தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது

moscow-kremlin-nightஉலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமற்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர். ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை, சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது.

தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும் இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும் மூன்றாவதாக உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும் நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப் படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு உருசியர்கள் கூறும் காரணத்தை தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் இரண்டு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக “தமிழ் மொழி” தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை” என தமிழில் எழுதினோம்” என்று உருசியர்கள் கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குத் தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. தமிழர்களுக்குத்தான் தெரியவில்லை. தமிழில் எழுதுங்கள், தமிழில் பேசுங்கள், தமிழில் வழிபாடு செய்யுங்கள்,தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்க் கலை பண்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழ் எங்கள் உயிர்! தமிழ்க் கலை எங்கள் மூச்சு! தமிழ்ப் பண்பாடு எங்கள் வாழ்வு! திருக்குறள் எங்கள் வழிகாட்டி! என்பன அதன் முழக்கமாகும்.

இந்தக் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் உரையாடியது. திருமணங்கள் திருக்குறள் ஓதி செந்தமிழில் நடைபெற வேண்டும். திருக்கோயில் வழிபாடு வண்டமிழில் இருக்க வேண்டும்.

உங்கள் உறவுகளை தமிழில் அழையுங்கள். அப்பா, அம்மா என்ற அழகு தமிழ் இருக்க டடி, மமி எங்களுக்குத் தேவையில்லை. அங்கிள், ஆன்ரி வேண்டாம். மாமா, மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள். திருநாவுக்கரசர் இறைவனை ‘அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ’ என்று பாடியிருப்பதை கவனியுங்கள்.

தமிழ்மக்கள் தங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைச் சொற்றமிழில் செய்ய வேண்டும். கடவுளுக்கு மொழிச் சிக்கல் இல்லை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும். சிவனார் ‘அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக’ என்று சுந்தரரைப் பணித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியிருக்கிறார். சுந்தரர் ‘இறைவன் தமிழை ஒத்தவன்’ என்றும் நாவுக்கரசர் ‘பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்’ என்றும் ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்றும் சேக்கிழார் ‘ஞாலமளந்த மேன்மை தெய்வத் தமிழ்’ என்றும் இறைவனை தமிழாகவே போற்றியிருக்கிறார்கள்.

வள்ளலார் ‘எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!’ என்றுபாடி “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறார்.

https://www.facebook.com/groups/siddhar.science/