கெவின் பிரதமர் மற்றும் அவரது துணைவியார் பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்தார்

 

 சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட பிரதமர் நஜிப்புக்கு எதிராகத் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வரைவு குற்றப் பத்திரிக்கையில் கொலை செய்யப்பட்ட அரசு வழக்குரைஞர் அந்தோனி கெவின் மொரெஸ் பெயரின் முதல் எழுத்துகள் இருந்தன என்று அவரது சகோதரர் கூறிக்கொண்டார்.

ஜூலை 30 இல் வலைத்தளத்தில் அந்த குற்றப் பத்திரிக்கையை பார்த்த போது அதில் தமது சகோதருடைய பெயரின் முதல் எழுத்துகளைchargesheet அடையாளம் கண்டதாக சார்ல்ஸ் சுரேஷ் மொரெஸ் இன்று ஒரு சத்தியப் பிரமாணத்தில் கூறியிருக்கிறார்.

அந்த இரு பக்க குற்றப் பத்திரிக்கையை மீண்டும் ஒரு முறை பார்த்த போது அதில் ஒரு பக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டு பெயரின் முதல் எழுத்து இடப்பட்டிருந்தது. அதை மீண்டும் விபரமாகப் படித்த போது அத்திருத்தத்திற்கு அடுத்து எழுதப்பட்டிருந்த பெயரின் முதல் எழுத்து தமது சகோதரர் கெவினுடையதாகும் என்று கூறிய சார்ல்ஸ், தமக்கு தமது சகோதரரின் கையொப்பமும் பெயரின் முதல் எழுத்துகளும் நன்கு தெரியும் என்று சத்தியப் பிரமாணத்தில் கூறியுள்ளார்.

சார்ல்ஸ் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவரது சத்தியப் பிரமாணத்தை வெளியிட்ட போது அவரது வழக்குரைஞர் அமெரிக் சிதுவும் உடனிருந்தார்.

சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி அலி இதற்கு முன்னதாக வரைவு குற்றப் பத்திரிக்கை என்று கூறப்படுவதை போலியானது என்று நிராகரித்துள்ளார்.

இன்று இந்த சத்தியப் பிரமாணம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தொடர்பு கொண்ட போது, “நான் வெளிநாட்டில் இருக்கிறேன், நன்றி” என்று முகமட் அபாண்டி கூறினார்.

kevinதாம் தமது சகோதரர் கெவினுடம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததாக கூறிய சார்ல்ஸ், கடந்த செப்டெம்பரில் கெவின் கொலை செய்யப்படுவதற்கு இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூர் சம்பந்தப்பட்ட விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக கெவின் தம்மிடம் கூறியதாக தெரிவித்தார்.

பின்னர், தாம் ரியுகாசல்-பிரவுனை சந்தித்து இந்த குற்றப் பத்திரிக்கை பற்றி வினவியதாகவும் அந்த ஆவணம் “[email protected]” என்ற மின்னஞ்சல் வழி பெறப்பட்டதாக தெரிந்து கொண்டதாக சார்ல்ஸ் அவரது சத்தியப் பிரமாணத்தில் கூறியுள்ளார்.

அந்த மின்னஞ்சல் கெவினிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புவதாக சார்ல்ஸ் தெரிவித்தார்.

“ஜிப்பி” என்ற பெயர் தம்மையும் கெவினையும் கவனித்துக் கொண்ட ஆயாளை குறிப்பிடுகிறது என்று சார்ல்ஸ் மேலும் கூறினார்.

கெவின் நேரடியாக சட்டத்துறை தலைவரின் கீழ் பணியாற்றியதால் அந்த வரைவு குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல் அவருக்கும் தெரிந்திருக்கும் என்றார் சார்ல்ஸ்.