நாடாளுமன்றத்தில் நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

mat sabuமுகைதின்  யாசினும்  பிஎன்னுக்கு  விசுவாசமாகவுள்ள  மற்ற  எம்பிகளும்  எதிரணியினருடன்  சேர்ந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிரான  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்துக்கு  ஆதரவாக  வாக்களிக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இது  மலேசியாவைப்  பாதுகாக்கும் திட்டத்தின்  ஒரு  பகுதியாகும்  என  கெராக்கான்  ஹராபான்  பாரு (ஜிஎச்பி) தலைவர்  முகம்மட்  சாபு,  16 டிஏபி,  பிகேஆர்,  ஜிஎச்பி  எம்பிகளுடன்  சேர்ந்து  நடத்திய  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

“இடைநிலை  அரசாங்கம்  ஒன்றை  அமைப்பதற்கு  கடுமையான  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்கிறோம்.

“முகைதினும்  அவரின்  ஆதரவாளர்களும்  நாட்டின்மீது  அன்பு  கொண்ட  பிஎன்  எம்பிகளும் நஜிப்புக்கெதிரான  நம்பிக்கையில்லாத்  தீர்மானத்தின்வழி  ஓர்  இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு  உதவ  இதுவே  தருணமாகும்”, என  மாட்  சாபு  என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  முகம்மட்  கேட்டுக்கொண்டார்.

நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  வெற்றி  பெற்றால்  இடைக்கால  அரசாங்கத்துக்கு  ஒராண்டுக் காலம்  தலைமை  ஏற்க இடைக்காலப்  பிரதமர்  ஒருவர்  தேர்ந்தெடுக்கப்படுவார்.

இடைக்காலப்  பிரதமராக  முகைதின்,  அம்னோவின்  மூத்த தலைவர்  தெங்கு  ரசாலி  ஹம்சா,  மாட்  சாபு, பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  முன்னாள்  துணைப்  பிரதமர்  மூசா  ஹித்தாம்,  ஷாரிர்  அப்துல்  சமட்  போன்ற  மூத்த  தலைவர்களில்  ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம்.

நஜிப்பின்  அரசியல்  போராட்டத்துக்காக  நாட்டைப்  பலி  கொடுக்கக்  கூடாது  என  மாட்  சாபு  கூறினார்.

“கடந்த  சில  வாரங்களாக  அம்னோவின்  உள்பூசலில்  நாடும்  இழுக்கப்பட்டிருக்கிறது”, என்றாரவர்.

1எம்டிபி  ஊழலை  விசாரிக்கும்  சிறப்புப்  பணிக்   குழுவும்  இரண்டாக  பிரிந்து  கிடப்பதிலிருந்து இது  தெரிகிறது. ஒரு  தரப்பு  நஜிப்பைக்  காப்பாற்ற  முயல்கிறது. இன்னொன்று  அவர்மீது  வழக்கு தொடுக்க  விரும்புகிறது.

“நஜிப்பின்  நிலையை  வலுப்படுத்துவதற்காக  முகைதினும்  மூத்த  அமைச்சர்களும்  கழட்டி  விடப்பட்டுள்ளனர்”, என  சாபு  குறிப்பிட்டார்.

முகைதினும்  ஜிஎச்பி-இல்  சேர  வேண்டும்  என்று சாபு  வேண்டிக்   கொண்டார்.