ஒரு நாள் வட்டியில், ஒரு நவீன தமிழ்ப்பள்ளியை கட்டலாம்!

K. Arumugam_suaramகோடிக்கணக்கான பணம் நமது பிரதமரின் வங்கிக்கணக்கில் பதிவாகி உள்ளதாக வெளியான தகவல் இன்று மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. மலேசியாவில் ஊழலும் இலஞ்சமும் உள்ளதை தவறாமல் அரசாங்கத்தின் பட்டுவாடா கணக்காய்வு துறை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வந்தாலும், அதைக்கண்டு யாரும் அலட்டிக்கொள்வதில்லை.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஊழல் விவகாரம் பூதாகாரமான வகையில் உருவாகி பிரதமர் நஜிப் ரசாக்  மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்துள்ளது என்கிறார் சுவராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.

2008-இல் அரசாங்கம் 1எம்டிபி என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கியது. அதற்கான தலைவர் பிரதமரும் நிதியமைச்சருமான நஜிப் ரசாக் ஆவார். இந்த நிறுவனத்தின் நோக்கம் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவது ஆகும். அதன் வழி மக்கள் வளமாக வாழவும் வழி பிறக்கும் என்பதாகும்.

yrsaypmnotansweringthequestionஇது சார்பாக மேலும் விவரித்த வழக்கறிஞருமான ஆறுமுகம், இந்த 1எம்டிபி சார்பாக மலேசிய அரசாங்கம் கடன் வாங்கலாம். இந்தக் கடனை அது அயல் நாட்டு வங்கி, உள்நாட்டு வங்கி அல்லது பணத்தை வட்டிக்கு பட்டுவாடா செய்யும் அனைத்துலக நிதி சந்தையிலும் வாங்கலாம். ஆனால், அது பெரும் இந்த கடனுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். பிறகு வாங்கிய கடனுக்கு தவறாமல் வட்டியைக் கட்ட வேண்டும்.

சுருக்கமாக சொன்னால், இந்த 1எம்டிபி இதுவரையில் வாங்கிய கடனின் மதிப்பு ரிம 4,200 கோடியாகும் (ரிம 42,000,000,000). இதற்கு சுமார் 6 விழுக்காடு வருடாந்தர வட்டியாகக் கட்ட வேண்டும். அதாவது ஒரு வருடத்திற்கு வட்டி மட்டும் ரிம 2 கோடி 52 லட்சம் (ரிம 2,520,000,000) ஆகும். அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் ரிம 69 லட்சம் (ரிம 6,900,000) வட்டி கட்ட வேண்டும். வருமானம் வந்தால் வட்டி கட்டலாம், ஆனால் இவர்கள் செய்த முதலீடுகளில் வருமானம் இல்லாததால் தொடக்கத்தில் குறைவாக இருந்த கடன் அதிகரித்து தற்போது இந்த ரிம 4,200 கோடியை அடைந்துள்ளது.

இந்த ஒரு நாளுக்கு கட்டும் வட்டி பணத்தில், ஓர் அழகான பாலர்பள்ளியுடன் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட தமிழ்ப் பள்ளியை கட்டலாம். ஒரு மாதம் கட்டும் வட்டி பணத்தில் அது போன்ற 30 பள்ளிகளை நிறுவலாம்.

அல்லது, ரிம100,000 மதிப்புள்ள 70 வீடுகளை வறுமையில் உள்ள மக்களுக்கு இனாமாக ஒவ்வொரு நாளும் வழங்கலாம் என்கிறார் ஆறுமுகம்.

bankஇந்த 1எம்டிபி செய்த முதலீட்டின் மதிப்பு எவ்வளவு என்று பார்த்தால் அதிலும் ஊழல்தான் உள்ளது. அரசாங்க நிலத்தை குறைந்த விலையில் வாங்கி அதை அதிக விலைக்கு அரசாங்க நிறுவனங்களுக்கு பட்டுவாடா செய்வது, அதிக விலை கொடுத்து  மின் உற்பத்தி நிலையங்களை வாங்கியுள்ளது,  அயல் நாட்டில் செய்யப்பட்டுள்ள  பயன் இல்லாத மூதலீடுகள்  போன்றவை அம்பலமாகியுள்ளன.

கூட்டிக் கழித்து பார்க்கும் போது மக்களை வளமாக வாழ வைக்க அரசாங்கம் போட்ட இந்த 1எம்டிபி முதலீட்டு திட்டம் அரசாங்கத்தை கடனாளியாக ஆக்கியுள்ளது. இதை நிவர்த்தி செய்ய அரசாங்கம் மக்களின்  பணத்தைதான் பயன் படுத்துகிறது.

வட்டி கட்ட வழி செய்யவும், கடனை நிருவகிக்கவும் பணத்தை தேட அரசாங்கம் மக்களின் வயிற்றில் கை வைத்த போதுதான் இந்தப் பிரச்சனை மேலும் சூடு பிடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்டது. இதனால் விலைவாசி உயர்வு மக்களை தாக்கி திக்குமுக்காட வைத்துள்ளது.

1najibஇதோடு, தற்போது இந்த 1எம்டிபி பணப்பட்டுவாடா செய்யப்பட்ட போது, சுமார் ரிம 260 கோடி (ரிம 2,600,000,000) பிரதமர் நஜிப்பி ன் ‘அம்பேங்’  வங்கிக் கணக்கில் அயல் நாட்டிலிருந்து நுழைந்துள்ளதாக ஆதாரங்களுடன் அனைதுலக நிதியறிக்கை பத்திரிக்கையான வால் ஸ்திரிட் ஜெர்னல் செய்தி வெளியிட்டது.

இதை தனது சுய தேவைக்காகப் பயன் படுத்தவில்லை என்கிறார் பிரதமர். அப்படியென்றால் யாருடைய தேவைக்காக பயன் படுத்தப் பட்டது என்ற கேள்வி எழுகிறது. பொருளாதார நெருக்கடியும் குறைந்த வருமானமும் மக்களை தாக்கியுள்ள இந்தச் சூழலில், அரசாங்க மாற்றம் மட்டும் போதாது என்கிறார் ஆறுமுகம்.

ஊழலும்  இலஞ்சமும் அற்ற ஓர் அரசாங்கம் வேண்டும். அதை பெறுவது கடினம். ஆனால், முடியும். முதல் கட்டமாக மக்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும். மாறி மாறி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு மக்கள் பலியாவதை நிறுத்த மாற்று சிந்தனைக்கு வித்திட வேண்டும். நாம் அடிமைத்தன அரசியலுக்கும் பண அரசியலுக்கும் சோரம் போகாமல் இருக்க வேண்டும்.

அது சாத்தியமா என்ற கேள்விக்கு, “அதுவும் ஒரு போராட்டம்தான்.  மக்களாட்சி என்பதை தாரை வார்த்துக் கொடுக்காமல், அதில் பங்கு பெற வேண்டும்.” அடுத்த கட்டம் மக்களுடையது என்கிறார் ஆறுமுகம்.