மாணவர்களுக்கு நல்லது செய்… சொன்ன கலாம்!… செய்யும் நடிகர் தாமு!!

dhamuசென்னை: சினிமாவில் நடிகராக இருந்த என்னை மாணவர் சமுதாயத்திற்காக நேரம் ஒதுக்க கூறினார் மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்று நடிகர் தாமு கூறியுள்ளார். மக்கள் உன்னை விரும்புகிறார்கள். எனவே நீ அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் கூறியதன்படி செய்து வருகிறேன் என்று நடிகர் தாமு கூறியுள்ளார். கடந்த வாரம் மரணமடைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரத்திற்கு சென்று அவரது புகழ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரபல நடிகர்களும், அரசியல் தலைவர்களும் ராமேஸ்வரத்திற்கு வந்து அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்தினர். அப்துல் கலாமின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் அருகிலேயே நடிகர் தாமு அமர்ந்திருந்தார். அப்துல் கலாம் உடல் மீது வைக்கப்படும் மலர் வளையங்களை எடுத்து அப்புறப்படுத்தும் பணியை மிக அமைதியாக, ஒருவித சோகத்துடன் செய்து கொண்டிருந்தார். மக்கள் ஜனாதிபதி கலாமின் மரணம் தாமுவிற்குள் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்திவிட்டது என்றே கூறவேண்டும். அப்துல் கலாமிற்கு அவர் செலுத்திய மவுன அஞ்சலியே அதனை வெளிப்படுத்தியது.

சினிமாவில் நடிகராக இருந்த என்னை மாணவர் சமுதாயத்திற்காக நேரம் ஒதுக்க கூறினார் டாக்டர் அப்துல் கலாம். ஒரு மாணவன் நினைதத்தால் என்ன வேணும்னாலும் சாதிக்க முடியும் என்பது போல், நீ மாணவரோடு கலக்க வேண்டும். மக்கள் உன்னை விரும்புகிறார்கள். எனவே நீ அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் கூறியதன்படி செய்து வருகிறேன் என்று கலாம் உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் தாமு.

உன் நேரத்தை மாணவர்களுக்காக ஒதுக்காமல் முழுநேரத்தையும் மாணவர் சமுதாயத்திற்காக செலவிடு என 2011ல் என்னிடம் தெரிவித்தார். இவர் கூறியதற்கிணங்க 7 லட்சம் மாணவர்களையும் , 8 ஆயிரம் ஆசிரியர்களையும் , ஐயாயிரத்தும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்களை சந்திக்க வைத்தார்.

ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பெற்றோர்களை சந்திக்க வைத்து இந்த புனிதமான பயணத்தை ஏற்படுத்தி தந்த புனித ஆத்மா நம்மை விட்டு பிரிந்தது என நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஒரு பெரிய ஆசிரியரை இழந்து விட்டோம். அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, ஒரு அப்பாவை போல எல்லாவற்றையும் நமக்கே கொடுத்து விட்டு போய்விட்டார். எண்ணற்ற அறிவியல் ஆய்வாளர்களையும் , கல்வியாளர்களையும் நமக்காக கொடுத்துவிட்டுப் போய் உள்ளார். நாம் எல்லோரும் இணைந்து அவரது பணியை தொடருவோம். கல்வித்துறைக்கு நிச்சயம் ஒரு பொற்காலம் மலரும் என்று கூறியுள்ளார் நடிகர் தாமு.

tamil.filmibeat.com