அம்னோ-பாஸ் கூட்டணி உருவாகும்: முன்னாள் அமைச்சர் ஆருடம்

ex minisபாஸ்-அம்னோ கட்சிகளுக்கிடையில்  நிலவும்  பகையும்  போட்டியும்  நாடறிந்ததுதான். கட்சிப்பகையால் குடும்ப  உறுப்பினர்களும்  தங்களுக்குள்  சண்டையிட்டுக்  கொண்டார்கள். குடும்பத்தைவிட்டுப்  பிரிந்தும்  சென்றார்கள்.

காலஞ்சென்ற  பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அப்துல்  அசீஸ்  நிக்  மாட்,  அம்னோவுக்கு  வாக்களிப்பவர்கள்  நரகத்துக்குத்தான்  செல்வார்கள்  என்றுகூட  சொன்னதுண்டு.

இதெல்லாம்  பழைய  கதை. இப்போது  நிலமை  மாறிவிட்டது. அடுத்த  பொதுத்  தேர்தலுக்குமுன்  அம்னோவும் பாஸும் கைகோர்ப்பது  உறுதி  என்று முன்னாள்  பிஎன்  தலைவர்  ஒருவர்  கூறுகிறார்.

“விமர்சகர்களும்  ஆய்வாளர்களும்  என்ன  வேண்டுமானாலும்  கூறிக்கொள்ளட்டும்  இது  சாத்தியமான  ஒரு  அரசியல்  கருத்துத்தான்- தேர்தலில்  வெற்றிபெறுவதற்காக அவை  ஒத்துழைக்கும்”, என  அவர்  மலேசியாகினியிடம்  அடித்துக்  கூறினார். ஆனால்  அவர்  தம்  பெயரைத்  தெரிவிக்க  வேண்டாம்  என்று  கேட்டுக்கொண்டார்.

இதற்குமுன்  யாராவது  ஒருவர்  டிஏபியும்  பாஸும்  கூட்டுச்சேரும்  என்று   கூறியிருந்தால் சொன்னவருக்கு  மூளைக்  கோளாறு  என்றுதான்  குற்றம்  சாட்டியிருப்பார்கள்  என  அந்த  முன்னாள்  அமைச்சர்  குறிப்பிட்டார்.

அம்னோவுக்கு  மிகப் பெரிய  எதிரியே  பாஸ்தான் என்பதால்  இரண்டும்  ஒன்றுசேர்வதால்  அவற்றின்  வெற்றி  வாய்ப்பு  பெருகும்  என்றாரவர்.