சுப்ரா, இந்தியாவிற்குப் போய் மோடியிடம் பாடம் படிச்சுக்கிட்டு வாங்க, ரோஸ்மா ஆலோசனை கூறுகிறார்!

 

 இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மோடியின் தேர்தல் வியூகத்தால் மலேசியப் பிரதமர் நஜிப்பின் துணைவியார் மிகவும் கவரப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர், மஇகா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரோஸ்மா, கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் இது பற்றிய சிலவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

“சுப்ரா, இந்தியாவிற்குச் சென்று அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொள்வது நல்லது”, என்று சிரித்துக் கொண்டே ரோஸ்மா கூறினார்.

மோடி பயன்படுத்திய சமூக ஊடக பரப்புரை வெற்றியளிக்கக்கூடியது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது என்கிறார் ரோஸ்மா.

“நான் அவரது பரப்புரையை கவனித்து வந்தேன். 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு நீங்களும் அவரது முறையைப் பின்பற்றலாம்.

“குறிப்பாக, சமூக ஊடகம் முக்கியமானது. தேர்தல் பரப்புரைக்கு சமூக ஊடகம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அது இந்தியப் பிரதமருக்கு பெரும் வெற்றியைத் தந்தது”, என்றார் ரோஸ்மா.