நஜிப் ‘பத்திரமாக வெளியேற’ இடமளித்து நாட்டை அழிவிலிருந்து காப்போம்

kadமூத்த செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்,  நாட்டைப்  பாதுகாக்க  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  “பத்திரமாக  வெளியேற” இடமளிக்க  வேண்டும்  என்று  பரிந்துரைத்துள்ளார்.

“அவர் பத்திரமாக  வெளியேற  வழி ஏற்படுத்திக்  கொடுக்க  வேண்டும். அவர் பதவி விலகிச் செல்வதை  எளிதாக்குவோம்”, என  காடிர்  நேற்றிரவு  தம்  வலைப்பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.

“எது  முக்கியம்  என்று  நம்மை நாமே  கேட்டுக்கொள்ள  வேண்டும்-  ஊழல்  குற்றத்துக்காக  அவரைக்  கூண்டில்  நிறுத்துவதா,  நாட்டைப்  பாதுகாப்பதா?”.

கைது  செய்யப்பட்டு குற்றம்  சாட்டப்படலாம்  என்ற  பயத்தால்  நஜிப்  பதவி  விலக  மாட்டார்  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  கூறியபோது  அவர்  புதிதாக  எதையும்  சொல்லவில்லை  என  காடிர்  குறிப்பிட்டார்.

ரோபர்ட்  முகாபே  35 ஆண்டுகளாக ஸிம்பாப்வே  அதிபராக  இருந்தபோது  அந்நாடு  பட்ட துன்பங்களை  அவர்  சுட்டிக்காட்டினார். அவரது  ஆட்சியில்  ஸிம்பாப்வே  பொருளாதாரம்  படுவீழ்ச்சி  கண்டது. அதன்  டாலரும் மதிப்பிழந்து  கிடந்தது.

“நமது  பொருளாதாரம்  அதலபாதாளத்தை  நோக்கிச்  செல்லும்போது முகாபேயைப்போல்  அவரே(நஜிப்)  ஆட்சியில் இருக்கட்டும்  என்று  விட்டு  வைக்கப்போகிறீர்களா? அல்லது  பத்திரமாக  வெளியேறிச்  செல்ல  இடமளிக்கப்  போகிறோமா?

“அவரைப்  பழி வாங்கும்  வேட்கையை  ஒதுக்கி  வைத்து  நாட்டை  அழிவிலிருந்து  காப்பதில்  கவனம்  செலுத்துவோம். நடப்பு  நிலைமை  தொடருமானால்  அதனால்  மோசம்  நமக்குத்தான்”, என  காடிர்  எடுத்துரைத்தார்.

நஜிப்  நாட்டுக்கு  உள்ளேயும்  வெளியேயும்  துணிச்சல்  முகம்  காட்டுகிறார்.

“ஆனால்,  அவருக்குத்  தெரியும்,  பதவி  விலகினால்  அல்லது  சட்டத்துறை  தலைவர்  அலுவலகம்,  போலீஸ், மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  ஆகியவை  மீதுள்ள  கட்டுப்பாட்டை இழந்தால்  உடனே  கைது  செய்யப்பட்டுக்  குற்றம்  சாட்டப்படுவோம்  என்பது.

“இந்த  அழிவைத்  தடுத்து  நிறுத்த  எதுவும்  செய்யாதிருந்தால்  வருங்காலத்  தலைமுறையினர்  நம்மைத்தான்  குறை  சொல்வார்கள்…..நம்  பிள்ளைகள்,  பேரப்  பிள்ளைகளின்  எதிர்காலத்தை  எண்ணிப்  பார்க்க  வேண்டும்”,என  காடிர்  வலியுறுத்தினார்.

பிலிப்பீன்ஸ்  பற்றிக்  குறிப்பிட்ட  காடிர்  மலேசியாவைவிட  நல்ல  நிலைமையில் இருந்த  நாடு  அது  என்றார்.

“ஒரு  மோசமான  தலைவரும்  அவரின்  மனைவியும்  அதைக்  குட்டிச்  சுவராக்கினர். (பெர்டினண்ட்) மார்க்கோஸ்  இறந்து  நீண்ட  காலமாகி  விட்டது. ஆனால், அவரும்  அவரின்  மனைவியும்  ஏற்படுத்திய  அழிவிலிருந்து  பிலிப்பீன்ஸ்  இன்னும்  மீட்சி  பெறவில்லை.

“மார்க்கோஸும்  பணத்தைத்  தண்ணீர்போல்  செலவிட்ட  அவரின்  மனைவியும்   1986  பிப்ரவரி  25-இல்  வெளியேறி  இருக்க  மாட்டார்கள்  அமெரிக்கா அவர்களின்  பாதுகாப்புக்கு  உத்தரவாதம்  அளிக்காமலும்  அதிபர்  கொராசோன்  அக்குவினோ  அவர்கள்  பத்திரமாக  வெளியேற  இடமளிக்காமலும்  இருந்திருந்தால்”, என்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.