தமிழ்த் தலைமைகளே உஷார்…! ஆபத்துக்கள் பல முனையில் இருந்து..?

ambassoder1தமிழர்களின் வாழ்வியலோடும் இலக்கியங்களிலும், தூது என்னும் சொற்களை நாம் கண்டிருக்கின்றோம். நமக்கு வேண்டியவர்களிடம் நம்மால் பேச முடியாமல் போனால் நம் சார்பில் இன்னொருவரை அனுப்புவதை தூது என்கின்றோம்.

இத்தூதை தமிழர்களின் இலக்கியப்பரப்பில் அதிகம் காணலாம். சங்க காலத்தில் இருந்து இன்று வரை தூதுவிடும் வழமை நமது பண்பாட்டில் பட்டுத்தெறித்திருக்கின்றது.

சங்ககாலத்தில் தலைவனை காணத்துடிக்கும் தலைவி தனது தோழியை தூதனுப்புவாள். தலைவியின் வேதனையை தலைவன்பால் அவள் கொண்ட காதலை தோழி தலைவனிடத்தில் விபரிப்பாள்.

இது சங்ககாலத்தில் நிகழ்ந்த தூது என்றால், பிற்காலப்பகுதிகளில் எழுந்த பல இலக்கியங்களில் தூதின் வடிவங்கள் பரிணமிக்கின்றன.

போர்க்களத்திற்கான தூது, மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்குமான தூது, போர் ரகசியம் தொடர்பான தூது, ஒற்றனுக்கும் மன்னன் அனுப்பும் தூது என்று தூதுக்களை வகைப்படுத்தினாலும், தூதுவிடும் பொழுது அதற்கு பலவாறான ஆதாரங்கள் உண்டு என்பதனை நோக்கவேண்டியிருக்கின்றது.

கிளியை, புறாவை, நண்பர்களை, காற்றை  என தூது விடுவதை நாம் படித்திருக்கிறோம். குறிப்பாக கம்ப ராமாயணத்தில் இராவணனுக்கு அனுமனைத் இராமன் தூது அனுப்பியதை இவ்விடத்தில் சுட்டி நிற்கலாம்.

அதேபோன்று துரியோதனனிடத்தில் இறைவனான கிருஸ்ணர் தூது சென்றதையும் நாம் நோக்கலாம். இவ்விதமான தூதுக்கள் ஏன்? எதற்கு நிகழ்த்தப்படுகின்றது என்பதை நாம் உன்னிப்பதாக அவதானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

ஆம், தூதின் நோக்கம், நம்மை சமாதானத்திற்கு அழைத்து வரல். எங்களது இயலாமையை அவர்களுக்கு தெளிவுபடுத்தல். அழிவுகள் உண்டாகும் என்பதை எடுத்துரைத்தல். காத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளல், முடியாது என்பதை மறுப்பதற்கு தூது அனுப்புதல் என்பதை கணிப்பிடலாம். இன்னும் பலவும் உண்டு.

இலக்கியங்களில் படைக்கப்பட்ட தூதுக்களை தமிழீழத்திலும் அழகாக தமிழீழக் கவிஞர் கையாண்டுள்ளார். 90களில் இந்திய இராணுவத்தினர் ஈழத்தில் அமைதிப் படை என்கின்ற பெயரில் உள்நுழைந்து மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த வேளை, எங்கள் இனம் பட்ட வேதனைகளையும், துன்பத்தையும் தமிழ் நாட்டில் இருக்கும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு தெரியப்படுத்த, வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் இருந்தொரு சேதி சொல்லு.. ஈழத்தில் நாம்படும் வேதனைகள்..! என்னும் பாடல் வரிகளினூடாக காற்றினை தூதனிப்பியிருப்பார் கவிஞர்.

தமிழினத்தின் துன்பத்தை காற்றே அதிகம் உணர்ந்திருக்கும் என்பது கவிஞரின் முடிவு போலும்.

இவ்வாறான தூதுக்கள் தான் தமிழீழப் போராட்டத்தை சிதைத்தது என்பதையும் நாம் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

2000ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக இலங்கை இராணுவத்தினரை விட மிகவும் பலபொருந்தியவர்களாக, நினைத்தும் பார்க்க முடியாத இடத்தில் அவர்கள் வளர்ந்திருந்தார்கள்.

இலங்கை இராணுவத்தினரால் தீரவே போராட முடியாத சூழலில் தான் இந்த தூது என்னும் கலை பயன்படுத்தப்பட்டது.

ஆம்! சர்வதேச நாடுகளுக்கும் பறந்த தூதுவர்களான, அன்றைய பிரதமர், ரணில், மங்கள சமரவீர என்று இலங்கையின் தூதுப்புறாக்கள் உல நாடுகளை கெஞ்ச, அக் கெஞ்சலின் தன்மையை உணர்ந்த சர்வதேசம், தங்கள் தூதுக்களை புலிகளிடம் அனுப்பியது.

இந்தியா சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்துவதாக  கூறி, நோர்வே தலைமையில் சமாதான ஒப்பந்தத்தை கொண்டு வர, அதற்கு அமெரிக்கா தலையசைக்க, ஜப்பான் ஆமாம் போட தூதுவர்கள் வன்னிப் பெரு நிலப்பரப்பிற்குள் பிரபாகரனைக் காண ஓடோடி வந்தனர்.

எரிக்சொல்ஹெய்ம், யசூசி அக்காசி, ரணில் விக்ரமசிங்க, ரிச்சட் ஆர்மிடஜ் என்று ஒரு பெரும் படையெடுப்பே வன்னிக்குள் புகுந்தது. இத்தூதுக்கள் என்னமோ தமிழர் தரப்பை விரும்பி வந்தவர்கள் அல்ல.

இலங்கை அரசாங்கத்திற்கு ஆட்சிசன் கொடுத்து புலிகளிடம் இருந்து மீட்கவே புறப்பட்டு தூதாக வந்தனர் வன்னிக்கு.

அவர்களின் உண்மையான எண்ணம் சமாதானத்தை விரும்புவதாக இருந்ததில்லை. சந்திரிக்காவின் ஆட்சி இக்கட்டில் இருப்பதை உணர்ந்த அப்போதை இலங்கைப் பிரதமர் உடனடியாக விரைந்து செயற்பட்டார். இலங்கை இராணுவம் புலிகளின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்டது.

அன்று சமபலத்தோடு இருந்த புலிகளை மெதுவாக நசுக்கவும், சரிந்து வீழ்ந்த தமது படைகளை சீர்செய்யவும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. அது தான் 2002ம் ஆண்டு சர்வதேச நாடுகளின் அனுசரனையுடனான சமாதான ஒப்பந்தம்.

சர்வதேச தூதுவர்களின், உதவியோடு தனது தூது அதாவது இவ்விடத்தில் ரணில் ஒற்றன் என்னும் வேடம் தரித்தார். சரியாகவே ஒற்றனின் பணியை செய்து முடித்தார்.

ஆம்! புலிகளின்  அப்போதைய கிழக்கின் தளபதியாக இருந்த கருணா அம்மானை புலிகள் அமைப்பில் இருந்து பிரித்தெடுத்து, புலிகள் அமைப்புக்குள் பிளவுகளை பிசகாமல் செய்தார் ரணில்.

பிரிப்பதிலும், பிளவுகளை ஏற்படுத்துவதிலும், ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதிலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு நிகர் ரணிலே என்றால் அது மிகையல்ல.

2002ம் ஆண்டு ரணில் புலிகளை ஒப்பந்தத்திற்குள் மடக்க 2009ம் ஆண்டு மகிந்த புலிகளையும், தமிழர்களையும் நந்திக்கடலுக்குள் அடக்கினார்.

இவ்விடத்தில் தான் இன்றைய தமிழர் தரப்பு சற்று நிதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய இக்கட்டான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய சூழலிற்குள் அகப்பட்டிருக்கின்றார்கள்.

2000ம் ஆண்டு இலங்கை இராணுவத்தை ரணில் விக்ரமசிங்கவினால் காப்பாற்ற முடிந்ததெனில், 2009ல் புலிகளை மகிந்த சிந்தனையில் அடக்க மகிந்தவினால் முடிந்தது என்றால்..!

2009ல் மகிந்த சிந்தனையில் அழிக்கப்பட்ட புலிகளையும், அப்போரினால் ஐ.நா மன்றம் ஏறிய போர்க்குற்ற விசாரனைகளையும், உள்நாட்டுப்பிரச்சினையாக கவனிப்பாரின்றி இருந்த தமிழர் உரிமைப்போராட்டத்தை மீண்டும் உள்நாட்டுப் பிரச்சினை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சர்வதேசம் மீண்டும் சொல்ல வைக்க ரணில் சிந்தனையால் 2015ல் முடியும்.

இதை நம் தமிழர் தரப்பு நிதானமாக கையாளவேண்டிய தருணமிது.

ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான கருத்துக்களை சர்வதேசம் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது.

வெளிநாட்டுத்தூதுவர்கள் தை மாதத்தில் இருந்து இலங்கைக்கும், இலங்கை தூதுவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பதுமாக தூதுக்கள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன. இது தமிழர்களின் அரசியல் பின்புலத்திற்கு நல்லதா என்பதை சற்று சிந்தித்தாக வேண்டும்.

இன்னொரு புறத்தில் புலிகளையே பிளவுபடுத்தியவர்களுக்கு, இன்று தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உண்டு இல்லை என்று ஆக்குவதற்கு அதிக நாட்கள் தேவையில்லை என்பதையும் இவ்விடத்தில் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எதுவாயினும் சிந்தித்து செயலாற்றுங்கள்.  தூதுவர்களும் ஒற்றர்களும் நமக்குள் எந்த வடித்திலேனும் உள்நுழையலாம் கவனம்.

– எஸ்.பி.தாஸ் –

-http://www.tamilwin.com

TAGS: