பக்கத்தான் ஹராபான் ‘விரைவில் மறையும்’ என்ற கணிப்புக்குக் கண்டனம்

ramliபக்கத்தான்  ஹராபான்  நீண்ட காலம்  நிலைத்திருக்காது  என்ற  பாஸ்  ஆராய்ச்சி  மையத்தின்  கணிப்பு  உண்மை  நிலவரத்தைப்  பிரதிபலிக்கவில்லை  என பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  சாடினார்.

புதிதாக  அமைக்கப்பட்ட  அக்கூட்டணி  விரைவில்  மறைந்தொழியும்  என்பதை  மறுத்த  பாண்டான்  எம்பி, அடுத்த  ஆண்டில்  பொதுக்  கொள்கை  உடன்பாடு  காணப்பட்டதும்  பக்கத்தான்  ஹராபான்  மேலும்  வலுவடையும்  என்றார்.

“உண்மை  நிலவரத்துக்கும்  அந்த  ஆய்வின்  முடிவுக்கும்  வெகு தூரம். பக்கத்தான் கடந்த  காலத்  தவறுகளிலிருந்து   பாடம்  கற்றுக்  கொண்டிருக்கிறது. இப்போது அதை  மேலும்  வலுப்படுத்தும்  உபாயம்  கிடைத்திருக்கிறது.

“உண்மை  நிலவரம்  என்னவென்றால்  எங்களுக்கு  எதிரே  இருப்பது  பலவீனமடைந்த  அம்னோ. மக்களின் விருப்பமும்  மாறி  வருகிறது.

“அத்துடன்  மக்கள்  ஒரு  வலுவான  எதிரணியின்  முக்கியத்துவத்தை  உணர்ந்திருக்கிறார்கள்  என்பதும்  உண்மையாகும்”, என  ரபிஸி  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

பக்கத்தான்  ரக்யாட்  ஆறாண்டுகள் நீடித்தது. ஆனால், பக்கத்தான்  அவ்வளவு  காலம்கூட  நீடித்திருக்காது  என்று  பாஸ்  ஆய்வு  மையம்  கூறியிருந்தது.