மலேசியா திருப்பி அனுப்பிய தமிழ் அகதிகளின் உயிருக்கு ஆபத்து!

13போர் குற்றங்கள் மற்றும்  மனித குலத்திற்கெதிரான குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை அரசு உடனடியாக தமிழ் அரசியல் கைதிகள்  மேற்கொண்டுள்ள சாகும் வரை  உண்ணாவிரதத்தை ஒரு சுமூகமான தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.

இலங்கை முழுவதும் 14 சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 216 தமிழ் அரசியல் கைதிகள் இரண்டாவது முறையாக தங்களின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த 8-ஆம் தேதிமுதல் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசை செய்தி அறிவித்துள்ள அதே வேளையில் இன்னும் பலர் வலுக்கட்டாயமாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள், “தாயகத்தையும் மக்களையும் நேசித்தோம், எமக்கு விடுதலை கிடைக்கவில்லை சிங்கள பேரினவாதத்திடம்  இருந்து. ஆகையால் எமது உயிர்களை அர்ப்பணிக்கிறோம், அன்பு மக்களே, நன்றி!  – தமிழ் அரசியல் கைதிகள்”  என்ற உருக்கமான குறுஞ்செய்தியை இன்று செம்பருத்தியிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில், கிருபாணந்தன் செல்லதுரை, குசாந்தன் சந்திரலிங்கராஜா மற்றும் கிருபாகரன் மகாதேவன் என்ற மூவரும் மலேசிய அரசாங்கத்தால் கடந்த வருடம் மே மாதம் கைது செய்யப்பட்டு திரும்பவும் இலங்கைக்கு அனுப்பட்ட அகதிகள் ஆவர். இவர்களில் முதல் இருவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் அலுவலகத்தில் அகதிகளாக பதிவானவர்கள். மற்றும் ஒருவர் அகதி பதிவுக்கு காத்திருந்தவர். உண்ணாவிரதம் இருக்கும் இவர்களின் உயிருக்கு ஆபத்து வரும் நிலை உருவாகுமேயானால் அதற்கு மலேசிய அரசாங்கமும் உடந்தையாக இருந்தது என்ற பழி வரலாற்றில் பதிவாகும் என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். ஆனால், நவம்பர் 7 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என்று இலங்கை அதிபரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து அவர்கள் அதனை கைவிட்டிருந்தனர்.

Tamil hunger strike2அனைதுலகச் சமூகமும், பல நாடுகளின் ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும்  மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான மனித உரிமை பிரச்சனைகளை உலக அளவில் எழுப்பியுள்ளார்கள். ஆனால், மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனைகளை புறக்கணித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழர்கள் மற்றும் அவர்களுக்கு சாதகமானவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்  என்று பரிந்துரை செய்திருக்கிறது. குற்றச்சாட்டு அல்லது விசாரணை இன்றி தடுத்து வைக்கும் முறையை ஒழிக்க வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

புதிய அதிபர் இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவேன் என  உத்திரவாதம் கொடுத்து, அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்வதாக கோடிகாட்டியுள்ளார். இது சார்பாக  நல்லிணக்கத்துக்கு   உண்மையான அர்த்தம் கொடுக்க தமிழ் அரசியல் கைதிகள் சட்டத்தின் அடிப்படையிலேயே  புறக்கணிக்கப்படுகின்ற கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.