்டும்  என முன்னாள்  பாஸ்  கட்சித்  தலைவரின்  மகன்  கூறுகிறார்.

1989-இலிருந்து  2002வரை  பாஸ்  கட்சித்  தலைவராக  இருந்த  காலஞ்சென்ற  பாட்சில்  நூரின்  புதல்வரான  ஃபாஇஸ்  பாட்சில், பாஸ்  கட்சித்  தேர்தலில்  தோற்றுப்போன  முற்போக்காளர்களை அங்கீகரிக்கும்  அறிகுறி  எதுவும்  கட்சியில்  தென்படவில்லை  என்றார்.

“புதிதாக  அமைக்கப்படும்  கட்சி  இஸ்லாத்துக்காகத்தான்  போராட  வேண்டும், இஸ்லாமிய  கொள்கைகளைத்தான்  கொண்டிருக்க  வேண்டும். அதேவேளை  அது  முற்போக்கானதாகவும் எல்லா  சமயத்தாரையும்  அரவணைத்துச்  செல்லும்  கட்சியாகவும்  விளங்க  வேண்டும்.

“உறுப்பினர்கள்  என்னும்போது,  முஸ்லிம்களும்  இஸ்லாமிய  போராட்டத்தை  ஆதரிக்கும்  முஸ்லிம் -அல்லாதாரும்  அதில்  உறுப்பினராவதற்கு  அனுமதிக்க  வேண்டும். இப்போதைய  பாஸ்  கட்சி  ஆதரவாளர்  பிரிவு  என்ற  ஒன்றைக்  கொண்டிருக்கிறது. அதில்  இருப்பவர்கள்  பாஸ்  உறுப்பினர்  ஆக  மாட்டார்கள்.

“புதிய கட்சி முஸ்லிம்- அல்லாதாரையும்  உறுப்பினர்களாக்கி அவர்கள்  வாக்களிக்கவும்  அனுமதிக்க  வேண்டும்”. மலேசியாகினி  நேர்காணலில்  ஃபாய்ஸ்  இவ்வாறு கூறினார்.