அமைச்சரவை மாற்றம்? துணைப் பிரதமர் கழட்டி விடப்படுவாரா?

cabinetபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் புதிய  அமைச்சரவை  பட்டியலுடன்  பேரரசரைச்  சந்தித்திருப்பதாகக்  கூறப்படுகிறது.

அமைச்சரவை  மாற்றம்  பற்றி  விரைவில்  அறிவிக்கப்படலாம்  என்று  அம்னோவின்  குரலாக  விளங்கும் உத்துசான்  மலேசியா  ஆன்லைன்  நள்ளிரவுக்குப்  பின்னர்  அறிவித்திருந்தது.

இன்று  பிற்பகல்கூட அறிவிக்கப்படலாம்  என  ஊகங்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே,  நஜிப்  1எம்டிபி  விவகாரத்தைக்  கையாண்ட  விதத்தைக்  குறைகூறி  வந்த துணைப்  பிரதமர்  முகைதின்  யாசின்  புதிய  அமைச்சரவையில் இடம்பெறாமல்  போகக்  கூடும்  என  மலேசியன்  இன்சைடர்  கூறியுள்ளது.

உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  துணைப்  பிரதமராக  நியமிக்கப்படலாம்  என்றும்  அது  ஆருடம்  கூறியது.

ஆனால், நஜிப்பின்  உறவினரான  ஹிஷாமுடின்  உசேன்  அப்பதவியில்  அமர்த்தப்படலாம்  என்ற  பேச்சும்  அடிபடுகிறது.

அமைச்சரவை   மாற்றம்  வந்தால்  ஜி.பழனிவேலின்  நிலை  என்னவாகும்  என்று  தெரியவில்லை.

உத்துசான்  மலேசியா  ஆன்லைன்,  துணை  அமைச்சர்  ஒருவர்  முழு  அமைச்சராவார்  என்றும்  இருவர்  துணை  அமைச்சர்களாக  நியமிக்கப்படுவார்கள்  என்றும்  கூறியுள்ளது.