தாய்மொழிப்பள்ளிகள் உரிமை சார்ந்தவை, அமைச்சருடன் கலந்துரையாடல்

Tamil Wahidநமது நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை படிப்படியாக மூடிவிட்டு அனைத்து இன மாணவர்களயும் தேசிய மொழியை முதன்மையான கற்பித்தல் மொழியாகக் கொண்ட ஒரே பள்ளியில், தேசியப்பள்ளியில், இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட் கூறியிருந்தார். இந்நோக்கத்திற்கு குறைந்தபட்சம் 65 ஆண்டுகால வரலாறு உண்டு.

ஆனாலும், நமது தேசிய கல்வி அமைவுமுறையைப் பொறுத்தவரையில் தாய்மொழிப்பள்ளிகள் தொடந்து கல்விச் சட்டத்தின் கீழ் தனிப்பட்டே இயங்கி வருகின்றன. அம்முறை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து மீண்டும் தலையெடுத்துள்ளது.

கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து அது குறித்து கல்வி அமைச்சருடன் விவாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக நேற்று பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் அப்துல் வாஹிட் ஒமாருடன் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது.

tamil_schoolஅரசியல் நோக்கமற்ற அந்நிகழ்வு ஒரு பண்பான சூழ்நிலையில் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. கடந்த 65 ஆண்டுகாலமாக திரும்பத் திரும்ப எழுப்பப்பட்டுவரும் இப்பிரச்சனையின் பின்னணியை அமைச்சருக்கு விளக்கி இளம் வயதில் மாணவர்கள் தங்களுடைய கல்வியை தாய்மொழியில் கற்பதின் அவசியத்தையும் அதன் பலன்களையும் அவரின் கவனத்திற்கு கொண்டு வருவது மட்டுமே இச்சந்திப்பின் முக்கிய நோக்கம்.

தனது இளமை கால அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாஹிட், என்றாவது ஒருநாள் நமது நாட்டில் அனைத்து இனங்களும் ஒருமித்த உணர்வுடனான நிலையில் வாழ்வதைக் காண வேண்டும் என்றும், அதில் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் இருக்க வேண்டும் என்றார்.

தாய்மொழிக் கல்விக்கான ஆதங்கத்தை வெளிபடுத்திய குழுவினர், அரசியலுக்காக தாய்மொழிக்கல்விக்கு எதிரான குரல் அவ்வப்போது எழுப்பப்படுவது  புரிந்துணர்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் தடங்கலாகவே இருந்து வருகிறது என்றனர். கடந்த கால அனுவங்களை வைத்து பார்க்கும் போது இன ஒற்றுமை தற்போது சவாலாக இருப்பதற்கு காரணம் தாய்மொழிப்பள்ளிகள் அல்ல, மாறாக அரசாங்கத்தின் இனவாத கொள்கை அமுலாக்கம்தான் என்றனர்.

tf ragavanஇந்த சந்திப்பில் நியாட் அமைப்பைச் சார்ந்த டத்தோ தஸ்லிம், சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம், தமிழ் அறவாரியத்தின் தலைவர் அ. இராகவன், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன், சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் லா. சேகரன், அதன் செயலாளர் இரா. இராமச்சந்திரன், தமிழ் அறவாரியத்தின் ஆய்வாளர் ஜீவி காத்தையா, நியாட் அ மைப்பின் அ தோன் மற்றும் அபு பாக்கார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.

இந்தச் சந்திப்பின் போது தமிழ் அறவாரியத்தின் தலைவர் இராகவன் அவர்கள், தமிழ் அறவாரியம் வெளியிட்டு வரும் தமிழ்க்கல்வி கட்டுரைத்திரட்டு மலர்களை (Tamil Education Journal) வாஹிட் அவர்களுக்கு வழங்கினார்.