குவான் எங்: நம்பிக்கை-இல்லாத் தீர்மானத்தை டிஏபி ஆதரிக்கும்

guanநாடாளுமன்ற  எதிரணித்  தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் மீது  நம்பிக்கை-இல்லா வாக்கெடுப்பு  நடத்த  தீர்மானம்  கொண்டு  வந்தால்  டிஏபி  அதை  ஆதரிக்கும்.

இதைத்  தெரிவித்த  அதன்  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  அது  ஒரு  முக்கியமான  தீர்மானம்  என்றும்   அதை  எதிரணித்  தலைவர்  கொண்டு  வருவதுதான்  அதற்கு  வலுவூட்டும்  என்றார்.

“எதிரணித்  தலைவருக்கு எதிரணிக்  கட்சிகளின்  ஆதரவு  உண்டு. உண்மையைச்  சொல்லப்போனால், எங்கள்  கட்சி  எம்பிகள்கூட  தீர்மானம்   கொண்டுவர  முயன்றனர். ஆனால், இப்படிப்பட்ட  தீர்மானத்தை  எதிரணித்  தலைவர்தான்  கொண்டுவர  வேண்டும்  என்று  எடுத்துரைத்த  பின்னர் அவர்கள்  பின்வாங்கினார்கள்”, என  லிம்  கூறினார்.

“அது  ஒரு  சில்லறை விவகாரமல்ல. நாட்டுக்கு  மிகவும்  முக்கியமானது. அதற்கு  உரிய  அங்கீகாரம்  கிடைக்க  எதிரணித்  தலைவர்தான்  அதைத்  தாக்கல்  செய்ய  வேண்டும்”, என்றவர்  வலியுறுத்தினார்.

அக்டோபர்   19-இல்  நாடாளுமன்றம்  தொடங்கும்போது  முதல்  வாரத்திலேயே  பிகேஆர்  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானத்தைத்  தாக்கல்  செய்ய  முனையும்  எனத்  தெரிகிறது.

பிகேஆர் ஓர்  அவசரத்  தீர்மானமாக  அதைக்  கொண்டு வரும்  அல்லது  அக்டோபர்  23-இல்  பட்ஜெட்  தாக்கல்  செய்யப்படும்போது  தன்  தோழமைக்  கட்சிகளுடன்  சேர்ந்து  அதன்மீது  வாக்களிக்காமல்  இருப்பதன்வழி  நஜிப்பைத்  தோற்கடிக்க  முயலும்.