“கண்ணீரில் தமிழகம்” யார் காரணம்? மழை உணர்த்தும் பாடம்? (வீடியோ இணைப்பு)

heavy_rain_004தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் கடைசியில் தர்மமே வெல்லும் என்ற பழமொழியின் ஆழமான உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தற்போது நன்றாக புரிந்திருக்கும்!!!

இயற்கை வளத்தை அளித்து பங்களா, மாடி வீடுகள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களுக்கு “மழை” நல்ல பாடத்தை கற்றுத் தந்துள்ளது.

மழை வந்தாலே துள்ளிக் குதித்து கொண்டிருந்த காலம் மாறி, அய்யோ மறுபடியும் மழையா என அதிர்ச்சியில் உறைந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 28ம் திகதி தொடங்கிய வடகிழக்கு பருவ மழை இன்றும் ஓயாமல் பெய்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக 14ம் திகதி முதல் 16ம் திகதி வரை பெய்த கனமழைக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

அத்தியாவசியமான மழை ஆபத்தாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

வீட்டைவிட்டு இறங்க முடியவில்லை, எங்க வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை, அந்த ஊருக்குள்ளேயே இருக்கமுடியவில்லை என ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக மக்கள் அவலம் பாடிக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி மழைநீரோடு கழிவு நீரும் சேர்ந்து கொண்டு கொசுக்களுக்கும் கொடிய நோய்தொற்றுக்கும் வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.

நூற்றுக்கும் மேலான மனிதர்கள் பலியானதோடு, விலங்குகள், பொருள்கள், வீடுகள் என அனைத்தையுமே மழை புரட்டி போட்டு விட்டது.

இயல்பான போக்குவரத்து பாதித்ததால், ஒருபுறம் காய்கறிகள் விலையேறியது, உற்பத்தி இடத்தில் அவை மலிவாகி அழுகியது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? என்று ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் உண்மையை விளங்கி கொள்ளலாம்.

வடிகால் அமைப்பா?

பள்ளம் பார்த்து, தானே பாயும் தண்ணீரை தடுத்தது நாம் தானே!… இது நுனிமரத்தில் இருந்து அடிமரத்தை வெட்டும் செயலை போன்றது தான்.

ஆடம்பரமான கான்கிரீட் கட்டடங்களின் உயரமும் எண்ணிக்கையும் மட்டுமே ஒரு நகரத்தின் வளர்ச்சி அல்ல.

ஒரு பெருநகரம் சுற்றுவட்டாரங்களை ஆக்கிரமித்து விரிவடையும் போது, அதற்கு பொருத்தமான பெரிய வடிகால் வசதிகளும் அதனோடு தொடர்புடைய கட்டமைப்புதான்.

அதிகாரிகள் லஞ்ச ஊழலால், அவசர தொழிலதிபர்களின் சுயநல தேவைக்கு ஒத்துழைத்துவிட்டு, எல்லாம் சரியாகவே ஆய்வுசெய்தாகிவிட்டது என்று மனிதர்களை ஏமாற்றலாம் மழைநீரை ஏமாற்ற முடியுமா?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததா?

மழை பற்றி முன்னறிவிப்பு செய்யப்பட்டாலும் எந்த பகுதியில் நீர்தேங்கும் என தெரியாது. முன்கூட்டியே மழையை அறிவித்தாலும் அதன் அளவை சொல்ல முடியாது.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகளிலும் மண்டபங்களிலும் குடியமர்த்தி உணவு, உடைகள் வழங்கியதால் மட்டும் எல்லாம் சரியாகிவிடாது.

அறிவிப்பு விடுக்கப்பட்டும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஏரிகள் தூர்வாறப்படாததா?

மழைநீரில் ஒரு பகுதி பெரிய ஏரி, குளங்களிலும் முன்பு சேர்வதுண்டு. ஆயிரக்கணக்கில் அவைகள் தூக்கப்பட்டு இப்போது கட்டடங்களாகவும் குப்பைமேடாகவும் மாறி இருக்கிறது.

ஒரு நகரத்தின் அருகே கடல் அல்லது கடலை நோக்கி போகும் ஆறுகள், அதுவும் இல்லாத போது பெரிய குளங்கள், ஏரிகள் இருப்பது அவசியம்.

மழைநீர் சென்று அதில் கலக்கும் வழிகளும் நகரத்திலிருந்து இருப்பது அதன் பாதுகாப்பு.

பெங்களூருவில் நூறு ஆண்டுகள் இடைவெளியில் 1916 க்கு பிறகு, கனமழை (256.8 மி.மீ.) இந்த நவம்பர் மாதத்தில் பெய்துள்ளது.

ஆனாலும், நகரத்தை பாதிக்காத வகையில் உடனடியாக நீர் வெளியேறி உள்ளது. இதற்கு காரணம் சிறந்த வடிகால் வசதி அமைக்கப்பட்டிருப்பதுதான்.

இதுமட்டுமின்றி நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் ஒரு காரணம் தான்.

அரசு செய்யப் போவது என்ன?

தமிழகத்தில் கடந்த 2002- 2006ம் ஆண்டு வரை நடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் பயனாக நிலத்தடிநீர் சேகரிக்கப்பட்டு, கோடைகாலத்திலும் குறையாமல் பயன்பட்டதை மக்களும் உணர்ந்தார்கள்.

அதன் பிறகு அந்த திட்டம் அவ்வளவாக வலியுறுத்தப்படவில்லை. ஆனாலும், பெரிய மழை வெள்ளத்தை நாம் விரும்புகிற வேகத்தில் பூமிக்குள் கொண்டுசெல்ல அந்த திட்டம் மட்டுமே போதுமானது அல்ல.

எந்த நகரமானாலும் வடிகால் வசதி வைத்து ஆகாய மார்க்கமாக வரும் தண்ணீருக்கு சுதந்திரமளிக்க வேண்டும். இல்லையேல், தண்ணீர் நம்மை அடிமையாக்கி விடும்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்து தங்கள் சாதனைகளை மலையளவு புகழ்ந்துகொள்கிறார்கள்.

மாநில தலைநகரின் அடிப்படை கட்டமைப்பிலே கோட்டைவிட்டிருப்பதை இனியாவது அவர்கள் புரிந்துகொள்ளட்டும்!!!

ஆக்கம்: மரு. சரவணன்

-http://www.newindianews.com

TAGS: