இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம்: ரணில் விக்ரமசிங்க

ranil_praminister_001இலங்கையில் ஐந்து தசாப்த காலத்தையும் தாண்டி நீடிக்கும் இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பிலான பேச்சுக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடனும், சிவில் சமூக தரப்புக்களுடனும் புதிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை உரையற்றினார். அதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “கடந்த ஐந்து தசாப்த காலமாக இலங்கையில் மொழி மற்றும் இனப்பிரச்சினை முக்கிய விவகாரங்களாக இருந்ததுடன் கடந்த தசாப்தத்தில் மதப் பிரச்சினையும் உருவெடுத்தது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்துதல் என்பன எமது அரசியல் நோக்கங்களின் பிரதானமானவையாகக் காணப்படுகின்றன. அத்துடன் தேசிய ஒற்றுமை மற்றும் மத, இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகளைத் தேடுவதே எமது முக்கியமான நோக்கமாக அமைந்துள்ளது.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகவும் பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் தீர்வு காணப்படும். அனைத்து மக்களையும் சமமாக மதிக்கக்கூடிய வகையிலான கொள்கை ஒன்றை அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், அனைவரது பங்களிப்புடனும் மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

ஒற்றுமையுடன் சந்தித்து ஒற்றுமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையுடன் கலைந்து செல்லும் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இந்நிலையில் பௌத்த, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கொண்ட சமாதான ஆலோசனை சபை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றை நிறுவுவதற்கு தென்னாபிரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: