நடவடிக்கைக்கு அஞ்சா அம்னோ கிளர்சிக்காரர்கள் பதவி விலகல் கோரிக்கையை முடுக்கி விடுவர்

rebelsஅம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக் பதவி  விலகக்  கோரிக்கை  விடுத்த  தெலோக்  கெமாங்  அம்னோ  கிளைத்  தலைவர்கள்  13 பேரில்  ஒன்பதின்மர்  அடுத்த  வாரம்  கட்டொழுங்கு  வாரியத்திடம்  விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால்,  அதைக்  கண்டு  அக்குழுவினர்  அஞ்சவில்லை. அது  மட்டுமல்ல  அவர்களின்  முயற்சிகளை  முடுக்கி  விடவும்  உறுதி  பூண்டுள்ளனர்.

அக்குழுவின்  தலைவரும்  நஜிப்பின்  பதவி  விலகலுக்குக்  கோரிக்கை   விடுக்க  செய்தியாளர்  கூட்டத்தைக்  கூட்டியவருமான  தாமான்  டிகேகே  கிளைத்  தலைவர்  கமருல்  அஸ்மான்  ஹபிபுர்  ரஹ்மான்,  அவர்களின்  முயற்சியை  விரிவுபடுத்தி  ஒவ்வொரு  மாநிலத்துக்கும்  அதைக்  கொண்டு  செல்லப்போவதாகக்  கூறினார்.

நேற்றிரவு  பூச்சோங்கில்  ‘அம்னோவை  ஜனநாயகமாக்கும்  போராட்டம்’  என்ற  நிகழ்வில் அவர்  பேசினார்.

கட்சி  ஒழுங்கு வாரியத்தின்  விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பவர்களில்  கமருலும்  ஒருவராவார்.  புதன்கிழமை  பிற்பகல்  மணி 2.30க்கு  விசாரணை  நடைபெறும்.

நஜிப்பின்  பதவி  விலகலுக்கு  விடுக்கப்படும்  கோரிக்கைகள்  பெரிய  தாக்கத்தை  ஏற்படுத்தவில்லை  என்று  கட்சித்  தலைவர்கள்  கூறிக்  கொண்டிருப்பதை அவர்  மறுத்தார்.

“அது  தாக்கத்தை  உண்டுபண்ணவில்லை  என்றால்  எதற்காக  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்.

“எவ்வளவு விரைவாக  நடவடிக்கை  எடுத்திருக்கிறார்கள், பாருங்கள்.  ஏனென்றால் (நஜிப்புக்கு  எதிரான) இயக்கத்தைக்  கண்டு  கவலை  அடைந்திருக்கிறார்கள்”, என்றாரவர்.