தூதர் விளக்கமளிப்புக்கு அழைக்கப்பட்டதில் நெறிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை

nazriவெளியுறவு  துணை அமைச்சர்  ரீஸல்  நைனா  மரைக்கான்,  சீனத்தூதர்  ஹுவாங்  ஹுய்காங்கை  வெளியுறவு  அமைச்சுக்கு அழைத்தபோது  நெறிமுறைகளைச்  சரியானபடி  பின்பற்றவில்லை.

ஹுவாங்கை  வெளியுறவு  அமைச்சு  விளக்கம்  கேட்பதற்கு அழைப்பதாக  இருந்தால்  மலேசிய  வெளியுறவு  அமைச்சர்தான்  அழைக்க  முடியும், அதுவும் பிரதமருடன்  ஆலோசனை  கலந்த  பின்னரே  அழைக்க  முடியும்  எனச்  சுற்றுலா,  பண்பாட்டு அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார்.

அவர்கள்  இல்லாத  நிலையில்  இடைக்கால  வெளியுறவு  அமைச்சராக  இருப்பவர்  உள்நாட்டு  வாணிப, கூட்டுறவு  மற்றும்  பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்  ஹம்சா  சைனுடின்.

“இடைக்கால  வெளியுறவு  அமைச்சராக  ஹம்சா  இருப்பதால்  துணை  அமைச்சர்  தூதரை அழைக்க  முடியாது”, என  நஸ்ரி  கூறினார்.

அப்படியானால்,   ஜூலை  28-இல்  நடந்த  அமைச்சரவை  மாற்றத்தில்  துணை  அமைச்சரான  ரீஸல் தவறு  செய்து  விட்டாரா  என்றால்  அதையும்  உறுதியாக  சொல்ல  முடியவில்லை  நஸ்ரியால்.

“எனக்குத்  தெரியவில்லை. ஆனால், நம்  நிர்வாக  முறையில்  துணை  அமைச்சர்  அமைச்சரைப்  பிரதிநிதிப்பதில்லை.

“இன்னொரு  அமைச்சரால்தான்  முடியும். இப்போது  இடைக்கால  வெளியுறவு  அமைச்சராக  இருப்பவர்  ஹம்சா”, என்றார்.

ஹம்சா  தடுத்து  விட்டதால்  ஹுவாங்குக்கு  விடுத்திருந்த  அழைப்பாணை  இரத்துச்  செய்யப்பட்டதாக   விஸ்மா  புத்ரா  அறிவித்திருந்தது.

“நாட்டில்  எல்லாம்  நல்லவிதமாக  இருப்பதையும்  பாதுகாப்பாக  இருப்பதையும், சீன-எதிர்ப்புணர்வு  இல்லை  என்பதையும்  சீனச்  சுற்றுப்பயணிகளுக்கு  உணர்த்துவதற்காகவே  தூதர்  பெட்டாலிங்  ஸ்திரீட்  சென்றதாக  என்னிடம்  விளக்கினார்.

“அதற்காகத்தான்  அங்கு  சென்றார். ஆக, நமக்கு  நல்லதுதான்  செய்திருக்கிறார்”, என  நஸ்ரி  தெரிவித்தார்.

சீனத்  தூதர்  அவருடைய  செயல்களுக்கு  மன்னிப்பு  கேட்க  வேண்டியதில்லை  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

“அது  தேவையில்லை. தூதர்  மன்னிப்பு  கேட்க  வேண்டியதில்லை.  அவர்  தப்பு  எதுவும்  செய்யவில்லையே”, என்றும் அவர்  வலியுறுத்தினார்.