இலங்கையின் செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கிறது!

chamantaகுறுகிய காலத்திற்குள் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயுள்ள நெருக்கமான உறவுகள் ஊடாக, இருதரப்பினருக்கும், பொதுவான பல விடயங்கள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகத்தின், கூட்டுப் பாதுகாப்புப் பற்றியும், ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இரு நாடுகளும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஐ.நாவிற்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த சந்தர்ப்பத்தில் சமந்தா பவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி ஒபாமாவின் சமாதானத்திற்கான மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வேறு எந்தவொரு நாட்டுத் தலைவரும் முன்வைக்காத, மிக முக்கியமான பல்வேறு உறுதி மொழிகளை வழங்கியதாக சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களிலும் பிரிவினைவாதத்திற்குப் பதிலாக, நல்லிணக்கத்தையும், அச்சத்திற்கு பதிலாக அபிலாசையையும், மக்கள் தெரிவு செய்து, ஜனநாயகத்திற்கு பொறுப்புக் கூறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் அனைத்து விடயங்களையும் முழு உலகமும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாகவும், கடந்த சில மாதங்களில் மிகவும் சிக்கலான ஒரு அரசியல் சூழல் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் நாட்டில் நடந்த மாற்றங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக ஜனாதிபதிகள் தமது பதவிக்காலத்தையும் அதிகாரங்களையும் அதிகரிப்பதற்காக, அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யும் ஒரு காலகட்டத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு இலங்கை ஜனாதிபதி எடுத்தத் தீர்மானம் மிகமுக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது மாத்திரமல்லாது நீண்டகால சிவில் யுத்தத்தின் விளைவுகளையும் அனுபவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை அச்சமின்றி எதிர்கொண்டு, பிரகாசமான ஓர் எதிர்காலத்தை நோக்கி ஸ்ரீலங்கா முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் செயற்பாடுகளை அவதானிப்பதோடு, சக்திவாய்ந்த ஜனநாயக நாடாக ஸ்ரீலங்காவை மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: