சவூதி தாக்குதலில் 120 பேர் சாவு: யேமனில் கூட்டுப் படை நடவடிக்கை நிறுத்தம்

yemenயேமனில் குடியிருப்புப் பகுதியில் சவூதி கூட்டுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 120-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

யேமனின் மோக்கா நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து மருத்துவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டனர்.

இதையடுத்து, வான்வழித் தாக்குதலைத் தாற்காலிகமாக நிறுத்துவதாக சவூதி அரேபியா அறிவித்தது.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் மோக்கா நகரில், மின் உற்பத்தி நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் சவூதி கூட்டுப் படையினரின் போர் விமானங்கள் குண்டு வீசின.

இந்தத் தாக்குதலில் ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் தகர்ந்தன. நள்ளிரவில் நடந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்பட 120-க்கும் மேற்பட்டடோர் உயிரிழந்தனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நாட்டில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி கூட்டுப் படையினர் கடந்த நான்கு மாதங்களாக நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் இதுவே மிக அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நடவடிக்கையாகும்.

இந்தத் தாக்குதல் குறித்து சவூதி கூட்டுப் படையினர் சார்பில் எந்த விளக்கத்தையும் பெற இயலவில்லை என்று செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.

மின் உற்பத்தி நிலைய ஊழியர் குடியிருப்பு தாக்குதலுக்கு இலக்காகியது ஏன் என்பது குறித்து தெளிவான விவரம் எதுவும் வெளியாகவில்லை.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் முகாம் அந்த நகரிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை இரவு அந்த முகாம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சவூதி கூட்டுப் படையினர் குண்டு வீசினர்.
இதில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்து எந்தத் தகவலும் இல்லை.

அந்த குண்டு வீச்சைத் தொடர்ந்து, நள்ளிரவில் குடியிருப்புப் பகுதியில் குண்டு வீச்சு நடத்தப்பட்டது.

அந்த நாட்டில் மருத்துவ நிவாரண உதவிகள் அளித்து வரும் “டாக்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ்’ சர்வதேச மருத்துவ உதவி அமைப்பினர் இது குறித்து தெரிவிக்கையில், கூட்டுப் படையினரின் தாக்குதல்களுக்குப் பொதுமக்களும் இலக்காகி வருவதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வரும் இடம் என்பதால் அந்தக் குடியிருப்புப் பகுதியில் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருக்கலாம் என்றனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமன் நாட்டின் கணிசமான பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
ஷியா பிரிவைச் சேர்ந்த இவர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுதங்கள் வழங்கி உதவி வருவதாகக் கூறப்படுகிறது.

யேமனின் ராணுவத்தில் ஒரு பிரிவினர், முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவு தெரிவித்து கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து சண்டையிட்டு வருகின்றனர்.
தற்போதைய அதிபர் மன்சூர் ஹாதி நாட்டைவிட்டு வெளியேறி, சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அவர் சவூதியில் தஞ்சம் அடைந்ததைத் தொடர்ந்து, மார்ச் மாத இறுதி முதல் சவூதி தலைமையிலான கூட்டுப் படை, யேமனில் கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இதில் சுமார் 2,700-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

-http://www.dinamani.com