மதுவிலக்கு கோரி இன்று பந்த்…..குடிகாரர்களுக்கு 80 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு!!

tn-policeசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இன்று அறிவித்துள்ள கடையடைப்பின் போது மதுக்கடைகளுக்கு பாதுகாப்பளிக்க 80 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்ததையடுத்து, தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மதுக்கடைகள் முன் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

அரசியல் கட்சிகள் தவிர கல்லூரி மாணவர்களும் தற்போது மது விலக்குக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். இதனிடையே தமிழகத்தில் மதுக்கடைகள் சூறையாடப்படும் சம்பவங்களும் தீக்கிரையாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க., த.மா.கா. பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய போராட்டத்தின் போது மதுக்கடைகளை வலுக்கட்டாயமாக மூடக்கோரி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய முழு அடைப்பின் போது மதுக்கடைகள், போராட்டக்காரர்களால் தாக்கப்படுவதைத் தடுக்க அனைத்து மதுபானக் கடைகள், மற்றும் பார்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மொத்தம் 80 ஆயிரம் போலீசார் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பேருந்து சேவைகளை பாதிக்கும் வண்ணம் யாரேனும் போராட்டம் நடத்தினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: