நஜிப்: இந்தியர்கள் வந்தேறிகள்” அல்லர், ஆகவே மஇகாவில் சாதி அரசியல் இருக்கக்கூடாது

இந்நாட்டு இந்தியர்கள் “வந்தேறிகள்” அல்லர். ஆகவே, மஇகா சாதி அரசியல் நடத்தக்கூடாது. அது இந்தியாவில் பரவலாக இருக்கிறது என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார்.

மஇகா அரசியலில் இந்நாட்டிலுள்ள இந்தியச் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அடங்கியிருக்க வேண்டும் என்று கூறிய நஜிப், “மலேசியாவிலுள்ள இந்தியச் சமூகம் நாட்டிற்கு மிக முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்”, என்றார்.

“நான் மலேசியா அதன் சிகரத்தில் இருக்க வேண்டும் என்ற கனவைக் கொண்டிருக்கிறேன். அந்த மேம்பாட்டின் அங்கமாக இந்தியர்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமக்கு வலிமை இருப்பதால் நாம் அந்தப் பெரும் மாற்றத்தைச் செய்ய முடியும்”, என்று நஜிப் மஇகாவின் 67 ஆவது பேராளர் மாநாட்டை இன்று கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது கூறினார்.

மஇகா ஒரு நல்ல மற்றும் நியாயமான கட்சி என்பதை அது நிரூபிக்க வேண்டும். கட்சி தேர்தலில் தோற்றவர்களை ஒதுக்கிவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

“நமது பக்கம் அல்லது “சாதியில்” இல்லாதவர்களை நிராகரித்து விட வேண்டாம். நடந்ததை ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்”, என்று பிரதமர் நஜிப் மேலும் கூறினார்.