தமிழ்ப்பள்ளிகளிலும் தேசியப்பள்ளிகளிலும் சமநிலை மலாய் மொழி பாடத் திட்டம்: சுப்ரமணியம்-, கமலநாதன் நிலைப்பாடு என்ன ?

kula-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 21, 2015  

 

மலேசிய கல்வி  அமைச்சு  தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளில் மலாய் மொழியின் தரமும்  தேசியப்பள்ளிகளின்  தரமும் ஒன்றிணைக்கப்படும்  என அறிவித்துள்ளது.

 

தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் இந்த நாட்டில் 100 ஆண்டுகள்  வரலாறு கொண்டவை. அவற்றுக்கென்று  தனித்தன்மைகளும் சிறப்பு அம்சங்களும் உள்ளன.

 

உள்நோக்கம் என்ன?

 

உலகில்  மூத்த மொழிகளான  தமிழும் சீனமும் இந்த நாட்டில் கற்றல் கற்பித்தலில் இணைந்திருகின்றன என்பதே  இந்த நாட்டிற்கு  ஒரு பெருமையான விசயம். நிலைமை இப்படி இருக் , மலேசிய கல்வி அமைச்சு  புதிதாக  திட்டம் ஒன்றை  கொண்டு வந்திருப்பது நாம்  அனுபவித்து  வரும்  இந்தத் தனித்தன்மைகளுக்கு பங்கம் வருமோ என்று அஞ்சத்தோன்றுகிறது.

 

தமிழ் மற்றும் சீன மாணவர்களுக்கும் சுமை இல்லாமல் அதே வேளையில் மலாய்  மாணவர்களுக்கும் சுமையில்லாமல் ,தேசிய பள்ளிகளின் மலாய் பாடத்தின் தரத்தை கொஞ்சம் கீழே இறக்கி , தமிழ் சீனப்பள்ளிகளில் போதிக்கப்படும் மலாய் பாடத்தின் தரத்தை கொஞ்சம் மேலே உயர்த்தி  ஒரே பாடத்திட்டமாக கொண்டு வருவதுதான் இந்த புதிய பாடத் திட்டமாம்.

 

தமிழ்ப்பள்ளிகள் எதிர் நோக்கும் கட்டப் பிரச்சனை, நிலப்பிரச்சனை , ஆசிரியர் பற்றாக் குறை , வகுப்புகள்  பற்றாக்குறை,  மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி , அதிகமாக  இந்திய பெற்றோர்கள் உள்ள இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாமை போன்ற எவ்வளவோ பிரச்சனைகள்  இருக்க இவற்றிளெல்லாம் கல்வி அமைச்சு  கவனம் செலுத்தாமல்    மலாய்  மொழி  பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துவதன்  உள் நோக்கம் என்ன ?

 

தமிழ் சீனப்பள்ளிகளை மூடும் திட்டத்திற்கு புத்துயிரா?

 

MALAYSIA-VOTE-INDIANSகடந்த சில ஆண்டுகளாக  தமிழ்ப்பள்ளி மாணவர்களில் 60-70 விழுக்காட்டினர் யுபிஎஸ்ஆர் மலாய் மொழியில்   தேர்ச்சி  அடைகிறார்கள். முன்பு இருந்ததை  விட  இது  ஒரு  பெரிய  முன்னேற்றம். அறிமுகப்படுத்தவிருக்கும் இந்த  புதிய  பாடத்திட்டம் மாணவர்களுக்கு  மேலும்  சிரமத்தை கொடுத்து  அவர்களின் தேர்ச்சி  விகிதத்தை குறைக்கும் என்று  உறுதியாகக் கூறலாம். அதனால் மேலும் அதிகமான மாணவர்கள் புதுமுக வகுப்பிற்குள்  தள்ளப்படுவார்கள். அதனால்  நேரடியாக  முதலாம் ஆண்டிற்கு செல்லும்  தமிழ்ப்பள்ளி மாணவர்களின்  என்ணிக்கை மேலும்  சரிவுரும். பெற்றோர்களுக்கு  இது  மன உளைச்சளை  உண்டாக்கும். தமிழ்ப் பள்ளியில் போட்டதால்தானே இந்த நிலை ஆகவே அடுத்தடுத்த பிள்ளைகளை  மலாய் பள்ளிக்கே  அனுப்பலாம்  என்ற மனப்பாங்கு இந்தியப் பெற்றோர்களுக்கு  வரும். அதனால்  தமிழ்ப்பள்ளி  மாணவர்களின் எண்ணிக்கை  குறைந்து  தமிழ்ப்பள்ளிகளின்  எண்ணிக்கையும் குறையும் . சில அம்னோ அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புக்களுக்கு  இது  துணை போகும். இதற்கு  இந்திய சமுதாயம்  உடன்படுகிறதா ?

 

மலாய் மாணவர்கள் அவர்கள்  மொழியிலேயே தோல்வி அடைந்தாலும் அவர்கள் புதுமுக வகுப்பிற்குப்  போகத் தேவையில்லை. இது கல்வி அமைச்சின் கொள்கை. ஆனால் மற்ற பாடங்களில்  நல்ல தேர்ச்சி பெற்றிருந்தும் மலாய் மொழிப் பாடத்தில் மட்டும் தோல்வி கண்டால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கட்டயம்  புதுமுக வகுப்பிற்குச்  செல்ல வேண்டும். இதுவும் கல்வி அமைச்சின் கொள்கைதான். இரு வேறு கொள்கைகளை கொண்டு  பிரித்தாளும்  இந்த அரசு , மலாய் மொழிப்பாடத்தின் தரத்தை  உயர்த்தி அதில்  மேலும் தமிழ் மாணவர்களை  தோல்வி அடையச் செய்து தனது  நீண்ட கால குறிக்கோளாகிய  தமிழ் மற்று சீனப்பள்ளிகளை  மூடும் திட்டத்திற்கு  அடிகோல் நாட்டுகிறதோ என்று  அஞ்சத் தோன்றுகிறது!

 

மலாய் ஆசிரியர்களை அனுப்பும் திட்டம் ஏன்?

 

இப்பொழுதுள்ள பாடத்திட்டதின் வழியே  தமிழ் மற்றும் சீன ஆரம்பப்பள்ளி  மாணவர்கள் யுபிஎஸ்ஆர் மலாய்  மொழியில்  அதிகமாக தேர்ச்சி பெற்று  முதல் படிவம் செல்லமுடியும்  என்பதனை கல்வி அமைச்சு விவேகமாக ஆராயவேண்டும்..

 

மலாய் மொழி எல்லாப் பள்ளிகளுக்கும்  சமமாக ஆக்கப்பட்டால்  அதன் விளைவாக  மலாய் ஆசிரியர்கள்  தமிழ் மற்றும் சீன பள்ளிகளுக்கு அனுப்பப்படும்  சாத்தியக் கூறுகளும்  அதிகமாக இருப்பதாக  நம்பப்படுகிறது. மற்ற இன ஆசிரியர்கள்  தமிழ், சீன பள்ளிகளுக்கு வருவது ஆரோக்கியமானதே  என்றாலும் இதனால் நாளடைவில் மலாய்  ஆசிரியர்களின் ஆதிக்கதிற்கு  தமிழ் சீன பள்ளிகள் வந்துவிடுமோ என்ற அச்சமும்  நிலவுகிறது. இது  தமிழ், சீன பள்ளிகளின்  தனித்தன்மையயும்  தோற்றத்தையும்  பாதிக்க வல்லது.

 

மேலும்,  மலாய் இன ஆசிரியர்கள்  தமிழ், சீன பள்ளிகளில்  மலாய்  மொழி  போதிக்கும் பொழுது அவர்களுடைய ஈடுபாடும் அக்கறையும் உணர்வும் குறைவாக  இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்திய  ஆசிரியர்கள் மலாய் மொழியை போதிக்கும் பொழுது  அவர்களின்  ஈடுபாடு , அக்கறை , இன உணர்வு  உயர்ந்து இருப்பதாலும், இரு  மொழி ஆளுமையும் இருப்பதால்   மணவர்களுக்கு பாடம் கற்பித்தல் புரியும்  வகையில்  அமைகிறது என்றும்  சொல்லப்படுகிறது. அதோடு பெரும்பாலான  மலாய்  மொழி  ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளில்  2  ஆண்டுகளுக்கு  மேல் நீடிப்பதில்லை என்ற தகவலும் நமக்கு  கிடைத்துள்ளது.

 

ஒரே சீராக  இருக்கும்  தேசிய மொழியால்தான்   இன ஒற்றுமைக  மேலோங்கும் என்ற கூற்றும்  ஏற்புடையதாக இல்லை. இன ஒற்றுமைக்கும்  மொழியின்  ஆளுமைக்கும் தொடர்பு  உண்டு  என்று எந்த ஆய்வும்  கூறவில்லை. அதோடு மலாய் மொழி தமிழ், சீன மாணவர்களின் வழக்கு மொழி அல்ல. வீட்டிலும் சக  நண்பர்களிடம்  பேசும் போதும் அவர்களின் தாய்மொழியில்தான்  பேசுவார்கள். இது  தவிர்க்க முடியாத  ஒன்று. ஆனால் மலாய் மாணவர்களுக்கு வழக்கு  மொழி  மலாய் மொழியாக  இருப்பதால் அவர்களின் மொழி ஆளுமை மற்ற இன மாணவர்களை விட  கூடுதலாகவே காணப்படும். பள்ளியில்  மலாய் மொழித் தரத்தை  உயர்த்தினால் மட்டும்  மற்ற இன  மாணவர்கள் மலாய் மாணவர்களுக்கு இணையாக பாண்டித்தியம்  பெறுவார்கள்   என்பது நிச்சயமில்லை.

 

மொழி ஒரு தொடர்புக் கருவி. எல்லா குடிமக்களும்  தேசிய மொழியில்  குறிப்பிட்ட அளவில்  தேர்ச்சி பெற்றாலே போதும். மலாய் மொழியை எல்லா இனத்தவர்களும் தேசிய  மொழியாக  ஏற்றுக்கொண்டுள்ளார்கள்  என்பதில்  எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதற்காக  எல்லா இனத்தவரும்  சமமான  தரத்தில் அதைப் பயில வேண்டும்  என்பது மிகையான எதிர்ப்பார்ப்பு.

 

கமலநாதா?

 

kamalanatahanஇடை நிலைப்பள்ளி  முதல்  பல்கலைக்கழகம்  வரை  மலாய்  ஒன்றே போதனா மொழியாக இருப்பதால்  எல்லா இன மாணவர்களும்  சக மாணவர்களுடன்  தொடர்பு கொள்ள போதுமானதாக உள்ளது. அப்படி  இருக்கும் பொழுது  தமிழ், சீனப்பள்ளி மாணவர்களின்  மலாய்  மொழி தரம்  உயர்த்தப்பட்டால்  அது  இன ஒற்றுமையை  மேலோங்கச் செய்யும் என்ற விவாதம்  அர்த்தமற்றது.

 

நாட்டில்  இன ஒற்றுமை  மேலோங்க , சம உரிமை, சமமான வாய்ப்புகள், உயர்கல்விக்கூடங்களில்  தேர்ச்சிகேற்ற வாய்பு, அரசாங்க  வேலைகளில் இனப் பாகுபாடற்ற வாய்ப்பு, இவைதாம் தேவை. ஒற்றுமையை பரிணாம  வளர்ச்சியின் வழிதான் வளர்க்க முடியுமே தவிர  புரட்சியால் அல்ல என்பதை  அரசு புரிந்து கொள்ள வேண்டும்.அதற்கு தேவை ஒரு நேர்மையான அரசு.

 

ம.சீ.ச தலைவர்களும் , சீன அரசு சாரா அமைப்புக்களும்  இத்திட்டத்தை  கடுமையாக  எதிர்க்கும்  வேளையில் , துணைக் கல்வி  அமைச்சர் ப. கமலநாதன் மட்டும் இதற்கு  ஒப்புதல்  அளித்துள்ளார் என்று நான்  அறிகிறேன்..

 

தமிழ்ப் பள்ளிகளுக்குகு  தமிழரே ஊறு  விளைவிக்கக் கூடாது  என்ற எண்ணத்தில், நான் அறிந்தது உண்மையில்லை என்று  கமலநாதன்  வெளிப்படையாக கூற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.