வெள்ளைக் கொடியுடன் சரணைடையும்போது உயிரை எடுக்க உரிமையுள்ளதா?: புலித்தேவன் மனைவி கேள்வி!

pulidevan-wifeசரணடைந்த பின்னர் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட எனது கணவருக்கு என்ன நடந்தது என சர்வதேச சமூகம் தான் பதிலளிக்க வேண்டுமென விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் புலித்தேவனின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர்க்குற்றங்களின் நேரடிச்சாட்சியமாக மாறியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான புலித்தேவனின் மனைவி இவ்வாறு தனது கணவரின் சரணடைவும், அதன் பின்னர் கொல்லப்பட்டதற்குமான சம்பவத்தை சுட்டிக்காட்டி தனக்கு இது தொடர்பான சரியான விளக்கங்களை தரவேண்டுமென கோரியுள்ளார்.

அவர் தெரிவித்தவை கேள்வி பதிலாக வருமாறு,

கேள்வி: புலித்தேவன் எப்பொழுது சரணடைந்தார்?
பதில்-18 மே 2009

கேள்வி:  மே 15 இற்கு முதல் நடைபெற்ற சம்பவங்களை உங்களால் கூறமுடியுமா?
பதில்: மோதலின் இறுதி நாட்களில் நாங்கள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் இருந்தோம்.

கேள்வி: முள்ளிவாய்க்காலிற்கு செல்வதற்கு முதல் எங்கிருந்தீர்கள்?
பதில்: 2008 முதல் 2009 வரை நாங்கள் கிளிநொச்சியில் இருந்தோம்,10 தடவைகளிற்கு மேல் இடம்பெயர்ந்த பின்னரே முள்ளிவாய்க்கால் வந்தோம்.

கேள்வி: முள்ளிவாய்க்காலில் உங்களுடன் வேறு யார் இருந்தார்கள்?
பதில்: பெருமளவு பொதுமக்களுடன் நாங்கள் இருந்தோம், விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் கூட இருந்தார்கள், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இடம் பெயரத் தொடங்கியிருந்தோம்.

கேள்வி: பாதுகாப்பு வலயம் தாக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றதே?
பதில்: ஆம் பாதுகாப்பு வலயத்தின் மீது பல்குழல் பீரங்கி தாக்குதலும், எறிகணை மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களும் இடம்பெற்றன.

கேள்வி:  நீங்கள் அப்போது எங்கிருந்தீர்கள்?
பதில்:  எனது கணவருடன்.

கேள்வி: அவர் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தாரா?
பதில்: இல்லை

கேள்வி: அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?
பதில்: வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டவண்ணமிருந்தார், அவ்வேளை நடப்பவை குறித்து தெரிவித்த வண்ணமிருந்தார், விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் என்ற வகையில் அவர் தொடர்ச்சியாக வெளி  உலகத்துடன் தொடர்பில் இருந்தார், அடுத்து என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் ஆலோசனைகளை கோரினார். வன்னியில் நடைபெறுபவைகள் குறித்து தெரிவித்தார். இறுதி நாள் வரை அவரது பணி அதுவாகவே இருந்தது.

கேள்வி: அவர் அவ்வேளை விடுதலைப்புலிகளின் சீருடையில் இருந்தாரா?
பதில்:  இல்லை.

கேள்வி:  அவரிடம் வேறு என்ன இருந்தது?
பதில்: நவீன கையடக்கத் தொலைபேசியிருந்தது அவர் அதன் மூலம் பலருடன் தொடர்பு கொண்ட வண்ணமிருந்தார்.

கேள்வி:  அவ்வேளை அவர் யாருடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார்?
பதில்: அவர் யாருடன் எல்லாம் தொலைபேசியில் கதைத்தார் என்பது எனக்கு தெரியாது, நான் அதனை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை, முன்னரும் கேட்டது இல்லை. அவரும் என்னுடன் கதைக்ககூடிய மனோநிலையில் இருக்கவில்லை, அவர் பதட்டமாக காணப்பட்டார்.

கேள்வி: உங்களுடன் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என தெரிவிக்கமுடியுமா?
பதில்: 10.000ற்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர் என நான் நினைக்கிறேன்.

கேள்வி: புலித்தேவன் தவிர வேறு விடுதலைப்புலி உறுப்பினர்களும் இருந்தார்களா?
பதில்: நடேசன் இருந்தார்.

கேள்வி: நடேசன் குடும்பத்தை சேர்ந்த வேறு யாராவது இருந்தனரா?
பதில்: இல்லை.

கேள்வி: புலித்தேவன் இராணுவத்திடம் சரணைடைந்ததற்கான ஒரே சாட்சி நீங்களா?
பதில்: ஆம் நான் மட்டும் தான், எங்களிற்கு குழந்தைகள் கிடையாது.

கேள்வி: 18 ம் திகதி என்ன நடைபெற்றது என தெரிவிக்க முடியுமா?
பதில்: அப்போது நான் அங்கிருக்கவில்லை,16 ம் திகதி முதல் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி வரத்தொடங்கிவிட்டனர்.

கேள்வி:  உங்கள் கணவரை எப்போது பார்த்தீர்கள்?
பதில்-16 ம் திகதி நான் அவரைவிட்டுவிட்டு புறப்பட்டேன்,17 ம் திகதி இராணுவகட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தேன்.

கேள்வி:  ஏன் நீங்கள் புலித்தேவனுடன் இருக்கவில்லை?
பதில்: நான் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தேன், உணவோ தண்ணீரோ இருக்கவில்லை, நாம் கடும் வெயிலின் கீழ் இருந்தோம், நான் தாகத்தின் பிடியில் சிக்குண்டிருந்தேன், மிகவும் பலவீனடான நிலையிலிருந்தேன், யுத்தத்தின் இறுதி நாட்கள் மிகவும் பயங்கரமானவை, எங்கள் மக்கள் அந்த நாட்களில் அனுபவித்த துயரங்கள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெரியும். அதற்கான ஆதாரங்களாக பல புகைப்படங்கள் உள்ளன, இது குறித்து நான் அதிகம் தெரிவிக்க வேண்டியதில்லை.

கேள்வி: புலித்தேவன் உங்களுடன் இறுதியாக என்ன கதைத்தார்?
பதில்: நீ பொது மக்களுடன் போ நான் இராணுவத்திடம் சரணைடைகிறேன் என அவர் தெரிவித்தார்.

கேள்வி: உங்களுடைய பதில் என்ன?
பதில்: என்னால் கண்ணீர் விட மாத்திரம் முடிந்தது வேறு என்ன செய்ய முடியும்.

கேள்வி: இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை அடைந்த பின்னர் நீங்கள் என்ன செய்தீர்கள்?
பதில்: நான் அங்கிருந்தேன், பின்னர் பத்திரிகைள் ஊடாக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் இராணுவத்தினடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்ததாக அறிந்தேன்.

கேள்வி: அவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்ததை ஊடகங்கள் ஊடாகவே அறிந்தீர்களா?
பதில்: ஆம் ஊடகங்கள் ஊடாகவே நான் அறிந்தேன்.

கேள்வி: எந்த ஊடகத்தில்?
பதில்: எனக்கு அது ஞாபகமில்லை, நான் கேட்டது, வாசித்தது குறித்த அனைத்து விடயங்களையும் மனதில் பதியவைக்க கூடிய நிலையில் நான் இருக்கவில்லை.

கேள்வி: நீங்கள் வாசித்த அனைத்தையும் நம்புகிறீர்களா?
பதில்: -ஊடக செய்திகள் தவறானவையாக இருக்காது தானே?

கேள்வி: வெள்ளைக் கொடியுடன் சரணைடைந்தவர்களை பார்த்ததாக யாராவது தெரிவித்தார்களா?
பதில்: நான் பல தரப்பினரிடமிருந்து தகவல்களை பெற்றேன் ஆனால் ஊடகங்கள் மாத்திரமே வெள்ளைகொடி விவகாரம் குறித்து அம்பலப்படுத்தின.

கேள்வி: புலித்தேவன் குறித்து நீங்கள் பின்னர் என்ன அறிந்தீர்கள்?
பதில்: அடுத்த ஓரு மாதத்திற்குள் அவரது மரணம் குறித்து அறிந்தேன், புகைப்படங்களை பார்த்தேன்.

கேள்வி: அப்போது எங்கிருந்தீர்கள்?
பதில்:  இலங்கையில்

கேள்வி: ஏன் உயர் மட்டதலைவர்கள் எவரிற்காவது இது குறித்து நீங்கள் முறைப்பாடு செய்யவில்லை?தமிழ் அரசியல்வாதிகளிடம் தெரிவித்திருக்கலாமே?
பதில்-எனது பாதுகாப்புக்காக, நான் அது பற்றி பேசவில்லை, என்னை பற்றி யாரிடமும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை.

கேள்வி-உறவினர்களுடன் இருந்தீர்களா?
பதில்- இல்லை தற்போதும் உறவினர்களுடன் இல்லை.

கேள்வி � உங்கள் கணவரிற்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தை தொடர்புகொள்ள எப்போது தீர்மானித்தீர்கள்?
பதில்-நான் ஆறு வருடங்களாக மௌனமாக இருந்தேன், இக்காலப்பகுதியில் எனது கணவர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்டது குறித்து எவரும் பேசவில்லை. நான் தொடர்ந்தும் மௌனமாக இருக்க முடியாது என்பதால் நான் ஐக்கிய நாடுகளை தொடர்புகொள்ள தீர்மானித்தேன்.

கேள்வி- ஏன் இதனை ஐக்கிய நாடுகளிடம் தெரிவித்தீர்கள், இலங்கையில் யாரிடமும் தெரிவிக்கவில்லை?
பதில்- எனக்கு தெரிந்தளவிற்கு முழுமோதல்கள் குறித்தும் ஐக்கிய நாடுகளிற்கு தெரிந்திருந்தது, இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேச சமூகத்திற்கும் தெரிந்திருந்தது.  அவர்களுடைய ஆலோசனையின் பேரிலேயே எனது கணவர் வெள்ளைக்கொடியுடன் ஆயுதங்கள் இன்றி சரணைடந்தார். ஆகவே சரணைடைந்த பின்னர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட எனது கணவரிற்கு என்ன நடந்தது என சர்வதேச சமூகம் தான் பதிலளிக்கவேண்டும்.

கேள்வி- அனைவரும் வெள்ளைக் கொடியுடன் சரணைடந்தார்கள் என எப்படி உங்களிற்கு தெரியும்?
பதில்- இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிளிற்கும் இடையில் தொடர்பாளராக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களிற்கு தேநீர் வழங்கிய பின்னர் எவ்வாறு இலங்கை இராணுவம் அவர்களை சுட்டுக்கொன்றது என்பதை தெரிவித்துள்ளார்.  யுத்தத்தின் பதட்டமான இறுதி நிமிடங்கள் குறித்து அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

கேள்வி- சர்வதேச சமூகம் என்ன நடவடிக்கையை எடுக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்-எனது கணவர் ஏன் சித்திவைதை செய்து கொல்லப்பட்டார் என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும், ஏன் அவரிற்கு இந்த நிலை ஏற்பட்டது, யார் இதற்கு காரணம்? ஒருவர் வெள்ளைக் கொடியுடன் சரணைடையும்போது அவரது உயிரை எடுப்பதற்கான உரிமையுள்ளதா என அவர்கள் தெரிவிக்க வேண்டும், அவர் யுத்தத்தில் காயமடைந்து இறந்திருந்தால் நான் அதனை ஏற்றுக்கொண்டிருப்பேன்,

ஆனால் அவர் சரணடையும் வேளை நல்ல நிலையிலிருந்தார், யுத்தகாயங்கள் எதுவும் இல்லை, அவர் காயங்களுடன் இறந்து கிடந்ததை படங்களில் பார்த்த வேளை என்னால் தாங்க முடியவில்லை. ஏன் அவர்கள் இந்த குற்றங்களை இழைத்தனர், யார் இதற்கு காரணம் என்பதை நான் அறிய விரும்புகின்றேன்.

நான் ஆயுதங்கள் எடுக்காத, ஒருபோதும் யுத்தத்தில் ஈடுபடாத, மக்களை ஒருபோதும் கொலைசெய்யாத மனிதருக்காக நீதியை கோருகின்றேன், சர்வதேச சமூகம் அளித்த வாக்குறுதியை நம்பியே அவர் சரணைடைந்தார், அவர் ஆயுதம் வைத்திருக்கவில்லை, இது மனித உரிமை மீறல், அவர் இந்த முறையில் இறந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி- குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்குமாறு நீங்கள் மன்றாடுகிறீர்களா?
பதில்- ஆயுதங்கள் ஏந்தாமல் படையினரிடம் சரணடைந்த நபர்கொல்லப்பட்டதற்கான காரணத்தை நான் அறிய விரும்புகின்றேன். ஓரு மனிதரை சித்திரவதை செய்வது சரியானதா, அவ்வாறான முறையில் ஒருவரை கொலைசெய்யவது சரியா? எனக்கு இதற்கான பதில்கள் வேண்டும்,  நான் குற்றவாளிகளை தண்டிக்குமாறு கோரவில்லை, இந்த கொலைக்கான நீதியையே கோருகிறேன், அதற்கான பதில் என்ன?

கேள்வி- உங்கள் கணவரின் படுகொலையை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்-  என்னால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது,தங்களது சொந்த மக்கள் மீது கருணையுடன் நடக்கவேண்டிய நாடடொன்றின் படையினர் அவ்வளவு இரக்கமற்ற முறையில் செயற்படமுடியுமா?

கேள்வி- இராணுவ தலைமையகத்தை அல்லது பொலிஸை ஏன் தொடர்புகொள்ளவில்லை?
பதில்- இராணுவம், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்களா? நான் அச்சமும் அடைந்திருந்தேன்,யாரை அணுகுவது என்பது எனக்கு தெரியவில்லை, நான் மௌனமாக அழுதேன்.

கேள்வி- நீங்கள் அவர் திரும்பி வருவார் என எதிர்பார்த்தீர்களா?
பதில்-ஆம் அவர் திரும்பி வருவார் என கருதினேன்.

கேள்வி- அவருடைய படங்களைப் பார்த்த போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?
பதில்- அந்த படங்களை பார்த்த போது என்னுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா. நான் அதிர்ச்சியடைந்தேன் அவ்வாறான படங்களை பார்ப்பேன் என நான் நினைத்திருக்கவில்லை.

அவருடைய மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அவர் சரணடைய செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவர் இறுதியாக சொன்ன வார்த்தைகள் மனதில் இருக்கின்றன அதன் பின் அவர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படங்களைப் பார்த்தேன். எவராலும் அதனை அந்த வலியுடன் வாழ முடியாது. அதனை சகித்துக்கொண்டு மௌனமாகவும் இருக்க முடியாது.

அவரை நினைக்கும் ஒவ்வொரு நாளும் அந்தப் படமே என் மனதில் தோன்றுகிறது. அதன் பின் நான் அவரை நினைத்து கடும் வேதனை அடைகிறேன். அதற்கு மனித உரிமை மீறல்களே காரணம்.

இதே போல பல தமிழர்கள் கடும் மன வேதனையை அனுபவிக்கிறார்கள் என நான் எண்ணுகிறேன். அதற்கெல்லாம் பதில் கூறப்பட வேண்டும்.

கேள்வி: உங்கள் கணவரின் படுகொலை தொடர்பாக இறுதித் தீர்ப்பு எப்போது கிடைக்க வேண்டும் என கருதுகிறீர்கள்.?
பதில்- விரைவில் நீதி கிடைத்தால் அது எனது ஆன்மாவை ஆறுதல்படுத்தும்,நீதி கிடைத்தால் அது தற்போது நான் அனுபவிக்கும் துயரங்களில் இருந்து- மனவேதனைகளில் இருந்து என்னை விடுவிக்கும். ஏன் இது நடந்தது. இந்த குற்றங்களை யார் இழைத்தது என்ற பதில் எனக்கு வேண்டும்.

கேள்வி: அவர்கள் பதிலளிப்பார்களா? யாராவது தாமாக முன்வந்து புலித்தேவனுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா?
பதில்: யாராவது தங்கள் குடும்பத்தின் பாசத்திற்குரிய ஒருவரை இழந்திருந்தால் நான் வெளிப்படுத்தும் துயரம் அவர்களுக்கு புரியும். தீர்ப்பு எவ்வாறானதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு சர்வதேச சமூகமும் பொறுப்பு. அவர்கள் தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்ப்பை வழங்க வேண்டும். எங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னால் தெரிவிக்க முடியாது. ஆனால் நீதி வழங்கப்பட வேண்டும். வேறு எதனையும் வலியுறுத்த நான் முயலவில்லை.

உயிரிழப்புகளை தண்டனைகள் மூலம் ஈடுசெய்ய இயலாது. நீதி வழங்கப்பட வேண்டும்.

கேள்வி- நீங்கள் நீதிக்காக தொடர்ந்தும் போராடுவீர்களா?
பதில்- ஆம்.எனது கணவருக்காக என்னால் செய்யக்கூடியது அதுமட்டும் தான், நான் மௌனமாக இருக்க முடியுமா?  பொறுப்பு வாய்ந்தவர்களால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டால் நீங்கள் அமைதியாக இருப்பீர்களா? அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டு உங்களால் நிம்மதியாக வாழமுடியுமா?  சரணைடைந்த எனது கணவர் கொல்லப்பட்டதற்கான காரணம் எனக்கு தெரிய வேண்டும், நான் ஏனையவர்களின் சார்பில் பேசவில்லை.

இவ்வாறு அவர் தனது சாட்சியங்களை தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: