எதிர்ப்புக் காட்டும் துணைப் பிரதமர் பதவி இழப்பாரா?

rebelஅமைச்சரவை  மாற்றம் ஒன்று  நிகழுமானால் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  எதிர்ப்புக்குரல்  எழுப்பும்  முகைதின்  யாசினைத்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  தூக்கும்  சாத்தியம்  இருக்கிறதா?

இரண்டு  தசாப்தங்களாக  அமைச்சரவையில்  உள்ள  ஒருவரைத்  தூக்கி  எறிவது  அவ்வளவு  எளிதல்ல  என்கிறார்  தஸ்மானியா  பல்கலைக்கழகத்தில்  ஆசியக்  கழகத்தின்  இயக்குனராகவுள்ள  ஜேம்ஸ்  சின்.

அதனால்  ஏற்படும்  விளைவுகளைப்  பிரதமர்  எண்ணிப்  பார்க்க  வேண்டும். முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கு  ஏற்பட்ட  நிலையையும்  அவர்  நினைவுகூர்ந்தார்.

“மகாதிர் (துணைப்  பிரதமர்களாக  இருந்த) மூசா  ஹித்தாமையும்  கபார்  பாபாவையும்  கழட்டிவிட  விரும்பியபோது  அவர்களும்  வெளியேறத்  தயாராக இருந்தனர்.

“ஆனால், அவர்  அன்வார்  இப்ராகிமைப்  பதவிநீக்கம்  செய்தபோது  கிட்டத்தட்ட  கட்சியை  இழக்கும்  நிலை  ஏற்பட்டது. அதனால்  நஜிப்  முகைதினைத்  தூக்க  நினைத்தால்  அது  எளிதாக  இராது”, என்று  சின்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

நேற்று  செராஸ்  அம்னோ  தொகுதிக்  கூட்டத்தில்  முகைதின் ஆற்றிய  உரைமீது  கருத்துரைத்தபோது  அந்த  ஆய்வாளர்  இவ்வாறு  கூறினார்.

ஆனால், முகைதினின்  பேச்சை  வைத்து  அவர்  நஜிப்பைப்  பதவி  இறங்கச்  சொல்வதாக  முடிவு  செய்துவிடக்  கூடாது  என்றும்  அவர்  சொன்னார்.

முகைதின் பல  வாரங்களுக்கு  முன்பும்  இதே  கருத்தைச்  சொன்னார்  என்பதையும்  சின்  சுட்டிக்காட்டினார்.

இவ்விவகாரம் தொடர்பில்  ஜனநாயக, பொருளாதார  விவகாரங்களுக்கான  கழக(ஐடியாஸ்)த்  தலைவர்  வான்  சைபுல்  வான்  ஜானும் சின்னைப்  போன்றே  கருத்துரைத்தார். மேலும், தி எட்ஜ்  நாளேட்டுக்கான  தடைவிதிப்பு  நஜிப்பின்  செல்வாக்கைக்  குறைப்பதற்கான “திட்டமிடப்படாத  சதி”போல்  அமைந்து  விட்டது  என்றும் சொன்னார்.

“தடை விதித்தது (உள்துறை  அமைச்சர்)  அஹ்மட் ஜாஹிட்-ஆக  இருக்கலாம். ஆனால், அனைவரின்  கண்களும்  நஜிப்பின்மீதுதான்.

“நஜிப் (1எம்டிபிமீது கூறப்படும்  குற்றச்சாட்டுகளுக்கு)  பதில்  அளிப்பதுடன்  (நாளேட்டுக்கு  விதிக்கப்பட்ட)  இடைநீக்கத்தை   நீக்கும்படியும் உள்துறை  அமைச்சருக்கு  உத்தரவிட  வேண்டும்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அந்த  ஊடகம்  தவறு  இழைத்திருப்பதாக  அரசாங்கம்  கருதினால்  அதற்கெதிராக  சட்டப்படி  நடவடிக்கை  எடுக்கலாம்  என  வான்  சைபுல்  கூறினார்.

முகைதினின்  பேச்சு  பற்றிக்  குறிப்பிட்ட  அவர்  அது “கண்டிக்கும்  உரைதான்”  என்றார்.

“முகைதின்  சொன்னது  எல்லாமே  சரியாகக்கூட  இருக்கலாம். நஜிப்  முகைதினின்  கூறியதைக்  கவனமாக  ஆராய  வேண்டும்.

“எல்லாக்  குற்றச்சாட்டுகளுக்கும்  அவர்(நஜிப்)  பதில்  சொல்லத்தான்  வேண்டும்”, என்றார்.