அமர்நாத் யாத்ரீகர்களைக் காக்க.. “ஆபரேஷன் சிவா”

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியாக அங்கு ஆபரேஷன் சிவா என்ற பெயரில் 7500 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ளது புகழ்பெற்ற அமர்நாத் குகைக் கோவில். இங்கு உருவாகும் பனிலிங்கத்தைத் தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தாண்டிற்கான அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியுள்ளது.

கரடு முரடான மலைப்பாதைகளை கடந்து மூவாயிரத்து 888 மீட்டர் உயரமுள்ள குகைக் கோவிலை அடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

தீவிரவாதிகள் திட்டம்…

இந்நிலையில், இந்தாண்டு அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதற்கென லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 15 தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிவா…

இதையடுத்து அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக இரண்டு முக்கிய பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அமைப்பிற்கு ஆபரேஷன் சிவா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

7500 ராணுவ வீரர்கள்…

யாத்திரை நிறைவைடையும் 59 நாள்களும் ஆபரேஷன் சிவா திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 7,500 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணி…

மேலும் லஷ்கர் இ தொய்பா தவிர ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பினரும் வேலையைக் காட்டலாம் என்பதால் அதுகுறித்தும் உளவுத்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் உஷாராக உள்ளனராம்.

தொலைத்தொடர்பு கோபுரங்கள்…

ஹிஸ்புல் அமைப்பு உண்மையில் கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு சின்னச் சின்னதாக தாக்குதல் நடத்தி வருகிறது. முதலில் தொலைத் தொடர்பு கோபுரங்களில் அவர்கள் ரகசியமாக சாதனங்களைப் பொருத்தி பாகிஸ்தானுடன் நேரடியாக பேசும் வசதியை ஏற்படுத்தினர். ஆனால் இதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து கோபுரங்களைத் தாக்கினர்.

குழப்பம் ஏற்படுத்த திட்டம்…

அடுத்து தகவல் தொடர்பை சீர்குலைக்கும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கினர். பயணிகளின் செல்போன்களை செயல்பட விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதனால் குழப்பம் ஏற்படும் என்பது அவர்களது திட்டமாகும்.

முறியடிப்பு…

இருப்பினும் அனைத்தையும் முறியடித்துள்ளதாகவும், யாத்திரை பாதுகாப்பாக இருக்கும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

-http://tamil.oneindia.com

TAGS: