காலத்தை வென்றவன் நீ…..வீரசேனன்

22-வது பி.வீரசேனன் சுழற்கிண்ண காற்பந்து விளையாட்டுப் போட்டி

veerasenan

கடந்த 20 செப்டம்பர் 2015-ல், மந்தின் திடலில், பி.வீரசேனன் சுழற்கிண்ணக் காற்பந்து போட்டி 22-வது முறையாக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மந்தின் எப்.சி. (FC) குழு இவ்வாண்டு இப்போட்டியை மலேசிய சோசலிசக் கட்சி, செமினி கிளை மற்றும் சிரம்பான் கிளையுடன் இணைந்து நடத்தி முடித்தது.

சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 12 குழுக்கள் இதில் பங்குபெற்றன. குழுக்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. பண அடிப்படையில் இல்லாமல்;  ஒரு சகோதரத்துவ அடிப்படையிலேயே போட்டி நடந்தேறியது. போட்டியின் இறுதியில், 22-வது  சுழற்கிண்ணத்தை நியாதோ யுனைத்தட் எப்.சி. (Nyatoh United FC)  குழு தட்டிச் சென்றது.

அன்றைய இரவு, பி.வீரசேனனின் போராட்ட வரலாற்றைப் பகிர்ந்துக் கொள்ள, ஒரு சிறப்பு ஒன்றுகூடலும் நடந்தது.

 யார் இந்த பி.வீரசேனன் ?

veerasenan11949-ல், 22 வயதிலே பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கே மிரட்டலாக இருந்தவர். இவரின் துணிச்சலையும் இவர் பின்னால் நின்ற  தொழிலாளர்களின் சக்தியையும் கண்டு பயம் கொண்ட பிரிட்டிஸ்சார்;  22 வயதே நிரம்பிய இவரைச் சுட்டு வீழ்த்தினர். தொழிலாளர் வர்க்கப் போராட்டத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்தவர் பி.வீரசேனன்; வீரமும் துடிப்பும் மிகுந்த ஓர் இளைஞன்.

இத்துணை இளம் வயதில் இவர் புரிந்த சாதனைகள்:

  • சிங்கப்பூர் துறைமுகத் தொழிற்சங்கத்தின் செயலாளராக சேவையாற்றியுள்ளார்.
  • தொழிலாளர் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு மாநிலத்தின் தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்தினார்.
  • பி.வீரசேனன் அவர்தம் தோழர்களான கணபதி போன்றோருடன் இணைந்து, பான் மலாயா தொழிற்சங்க கூட்டமைப்பை (PMFTU) உருவாக்கி; மலாயாவின் எல்லா மாநிலங்களிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுபடுத்தினார். 1946-ல், இவர் தலைமையில் இயங்கிய சிங்கப்பூர் துறைமுகத் தொழிற்சங்கம் தொழிலாளர்களுக்கான பல கோரிக்கைகளை முன் வைத்தது, அதற்கு முதலாளி வர்க்கத்திடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. அச்சமயத்தில் இவர்கள் தொழிலாளர்களுடன் இணைந்து 16 நாள்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்துகள், கார்கள், லோரிகள் எதுவும் நகரவில்லை. தெருக்கள் சுத்தம் செய்யப்படாமல் கிடந்தன, கால்வாயில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது, வியாபாரம் நடைபெறவில்லை. தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் தாக்கத்தால், சிங்கப்பூரே ஸ்தம்பித்து போனது.
  • இக்காலக்கட்டத்தில் தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின் போது, 50 000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் வல்லமை படைத்திருந்தார் பி.வீரசேனன்.
  • 1945 மற்றும் 1946-களில் பலவகையான சோதனைகளுக்கு இடையில், தொடர்ச்சியானப் போராட்டங்களின் வழி, தொழிலாளர்களுக்கு உடனடியாக கணிசமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்தார். ஓர் ஆண் தொழிலாளியின் நாள் சம்பளம் 55 காசிலிருந்து 95 காசாக உயர்வு கண்டது.

 

  • தமிழ்ப்பள்ளிகள் அனைத்து தோட்டங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்ற கொள்கை உருவாக்கப்பட்டது.

 

  • வாரத்தில் 6 நாள்கள் மட்டும் வேலை செய்தல்.
  • அடிமைத்தனமான குத்தகை முறையை ஒழித்தல். மனிதனுக்கு மனிதன் அடிமையில்லை; ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு மனிதன் என்ற வகையில் மதிக்கப்பட வேண்டும் என்ற எழுச்சியை, அடிமைத்தன உணர்வுகளால் அல்லல்பட்டுக் கொண்டிருந்த பாட்டாளிகள் மத்தியில் ஏற்படுத்தினார்.

பி.வீரசேனன் போராடிய அடிப்படை உரிமைகள்

veerasenan2 உழைப்புக்கு ஏற்ற உயர்வான சம்பளம்

மனிதன் வாழ்வதற்கான நல்ல வீடு

குடிக்க நல்ல தண்ணீர்

மனிதன் என்ற உரிமை

இவரின் முடிவு:

தொழிலாளர் போராட்டத்தில் சீறிப் பாய்ந்துக் கொண்டிருந்த வீரசேனனை முடித்துக் கட்ட திட்டம் தீட்டினர் ஆங்கிலேயர். 3 மே, 1949-ல் வீரசேனன் ஆங்கிலேயர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இருண்டிருந்த பாட்டாளி மக்களின் வாழ்க்கையில் மெழுகுவர்த்தியாக சுடர் விட்டு, ஒளி கொடுத்த பி.வீரசேனனை அழித்து விட்டனர். ஆனால், அந்த ஒளி ஒரு போராட்ட வழியாக உருவாகும் என்பதை நினைத்து பார்க்க மறந்து விட்டனர்.

பி.வீரசேனனுக்கும் காற்பந்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. ஆனால், இன்றைய இளைஞர்கள் பி.வீரசேனனின் கொள்கைப் பிடிப்பையும் அவரது துணிச்சலான குணத்தையும் அறிந்து; பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே இக்காற்பந்து போட்டியை ஆண்டுதோறும் தவறாமல் மலேசிய சோசலிசக் கட்சி நடத்தி வருகிறது.