சிறிலங்கா கடற்படையிடம் சிக்கியது ஆயுதக் கப்பல்! கப்பல் இந்தியாவிடம் சிக்கியிருந்தால்…..!

ship_war_001கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 800க்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் அண்மையில் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்திருந்த ஸ்ரீலங்கா சிப்பிங் நிறுவனத்தின் முகவரான மோஷிப் நிறுவனத்திற்கு சொந்தமான அவன்கார்ட் கப்பல் சம்பந்தமான விசாரணைகளை கடற்படையினரிடமே ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசியக் கொடியுடன் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்திருந்த இந்த கப்பல் இலங்கை நோக்கி வரும் போது இந்திய அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டிருந்தால்,  பாரிய பிரச்சினையை இலங்கை எதிர்நோக்கியிருக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மூன்று பேரை இறக்கி விட வேண்டிய தேவை இருப்பதாக கூறி காலி துறைமுகத்திற்கு அருகில் வந்த இந்த கப்பல் மீது சந்தேகம் கொண்ட கடற்படையினர் அதனை சோதனையிட்ட போது அதில் ஆயுதங்கள் இருப்பது தெரியவந்துடன் கப்பலையும் கைப்பற்றினர்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்க,

கப்பல் ஒன்று துறைமுகத்திற்கு வரும் முன்னர் அது குறித்து எமக்கு அறியதர வேண்டும். மூன்று பேரை இறக்கி விட வேண்டும் என்ற வந்த இந்த கப்பல் மீது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து நடத்திய சோதனையில் அதில் 800க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இருந்துள்ளன.

கொழும்பில் உள்ள கப்பல் சொந்தக்காரிடம் அதனை ஒப்படைக்கவே வந்தார்களாம். எனினும் உரிமையாளரோ, முகவரோ அது பற்றி எமக்கு அறிவிக்கவில்லை.

ஆயுதங்கள் கொண்டு வரப்படுமானால் அது பற்றி எமக்கு அறிவிக்க வேண்டும். இந்தியாவிடம் இந்த கப்பல் சிக்கியிருந்தால், எமக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கும்.

இலங்கை கொடியுடன் இந்த கப்பல் வந்துள்ளது. கப்பலை துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கவில்லை.

தேவையெனில் துறைமுகத்திற்குள் கப்பலை வரவழைத்து விசாரணைகளை நடத்த நாங்கள் கடற்படையினருக்கு அனுமதி வழங்கினோம் என்றார்.

அதேவேளை இந்த கப்பலை தடுத்து கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படைத் தளபதி ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்தார்.

-http://www.tamilwin.com

TAGS: