ஒற்றுமை ஓங்க ஒரே வகைப்பள்ளி வேண்டும், பெர்காசா கோரிக்கை

 

Perkasaonestreamschool1மலாய்க்காரர்களின் உரிமைக்காக போராடும் பெர்காசா நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே வகைப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று கோருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற சிவப்புச் சட்டை பேரணியில் சீனமொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து பெர்காசாவின் இக்கோரிக்கை வெளிவந்துள்ளது.

மலேசியாவில் இன உறவுகள் நன்றாக இல்லை, ஏனென்றால் குழந்தைகள் வெவ்வேறான சமூகங்களில் வளர்கின்றனர் என்று பெர்காசாவின் கல்விப் பிரிவு தலைவர் சிராஜுடின் சாலே கூறினார்.

“அவர்கள் பள்ளிக்கூடத்தை விட்ட பின்னர்தான் நண்பர்களாகின்றனர், சகித்துக்கொள்ளும் தன்மையைப் பழக்கப்படுத்திக் கொள்கின்றனர்.

“பகசா மலேசியாவை போதனை மொழியாகக் கொண்ட ஒரே வகைப்பள்ளி வழியாக சமுதாய நிலைத்தன்மை மற்றும் தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கையை பெர்காசா கொண்டுள்ளது. அது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே செய்யப்பட்டிருக்க வேண்டும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஒற்றுமையை முன்நிலைப்படுத்தி அமைதியை நேசிக்கும் அனைத்து மலேசியர்களாலும் இது ஆதரிக்கப்பட வேண்டும் என்றாரவர்.

ஒரே வகைப்பள்ளி என்பதன் மூலம் ஆங்கில மொழியில் ஏற்றம் காண்பதற்கான முயற்சிகள் தள்ளி வைக்கப்படும் என்றாகாது என்று அவர் மேலும் கூறினார்.

 

எல்லாம் தாய்மொழிப்பள்ளியால் வந்த வினை!Perkasaonestreamschool2

 

தொடக்கப்பள்ளி அளவில் ஒருமைப்பாடு இல்லாததற்கு தாய்மொழிப்பள்ளிகள்தான் காரணம் என்று பிரதமர் துறை அமைச்சர் வாஹிட் ஒமார் புலம்பியிருந்தார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பெர்காசா இந்த கோரிக்கையை வெளியிட்டுள்ளது.

“நம்மிடையே ஒருமைப்பாடு இல்லாததற்கான காரணங்களில் ஒன்று நமது குழந்தைகள் அவர்களின் தொடக்கப்பள்ளி அளவிலான படிப்பை வெவ்வேறான பள்ளிகளில் மேற்கொண்டது.

“இது நாம் சமாளித்தாக வேண்டியதாகும். அப்போதுதான் நமது குழந்தைகள் ஒரே பள்ளியில், ஒரே வகைப்பள்ளியில், கல்வி கற்க முடியும்”, என்று வாஹிட் ஒரு கருத்தரங்கில் பேசியதாக கூறப்படுகிறது.