தமிழ் மொழி வளர, தாழ்வு மனப்பான்மை நீங்க வேண்டும் – தேனீ

Tamil school our choice in Tamilதமிழ் வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்பொழுது இதுகாறும் நம் கவனம் பெரும்பாலும் தமிழ் பள்ளிக் கூடங்கள் மீதும், தமிழ் போதனை மீதும்தான் அதிகமாக இருந்து வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் பேசுவதால் தன் கௌரவமோ அல்லது பிள்ளைகளின் கௌரவமோ தாழ்ந்து விடும் என்று என்னுகின்றார்களே அதனை நீக்க சில செயல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

“தமிழ் பள்ளியே எங்கள் தேர்வு” என்று பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ் பள்ளி நடவடிக்கைக் குழு எடுத்த பிரச்சாரத்தைப் போன்று தகுந்த யுக்திகளுடன் செயல்பட்டால் முதலில் நம் மக்களின் மனதில் தமிழ் மொழியைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை நீக்கி மறு மலர்ச்சியை ஏற்படுத்தலாம்.

தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டம் பெற இந்நாட்டில் நமக்கு இருக்கும் ஒரே இடம் மலாயா பல்கலைகழகம். இங்கே தமிழ் மொழி என்பது முழு நேர பாடத் திட்டமாக இருந்து வருகின்றது. இந்நாட்டில் தமிழ் மொழி ஆர்வலர்கள் பலர் வயது தாண்டியவர்கள் என்பதால் இவர்கள் பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்து தத்தம் மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

MALAYSIA-VOTE-INDIANSஇதற்கு மருந்தாக மலாயா பல்கலைகழகம், பல்கலைகழக பதிவிற்கு தகுதி பெற்றோருக்கு ‘Pendidikan Jarak Jauh’ (PJJ) என்னும் முறையில் தமிழ் மொழி இளங்கலைப் பட்டத்திற்கு தமிழ் மொழி போதனா முறையை மேற்கொள்ள வழி வகுக்கலாம். இதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது காரணம் பல்கலைகழகங்களுக்குக் கொடுக்கப் படும் அரசாங்கத்தின் மானியம் தற்சமயம் குறைக்கப் பட்டுள்ளதால் மலாயா பல்கலைகழகம் தனது சுய வருமானத்தைப் பெருக்க பல வழி வகைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது.

இந்நேரத்தில் வருமானத்தைப் பெருக்கும் இதைப் போன்ற பாட திட்டங்களுக்கு அப்பல்கலைகழகம் முன் வரும் என்று  நம்பலாம். இதை அரசியல் ரீதியாக இல்லாமல் மொழி ரீதியாக தமிழ் அறவாரியம் அங்குள்ள நம் பேராசிரியர்களின் வழி கொண்டு செல்வோமானால் நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதே நேரத்தில் மாணவர் பதிவு அருகி வரும் இந்திய ஆய்வியல் பிரிவுத் துறைக்கு புத்துயிர் ஊட்டியதாகவும் இருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலனும் கிடைக்கும்.

நாம் எவ்வளவுதான் தமிழ் மொழி கற்க, கற்பிக்க மேலும் தொடர்ந்து தமிழ் மொழி வளத்தைப் பெருக்க மேல் நிலைப் பள்ளிகளில் முயற்சி கொண்டாலும் தரமான தமிழ் மொழி நூல்கள் கிடைக்க வில்லையானால் தமிழ் மொழியை எப்படி வளர்ப்பது?. 1960 – 2000 -ம் ஆண்டுகள் வரை நமக்கு தமிழ் நாட்டில் இருந்து சிறந்த அறிஞர்கள் எழுத்தார்கள் எழுதிய நூல்கள் கிடைத்ததுபோல் இன்று நமக்கு சுலபமாக கிடைப்பதில்லை.

தமிழ் மொழி நூல்கள் விற்கும் நம்முடைய புத்தக கடைகளும் அரிதாகிக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் ஒரு மாற்றம் நமக்கு வேண்டும். தமிழ் அறவாரியம் முன் நின்று முதலில் தமிழ் மொழி நூல்கள் கிடைக்க ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் தமிழ் புத்தக விற்பனை மையங்களை நிறுவ வழி காண வேண்டும். தற்பொழுது கோலாலம்பூரில் இருக்கும் புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர்களைக் கொண்டே இதனைத் தொடங்கலாம். செய்வீர்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.  மேலும் சிந்தனைக்கு நாளை சந்திப்போம், சிந்திப்போம்.