கர்நாடகத்தில் தொடரும் விவசாயிகள் தற்கொலை: ஒரே நாளில் நால்வர் சாவு

farmerவிவசாயத்துக்காகப் பெற்ற கடனை உரிய காலத்துக்குள் திருப்பிச் செலுத்த முடியாமல் அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் கர்நாடகத்தில் அதிகரித்து வருகின்றன.

கடன் பிரச்னை காரணமாக மண்டியா, மைசூரு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் 4 பேர் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மண்டியா மாவட்டம், தொட்டதாரள்ளி கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி பிரதீப் (37). இவர், பயிர்க் கடனாக வங்கியில் ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், வியாழக்கிழமை அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல, கே.ஆர்.வட்டம் மடோனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மகாதேவசாமி (30) என்பவர், வேளாண் பணிக்காக வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ. 90 ஆயிரம் கடன் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. உரிய காலத்துக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், மனமுடைந்த மகாதேவசாமி வியாழக்கிழமை முத்திகெரே ஹேமாவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

மண்டியா மாவட்டம், துர்கா கேம்பியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீநிவாஸ் (35), வேளாண் பணிக்காக வங்கியில் கடனாகப் பெற்ற ரூ. 10 லட்சத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், வியாழக்கிழமை விஷம் அருந்தி அவர் தற்கொலை செய்து கொண்டார்.

மைசூரு மாவட்டம், கிரங்கூரைச் சேர்ந்த விவசாயி ராஜே கெüடா (52). வங்கியில் ரூ. 5 லட்சம் கடன் பெற்றிருந்த இவர், வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் மண்டியா, மைசூரு மாவட்டங்களில் 9 விவசாயிகள் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.

-http://www.dinamani.com

TAGS: