எம்எச்370-இன் உடைந்த பாகம்தான் என்பதில் ஆய்வாளர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு

mhமலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச் 370  காணாமல்போய்  16  மாதங்கள்  ஆகும்  வேளையில்  புதிதாகக்  கிடைத்துள்ள  ஒரு  தடயம்  அந்த  விமானத்தைக் கண்டுபிடிக்கும்  நம்பிக்கையைத் தந்துள்ளது.

மடகாஸ்கார்  கரைக்கு  அப்பால்  மாரிசியஸ்  தீவிலிருந்து  175 கிமீ  தொலைவில்,  ரியூனியன் தீவில் விமானத்தின்  உடைந்த  பகுதி  ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டது  இந்த  நம்பிக்கையைத்  தந்துள்ளது. ஆனால், அது  239  பேருடன்  காணாமல்போன  அந்த  விமானத்தினுடையதுதானா  என்பது  இன்னும்  உறுதிப்படுத்தப்படவில்லை.

கண்டுபிடிக்கப்பட்டிருப்பது  ஒரு  விமானத்தின்  சிறகுப்  பகுதி  எனக்  கருதப்படுகிறது. ஆனால்,  அது  போயிங்  777  விமானத்தினுடையதுதானா  என்பதில்  வல்லுனர்கள்  கருத்து  வேறுபாடு  கொண்டுள்ளனர்.

அது  போயிங் 777  விமானத்துடையதுதான்  என்று  அமெரிக்க  வல்லுனர்கள்  கூறியதாக  கேன்பெரா  டைம்ஸ்  அறிவித்துள்ளது.

“வேறு  போயிங்  விமானம்  எதுவும்  காணாமல்போனதாக  அறிவிக்கப்படவில்லை  என்பதால்  அது  காணாமல்போன விமானத்தின்  பகுதியாகத்தான்  இருக்க  வேண்டும்  என்ற  முடிவுக்கு  ஆய்வாளர்கள்  வந்திருக்கிறார்கள்”, என்று  அது  கூறிற்று.

பிரெஞ்ச்  வான்  போக்குவரத்து  பாதுகாப்பு  வல்லுனரும் குற்றவியல்  ஆய்வாளருமான கிறிஸ்டோபர்  நவ்டின், கண்டுபிடிக்கப்பட்ட  பகுதி உருவில்  சிறியதாக  இருப்பதால்  எம்எச் 370  விமானத்தினுடையதல்ல  என்றார்.

“அது  எந்த  விமானத்தினுடையது  என்று  என்னால்  சரியாக  சொல்ல  முடியவில்லை. அது  இரட்டை  இயந்திரங்களைக்  கொண்ட  இலகுரக  விமானத்தினுடையதாக  இருக்கலாம்”, என  நவ்டின்  ரியூனியன்  செய்தி  நிறுவனத்திடம்  கூறினார்.

இதனிடையே,   அப்பகுதி காணாமல் போன MH370 விமானத்துடையதுதானா  என்பதை உறுதி செய்ய, மலேசியக் குழு  ஒன்று  ரியூனியனுக்கு  அனுப்பப்பட்டிருப்பதாக  போக்குவரத்து அமைச்சர் லியாவ் தியோங் லாய் தெரிவித்தார்.