தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காற்பந்து அன்பளிப்பு

Tamil school our choice with studentsநம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. 524 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரசும், அரசு சாரா இயக்கங்களும், பெருந்தகையாளர்களும், பொதுமக்களும் உறுதுணையாக, இன்றும் இருந்து வருகின்றார்கள் என்பது வெள்ளிடைமலை.

அவ்வகையில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, மலேசியக் காற்பந்து சங்கம், ஆசியக் காற்பந்து சங்கம், தேசியப் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம், கோல கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் காற்பந்துகளை இலவசமாக அளிக்கவுள்ளது. ஆசியக் காற்பந்து கூட்டமைப்பின் சி.எஸ்.ஆர் (CSR) தலைவரான டாக்டர் அண்ணாதுரை அவர்களின் முயற்சியில் “One World Futbol” வாயிலாகச் சுமார் 5000 காற்பந்துகள் பெறப்பட்டன. அக்காற்பந்துகள் நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

 இந்நிகழ்ச்சிக் குறித்த கூடுதல் விபரங்கள் பின்வருமாறு:-

 திகதி        : 2 ஆகஸ்ட் 2015

நேரம்       : 8.00 காலை – 5.00 மாலை

இடம்        : புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு மையம்.

     ஜாலான் பாராட், புக்கிட் ஜாலில், 57000 கோலாலம்பூர்

 கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர், மலேசியா.

(Institut Sukan Negara, Bukit Jalil.

Jalan Barat, Bukit Jalil, 57000 Kuala Lumpur,

Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia.)

20150728_155754தமிழ்ப்பள்ளிகளிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறிய பள்ளிகளுக்கு 3 முதல் 10 காற்பந்துகளும் பெரிய பள்ளிகளுக்கு 20 முதல் 40 காற்பந்துகளும் வழங்கப்படவுள்ளன. இக்காற்பந்துகள் “Ultra Durable Balls” என்று அழைக்கப்படும் வகையிலானவை. இவை உயர் தரமானவை; உறுதியானவை; மேலும் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடியத் தன்மையையும் கொண்டவை.

இந்நிகழ்ச்சியோடு, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காற்பந்து சிறப்புப் பயிற்சியையும்; பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சமச்சீர் சத்துணவு தொடர்பான சொற்பொழிவும்; சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன. மேலும், இந்நிகழ்ச்சியில் கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.          

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டுகளிலும் உற்சாகமாக ஈடுபடவும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்தியச் சமூகத்தினர் மத்தியில் விளையாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதாகப் பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ் ராஜேந்திரன் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் வாயிலாகச் சிலாங்கூர், கூட்டரசு பிரதேசத் தமிழ்ப்பள்ளிகளில் அடையாளம் காணப்பட்ட சுமார் 120-150 மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்றுநர்களால் காற்பந்து பயிற்சிகள் வழங்கப்படும். அம்மாணவர்களுக்குக் காற்பந்து விளையாட்டில் ஆர்வம் மேலோங்குவதுடன் அவர்களின் விளையாட்டு ஆற்றலையும் மேம்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படும். இதன் விளைவாக மாணவர்களின் தன்னம்பிக்கையும் மேலோங்குகின்றது. இந்நிகழ்ச்சியின் வழி பள்ளிகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கும் விளையாட்டு நுட்பங்களைக் கற்று கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

தொன்று தொட்டு இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் குறிப்பாகக் காற்பந்து விளையாட்டிலும் பீடுநடை போட்டு நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவ்வகையான பாரம்பரியமும் பெருமையும் தொடர வேண்டுமென்பது தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவுக் குழுவினரின் அளப்பரிய அவா ஆகும்.

அதற்கேற்ப இளம் விளையாட்டாளர்களைத் தமிழ்ப்பள்ளிகளிலேயே உருவாக்குவதில் அனைத்துத் தரப்பினரின் பங்கு மிகவும் அவசியமானதும் காலத்திற்கேற்ற நடவடிக்கையுமாகும்.