WSJ: எங்கள் செய்தி உண்மையானது, அரசாங்க விசாரணை அறிக்கையை நஜிப்பும் பார்த்தார்

reportவால்  ஸ்திரிட்  ஜர்னல்(WSJ), பிரதமர்  பண  மோசடி  செய்ததாகக்  குற்றஞ்சாட்டி வெளியிட்ட  செய்தியைத்  தற்காத்துள்ளது.  அது  அரசாங்கப்  புலனாய்வு  அறிக்கையை  அடிப்படையாகக்  கொண்டது  என்றும்  அந்த  அறிக்கையை  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  பார்த்திருக்கிறார்  என்றும்  அது  தெரிவித்தது.

WSJ-இல்  நேற்று வெளியான  செய்தியில்  1எம்டிபி-இன்  பணம்  யுஎஸ்$700 மில்லியன்  அவருடைய  தனிப்பட்ட  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதாகக்  கூறப்பட்டிருந்தது.

“அது கவனமாக  செய்யப்பட்ட  ஒரு  புலனாய்வு. நாங்கள்  பார்த்த புலனாய்வு  ஆவணங்களை  மலேசிய  சட்டத்துறைத்  தலைவருடனும்  மற்றவர்களுடனும்  பகிர்ந்து  கொண்டிருக்கிறோம்.

“பிரதமரும்  அதைப்  பார்த்திருக்கிறார்”, என  WSJ ஹாங்காங்  பிரிவுத்  தலைவர் கென்  பிரவுன் சிஎன்பிசி  நேர்காணலில்  கூறினார்.

புலனாய்வும்  ஆவணங்களும் உறுதியானவை  என்றும் ஆவணங்கள் விசாரணைகளின்வழி  கிடைத்தவை  என்றும் WSJ திடமாக  நம்புகிறது  என்றாரவர். விசாரணை என்றால்  நம்பத்தக்க  விசாரணை  அரசியல்  விசாரணை  அல்ல  என்றாரவர்.

பணம் அங்குமிங்கும்  சென்று  முடிவில்  நஜிப்பின்  கணக்கைச்  சென்றடைந்தது  தெரிகிறது. அதன் பின்னர்  எங்கு  சென்றது  என்பது  தெரியாது  என்றாரவர்.

நஜிப்  இக்குற்றச்சாட்டை  வன்மையாக  மறுத்தார்.

“என் அரசியல்  எதிரிகள்  கூறுவதுபோல்  1எம்டிபி, எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  அல்லது வேறு எந்த  நிறுவனங்களின்  பணத்தையும்  என்  சொந்த  ஆதாயத்துக்காக  எடுத்துக்  கொண்டதில்லை, அதை  அந்நிறுவனங்களும்  உறுதிப்படுத்தியுள்ளன”, என்றவர்  சொன்னார்.