ஆங்கிலத்தின் பிறப்பிடம் துருக்கி!

turk-MMAP-mdஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் பிறப்பிடம் இன்றைய துருக்கி என புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.

நியூசிலாந்தின் ஆக்லந்து பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பரிணாம உயிரியல் விஞ்ஞானியான குவென்டின் அட்கின்ஸன் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் முடிவுகள் “ஸயன்ஸ்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான மொழிகள், இன்றைக்கு பேசப்படும் மொழிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளிலிருந்து ஏராளமான சொற்களை ஆராய்ந்ததில் அவை அனைத்தும் உருவான இடம் அனடோலியா எனும் பிரதேசம் எனத் தெரிய வந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பண்டைய காலத்தில் அனடோலியா என அறியப்பட்ட இடம்தான் இன்றைய துருக்கி.
ஹிந்தி, ஆங்கிலம், ரஷியன், ஜெர்மன், ஸ்பானிஷ், கிரேக்கம் உள்ளிட்ட இந்தோ-ஐரோப்பிய மொழிகளை உலகின் அனைத்துக் கண்டங்களிலும் ஏறத்தாழ 300 கோடி மக்கள் பேசுகின்றனர்.

இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கருங்கடல், காஸ்பியன் பகுதியையொட்டிய பான்டிக் ஸ்டெப்பீஸ் என்ற பிரதேசத்தில் தோன்றியவை என்ற கோட்பாடு பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் அனடோலியா பிரதேசத்தில் 8 ஆயிரம் அல்லது 9 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மொழிக் குடும்பம் தோன்றியிருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. விவசாய முறைகள் பரவியபோது மொழிகளும் வேறு இடங்களுக்குப் பரவின என்கிறது இந்தக் கோட்பாடு.

103 மொழிகளில் புழக்கத்திலிருக்கும் சொற்களின் உருவாக்கத்துடன் நோய்களின் தோற்றம், அவை பரவுவது உள்ளிட்ட விவரங்களை ஆராய்ச்சிக்கு உள்படுத்தியதில் புதிய முடிவுகள் கிடைத்துள்ளன.

-http://www.dinamani.com