மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி (1816 – 2016)

TF logo 200 yrsமலேசியத் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் அடுத்தாண்டு மலரவிருக்கின்றது. அம்மகிழ்ச்சியைக் கொண்டாடும் நிலையில் நம்தமிழர் வாழ்வு அமைந்துள்ளதா என்றாராயும் முன்னர், இம்மகிழ்ச்சி நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய மரபாக அமைய வேண்டுமென்பதே நமது அவா. 2016-ஆம் ஆண்டு, மலேசியாவின் தமிழ்க்கல்வி 200 ஆண்டை அடைகிறது. பல்வேறு இன்னல்களுக்கும் இடர்களுக்குமிடையே தமிழ்க்கல்வி வளர்ச்சியானது 200 ஆண்டுகளை அடைவது போற்றற்குரியதாகும். இவ்வளர்ச்சிப் பாதைக்குப் சிலர் உரமாகியும் பலர் உரமிட்டும் உள்ளனர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது; மறுத்துவிடவும் முடியாது!

மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்விக் கொண்டாட்டத்தின் முன்னிட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தமிழ் அறவாரியம் மேற்கொண்டு வருகிறது. தொன்மையைத் தொடர வேண்டுமென்பதாலும் வரலாற்றைப் புதுப்பிக்க விழையும் நோக்கிலும் மலேசியத் தமிழ் அறவாரியம், ‘மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி (1816-2016)’ எனும் கருப்பொருளில் தமிழ்க்கல்வி மாநாடு ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளது.

                      நாள்       :   31 அக்டோபர் 2015

                      காலம்   :   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

                       இடம்     :  பெர்டான சிச்வா அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்

ஒருநாள் கருத்தரங்காய் நடக்கவிருக்கின்ற இம்மாநாடு மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாய்க் கொண்டு மலரவிருக்கின்றது. அவையாவன:

  1. தமிழ்க்கல்வியை தொடர்ந்து நிலைபெறச் செய்தல்.
  2. தமிழ்க்கல்வியைச் சமூகப்படுத்துதல்.
  3. தமிழ்ப்பள்ளிகள் 80% தேர்ச்சியடைவதையும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 100% கல்வியறிவைப் பெறுவதையும் உறுதிசெய்தல்.

பெருமையைக் கொண்டாடும் இனமாக மட்டுமில்லாமல், தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டும் காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டும் உருமாற்றங்களை உருவாக்கிக்கொண்டும் வாழ்வதே நம்மினத்தின் இற்றைத் தேவை! முயற்சி ஆங்காங்கே காணப்பட்டாலும், தொடர்முயற்சி இன்றியமையாதது என்பதை நாம் அறிய வேண்டும். அவ்வகையில் காலத்திற்கேற்ற தேவையாய் மலர்ந்திருப்பது இக்கொண்டாட்டமாகும்.

ஆதலால், தமிழ்ப்பள்ளியையும் தமிழ்க்கல்வியையும் நிலைநிறுத்த உங்களாலான எண்ணங்களை, திட்டங்களை, திட்டவரைவுகளை, தொடர்நடவடிக்கைகளைத் தமிழ் அறவாரியத்தொடு பகிர்ந்துகொள்ள அரிய வாய்ப்பொன்றனை ஏற்படுத்தித் தருகிறோம். தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள் அனைவரும் இப்பொன்னான முயற்சி வெற்றிபெற எங்களொடு தோள் கொடுப்பீர்களெனப் பெரிதும் நம்புகிறோம். மேல்விபரங்களுக்குத் தமிழ் அறவாரியத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்புக்கு: 03-26926533

இன்தமிழை இணைந்து வளர்ப்போம்!

தமிழோடு உயர்வோம்!