தாண்டவக்கோனே… பறை இசைத்து தமிழ் வளர்க்கும் அமெரிக்கத் தமிழர்கள்!

thandavakoneடல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு, ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் தமிழ்க் கல்வி வழங்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ‘அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் (American Tamil Academy) நிதியுதவிக்காக, அமெரிக்கத் தமிழர்களின் பறையிசை நடனம் நடைபெற உள்ளது. டல்லாஸில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான சாஸ்தா தமிழ் அறக்கட்டளை இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அமெரிக்கா முழுவதும் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. முழுக்கவும் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் அமைப்புகளால் இவை நடத்தப்படுகிறது. இந்த தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வந்து, அமெரிக்கப் பள்ளிகளில் தமிழ்பாடத்திற்கு அங்கீகாரம் மற்றும் மதிப்பெண் பெற்றுத் தரும் முயற்சியில் அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் ஈடுபட்டு வருகிறது. தற்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படுகின்றன.

அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகத்தின் அடுத்த கட்ட முயற்சிகளுக்கான நிதியுதவிக்காகவும், சென்னை உதவும் கரங்கள் அமைப்பின் திட்டங்களுக்காகவும் மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஏனைய அறப்பணிகளுக்காகவும் நிதி திரட்டுவதற்காக ‘தாண்டவகோனே’ என்ற பல்சுவை இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு, அறப்பணிகளுக்கான நிதிதிரட்டும் இந் நிகழ்ச்சி, அக்டோபர் 3ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், கார்லண்ட், க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற உள்ளது.

தமிழர் மரபுகளையும் தொல்கலைகளையும் மீட்டெடுக்கும் முயற்சியில ஈடுபட்டுள்ள அமெரிக்கத் தமிழர்கள் ‘தமிழ் நிகழ்கலைக் கழகம்’ என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பை நிறுவியுள்ளார்கள். தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை, கம்ப்யூட்டர் காலத்து தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி, இந்த கலைகள் மீண்டும் உயிர்ப்பெற்று தழைத்தோங்கச் செய்யும் நோக்கத்துடன் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் ஒரு அங்கமான ‘அமெரிக்க பறையிசை நடனக்குழு’ தாண்டவகோனே நிகழ்ச்சியில் பறையிசைத்து நடனம் ஆட உள்ளனர்.

ஆண்களும் பெண்களும் சரிசமமாக இடம்பெற்றுள்ள, இந்த குழுவினர் அனைவரும் உயர்கல்வி படித்து, உயர் பதவிகளில், கை நிறைய சம்பாதிக்கும் தமிழர்கள் ஆவார்கள். பழந்தமிழர்களின் தொல்கலைகள் மீது கொண்ட ஆதீத ஆர்வத்துடன், பறையிசையை அனைத்து தரப்பினரிடமும் பரவலாக்கும் முயற்சியில் உள்ள இவர்கள், தங்களது ஓய்வு நேரத்தையும் சொந்தப் பணத்தையும் செலவு செய்து இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பறையிசை என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளம் அல்ல, பரம்பரைத் தமிழர்களின் கண்டுபிடிப்பான, உலகின் முதல் தாள இசைக் கருவி என்ற உண்மையை உலகம் முழுவதும் உரக்கச் சொல்லும் விதமாக இவர்களின் பங்களிப்பு உள்ளது.

குழந்தைகளுக்கு தமிழ்க் கல்வி, நலிந்தோர்களுக்கு ஆதரவு, வெற்றி பெற்ற தமிழர்களை சிறப்புவித்தல் என பன்முக நோக்கத்துடன் செயல்பட்டுவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 5ம் ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக தாண்டவகோனே இடம்பெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 200 ஆயிரம் டாலர்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் மூலம் திரட்டி, உதவும் கரங்கள், சக்தி கலைக்குழு, அமெரிக்காவில் ஏழை எளியவர்களுக்கு உதவி உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகள் செய்துள்ளனர். இந்த ஆண்டு உதவும் கரங்கள் மற்றும் அமெரிக்கத் தமிழ்க்கல்வி கழகத்திற்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு விழாவில், பத்திரிக்கைத்துறையின் உயரிய ‘புலிட்சர் விருது’ பெற்ற பழனி குமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் மகனாக இவர், நியூயார்க் நகரில் ‘ வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிக்கையில் டெக்னிக்கல் ஆர்க்கிடெக்ட் ஆக பணியாற்றி வருகிறார். அமெரிக்க மருத்துவக் காப்பீடு திட்ட பணப்பரிமாற்றம் தொடர்பான விவரங்களை புதிய தொழில் நுட்பத்துடன் ஆராய்ச்சி செய்து, அந்த தகவல்களுடன் வெளியான கட்டுரைக்காக பழனி குமணனுக்கும் அவரது குழுவினருக்கும் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. முன்னதாக 2012 ஆம் ஆண்டு Gerald Loeb Award விருது அவருக்கு கிடைத்துள்ளது.

தற்போது அமெரிக்க அரசியல் களம் சூடான நிலையில், அது குறித்து பல்வேறு ஆராய்ச்சி தகவல்களை திரட்டும் பணியில் படுபிஸியாக இருக்கிறார். திரை நட்சத்திரங்கள் இல்லாமல், தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு நிதியுதவி, ஆதரவற்றோருக்கு நலத்திட்டம், பழம்தமிழர்களின் தொல்கலைகள் மீட்பு, சாதனைத் தமிழருக்கு பாராட்டு என பன்முகம் கொண்ட தமிழர் நிகழ்ச்சி, அமெரிக்க மண்ணில் நடைபெறுவது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை தானே! இத்தகைய தமிழர்கள் முயற்சிக்கு ஒன் இந்தியா தமிழ் உறுதுணையாக நிற்பதில் பெருமை கொள்கிறது!