மசீசவுக்கும் இந்த அவல நிலையா?

ஜா. சுகிதா, நவம்பர் 1, 2015.

 

weeசீனமொழிப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொடுங்கள், இழுத்தடிக்காதீர்கள் என்று இரஞ்சுகிறார் மசீசவின் துணைத் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான வீ காசி யோங்.

2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. 2015 ஆண்டிற்கான பட்ஜெட்டில் சீனப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் கொடுக்கப்படவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார் அமைச்சர் வீ.

நிதி அமைச்சு நிதியை கல்வி அமைச்சுக்கு அனுப்பி விட்டோம் என்று கூறுகிறது. ஆனால், கல்வி அமைச்சு அப்படி எந்த நிதியும் தங்களிடம் வந்தடையவில்லை என்று கூறுகிறது என்கிறார் வீ.

“இந்த ஒதுக்கீட்டிற்கு பிரதமர் உறுதியளித்திருந்தார். அதை நிறுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை”, என்று வீ காசி யோங் உரிமை முரசு கொட்டினார்.

இருந்தாலும் மக்கள் தவறான முடிவிற்கு வந்து விடக்கூடாது என்று சமாளித்துக் கொண்ட வீ, உறுதியளிக்கப்பட்ட ரிம800 மில்லியன் வந்து விடும். அந்த நிதி ஒதுக்கீடு சீனப்பள்ளிகளுக்கு மட்டுமல்ல. அது தமிழ், சமயப்பள்ளிகள் போன்றவற்றுக்கும் ஒதுக்கப்பட்டதாகும் என்று கூறிய அவர், ஒதுக்கப்பட்ட ரிம800 மில்லியின் நிதி குறைக்கப்படாது என்றும் கூறிக்கொண்டார்.

2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தாய்மொழிப்பள்ளிகளுக்கு ரிம800 மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஏன் 2016 ஆண்டும் பட்ஜெட்டில் அந்நிதி ஒதுக்கீடு ரிம500 மில்லியனுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, அரசாங்கத்தின் வருமானம் குறைந்து விட்டது என்றார். (The Star, October 26, 2015)

liowமசீசவின் தலைவர் லியோவ் தியோங் லை, கல்வி அமைச்சு அளித்த வாக்குறுதியை அது கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். அந்த நிதி சீனப்பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றார். (The Star, November 1, 2015)

தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கீட்டிற்கான அட்டை (மாதிரி) காசோலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

துணைக் கல்வி அமைச்சர் ப. கமலநாதன் 2013/14 ஆண்டுகளுக்கான பட்ஜெட்களிலிருந்து 237 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரிம15.4 மில்லியனை பகிர்ந்தளித்ததாகவும், ஆனால் குறிப்பிட்டப்பட்ட ஆண்டுகளுக்கான பட்ஜெட்டுகளில் மொத்தம் ரிம150 மில்லியன் ஒதுக்கப்பட்டது என்று தாம் அறிவதாக ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் குறிப்பிட்டதோடு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் ரிம150மில்லியனிலிருந்து கொடுக்கப்பட்ட ரிம15.4மில்லியன் போக மிச்சம் எங்கே என்று கேட்டுள்ளார்.

குலசேகரன் எழுப்பியுள்ள கேள்வி மிகக் கடுமையானது. அதற்குறிய பதிலை கல்வி அமைச்சு அளிக்க வேண்டும்.

 

திடீர் வருகை, திடீர் நிதி ஒதுக்கீடு

 

இதற்கிடையே, இந்தியர்கள் அதிகமாக வாழும் சிப்பங் தொகுதியில் டிங்கில் தமிழ்ப்பள்ளிக்கு அக்டோபர் 29 இல் பிரதமர் திடீர் வருகை மேற்கொண்டார். இந்தத் “திடீர்” வருகையின் பல உள்ளூர் பிரமுகர்களும் திடீர் என்று பிரதமரின் முன்தோன்றியுள்ளனர்.

najibஇத்திடீர் வருகையின் போது இரண்டு மணி நேரத்தை செலவிட்டு பள்ளியைச் சுற்றிப் பார்த்தவுடன் திடீர் என்று “பள்ளிக்கு முன்புறம் உள்ள கால்வாயை சீரமைக்க 54,600.00 வெள்ளியும், மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க 50,873.00 வெள்ளியும், பழைய கட்டடங்களில் புதிய மின்சார இணைப்புக்கு 12,000.00 வெள்ளியும், அறிவியல் அறை சீரமைப்புக்கு 42,000.00 வெள்ளியும், பள்ளியைச் சுற்றி வேலி சீரமைக்க 31,680.00 வெள்ளியும், இரண்டு வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை மாற்ற 82,522.00 வெள்ளியும், சிற்றுண்டி சாலையை சீரமைக்க 37,000.00 வெள்ளியும், ஆசிரியர் கூட்ட அறையை சீரமைக்க 4,000.00 வெள்ளியும் மற்றும் நூலகத்தை சீரமைக்க 4,000.00 வெள்ளியையும் வழங்க உடனடி உத்தரவு பிறப்பித்தார். (தமிழ் நேசன் அக்டோபர் 30, 2015)

திடீர் என்று வருகையளித்த பிரதமர், திடீர் என்று இரண்டு மணி நேரமே செலவிட்ட பிரதமர், திடீர் என்று “மொத்தம் 3 லட்சத்து 19 ஆயிரம் வெள்ளியை அங்கீகரித்த பிரதமர் நஜிப் மேற்கண்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டார்.” (த.நே, 30.10.15)

இந்தத் திடீர் நிதி ஒதுக்கீடுகளுக்கு எந்த ஆண்டு பட்ஜெட்டில், 2013, 2014, 2015 அல்லது 2016, வகைசெய்யப்பட்டுள்ளது?

அநேகமாக, இந்த திடீர் நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெறுவது சாத்தியமல்ல. ஏனென்றால், 2016 ஆண்டு பட்ஜெட்டில் தாய்மொழிப்பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரிம800 மில்லியனிலிருந்து ரிம500 மில்லியனுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்று வீ கா சியோங் கூறியிருக்கிறார்.

ஒருவேளை, இந்த நிதி ஒதுக்கீட்டை அளிப்பதற்கு 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஏற்பாடு செய்யப்படலாம், அந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால்.

பிரதமர் நஜிப்பின் திடீர் வருகையின் போது அங்கு திடீரென்று தோன்றிய பல பிரமுகர்கள் பல கோரிக்கைகளை எழுப்பியதும், “நாட்டின் முன்னேற்றத்திற்கு தேசிய முன்னணியின் பணி தொடரும் என்று உறுதி” அளித்ததும்  இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக பிரதமர் நஜிப் மேற்கொண்ட வியூக நடவடிக்கைதான் இந்த “திடீர்” வருகையும் திடீர் அறிவிப்பும் என்று எண்ணத் தோன்றுகிறது.