கென்யாவில் கிறிஸ்தவர் – முஸ்லிம்கள் இடையே நல்லுறவு: பேச்சுவார்த்தையே அமைதிக்கான வழி; போப்

கென்யாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையிலான பேச்சுவார்த்தையால் மட்டுமே வன்முறை ஓய்ந்து அமைதி நிலவ முடிவும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப்பாண்டவர், கென்யத் தலைநகர் நைரோபியில் அந்த நாட்டு முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பிற மதத் தலைவர்களிடையே வியாழக்கிழமை உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மதத்தைக் காரணம் காட்டி, பிறர் மீதான வன்முறைச் சம்பவங்களை நியாயப்படுத்த முடியாது.

மதத்தின் பெயரால் இளைஞர்கள் தவறான பாதைக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர்.

சமூகக் கட்டமைப்பைக் குலைக்கும் வெறுப்புணர்வு அவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது.

மதங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையால் மட்டுமே இதைத் தடுக்க முடியும்.

பேச்சுவார்த்தையால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்றார் அவர்.

கென்யாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகளால் அண்மையில் நிகழ்த்தப்பட்ட மூன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நினைவுகூர்ந்த போப் பிரான்சிஸ், மக்கள் மனங்களில் அந்தச் சம்பவங்கள் நீங்கா வடுக்களாக நீடித்திருக்கும் என்பதை உணர்வதாகக் கூறினார்.

அமைதிக் கடவுள்: போப்பாண்டவர் மேலும் கூறியதாவது: நாம் அனைவரும் சேவை செய்ய விரும்பும் ஒரே கடவுள் அமைதியே.

அந்த அமைதிக் கடவுளின் தூதுவர்களாகச் செயல்பட்டு, அனைத்து சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துபவர்களாக நாம் பணியாற்ற வேண்டும் என்றார் போப்பாண்டவர்.

அவரது கருத்தை, கென்ய முஸ்லிம்களின் தலைமைப் பீடத் தலைவர் அப்துல் கஃபார் அல்-புஸாய்தி வழி மொழிந்தார்.

முன்னாள் பிரிட்டன் காலனி நாடான கென்யாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

அந்த நாட்டின் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 10 சதவீத பங்கு வகிக்கின்றனர்.

-http://www.dinamani.com