ஜம்மு: பாகிஸ்தான் குண்டுவீச்சில் 3 பேர் பலி: இந்தியாவின் பதிலடியில் 8 பேர் சாவு?

27ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தையொட்டி சர்வதேச எல்லையில் உள்ள இந்திய கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் வெள்ளிக்கிழமை குண்டுவீசி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். மேலும், 17 பேர் காயமடைந்தனர்.

இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த கிராம மக்கள் 8 பேர் உயிரிழந்ததாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வட்டாரங்கள் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானின் எல்லைப் பாதுகாப்பு ரேஞ்சர்ஸ் படைப் பிரிவினர், ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி ஆர்.எஸ். புரா, ஆர்னியா பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்கள், ராணுவ நிலைகள் மீது வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் எந்திரத் துப்பாக்கிகளால் சுட்ட பாகிஸ்தான் படையினர், பின்னர் சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசினர்.

ஆர்.எஸ். புராவில் உள்ள கிஷன்பூர், ஜோராபார்ஃம், ஜுக்னு சாக், நவபிந்த், ஹார்னா, சியா, அப்துலியான், சந்து சாக் பகுதியில் நள்ளிரவு 1.45 மணியில் இருந்தும், ஆர்னியாவில் உள்ள பகுதிகளில் அதிகாலை 4.30 மணியிலிருந்தும் பாகிஸ்தான் படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். சிறிய ரக பீரங்கிகள் மூலம் வீசப்பட்ட பல குண்டுகள், கிராமப் பகுதிகளுக்குள் வந்து விழுந்து வெடித்தன.

இதில், ஆர்.எஸ். புராவில் 2 பேரும், ஆர்னியாவில் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று பிஎஸ்எஃப் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ஜம்மு நகர காவல்துறை ஆணையர் பவன் கோத்வால், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் கிராம மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஏராளமான கால்நடைகளும் இறந்துள்ளன. சில கட்டடங்களும் சேதமடைந்தன.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதில், பாகிஸ்தான் தரப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்றார் அவர்.

இதனிடையே, இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தானில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பினர் கூறுகையில், “சியால்கோட்டில் எல்லைக்கோடு அருகே இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் இறந்துவிட்டனர்; 22 பெண்கள் உள்பட 47 பேர் காயமடைந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தூதருக்கு சம்மன்
இஸ்லாமாபாத், ஆக.28: இந்திய ராணுவத்தினரின் தாக்குதலில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்துவிட்டதாக குற்றம்சாட்டி, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் டி.சி.எஸ். ராகவனை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாதில் உள்ள டி.சி.எஸ். ராகவனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் எய்ஜாஸ் அகமது அழைப்பாணை அனுப்பி நேரில் வரவழைத்தார். பின்னர், இந்திய ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதை தங்கள் நாடு ஏற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தாக்குதலில் 6 பேர் இறந்ததாகவும், 47 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஒரு குழந்தை உள்பட 8 பேர் பலியாகினர்’ என்றார்.

“பாகிஸ்தானின் ஒரே அச்சுறுத்தல் இந்தியாதான்’

பாகிஸ்தானுக்கு இந்தியாதான் ஒரே அச்சுறுத்தல் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற செனட் சபையில் உள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழு, ராவல்பிண்டியில் உள்ள ராணுவத்தின் முப்படைகளுக்கான தலைமையகத்துக்கு வியாழக்கிழமை சென்றது. அப்போது அக்குழுவிடம், மூத்த தளபதி ரஷாத் மகமூது, இந்தியா கடந்த சில ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6.6 லட்சம் கோடி) மதிப்பில் ஆயுதங்களை வாங்கியுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகின் 2ஆவது ஆயுத இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது; கடந்த சில ஆண்டுகளில் மட்டும் தனது ஆயுத இறக்குமதியை இந்தியா இரட்டிப்பாக்கியுள்ளது. வெளியுலகில் இந்தியாதான் பாகிஸ்தானுக்கு இருக்கும் ஒரே அச்சுறுத்தல் என்றும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டும் என்றும் ரஷாத் மகமூது தெரிவித்தார்.

-http://www.dinamani.com

TAGS: