“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்த நாள்

vannacharaba swamikala“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்த நாள் “28.11.1839”

“இனிப்பை சுவீட் என்றால் அறுத்தெறி நாக்கை” -என்று முழங்கியவர் நம் காலத்தில் வாழும் உணர்ச்சிப் பாவலர் காசி அனந்தன். இதே போல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தமிழுக்கு கேடு செய்பவனின் நாக்கை அறுப்பதோடு மட்டுமின்றி, அதை தீயினில் போட்டு எரிக்கச் சொன்னவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

“மதுரத் தமிழை இகழ் தீயோர்
மணி நா அறுத்துக் கனலில் இட”

தமிழ்வெறியர் என்றழைக்கப்படும் தண்டபாணி சுவாமிகள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழிசைப் பாடல்களை இயற்றியது இவரின் மிகப்பெரும் சாதனையாகும். முருகக் கடவுளையும், முத்தமிழையும் தமது இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர். இவரின் ஆன்மிகக் கொள்கை என்பது சமூக சீர்திருத்த பார்வை கொண்டதாகும். பிரித்தானிய எதிர்ப்பு, பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், வடமொழி எதிர்ப்பு போன்ற முற்போக்கு சீர்திருத்தக் கொள்கைகளை தம் பாடலின் மூலம் வெளிப்படுத்தியவர்.

vannacharaba swamikalதண்டபாணி சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் 27.11.1839ஆம் ஆண்டு செந்தி நாயகம் பேச்சி முத்தம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் மகிழ்வோடு இவரை சங்கரலிங்கம் என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

சங்கரலிங்கம் தனது ஒன்பதாம் வயதில் தென்காசியில் படித்துக் கொண்டிருந்த போது சுரண்டை அருகில் உள்ள சித்திரா நதிக்கரை “பூமி காத்தாள்” தேவியைப் போற்றிப் புகழ்ந்து முதல் முதலாக பாடல் இயற்றினார்.

மூன்றாண்டுகள் கழித்து திருமலை முருகன் கோயில் சன்னதியில் நின்று திருப்புகழ் பாடினார். முருகக் கடவுள் மீது பா புனைந்து பாடியதால் முருகதாசர் என்றும் அழைக்கப்பட்டார்.

முருக தாசராக அறியப்பட்டவர் நாளடைவில் தன்னுடற் கோலத்தை மாற்றினார். உடலெங்கும் திருநீறு பூசி, கழுத்தில் உருத்திராட்சை அணிந்து, இடுப்பில் கோவணம் கட்டி, கையில் தண்டம் ஏந்தியபடி தமிழகத்தில் உள்ள முருகத் திருத்தலம் நோக்கி நடந்தார். வழியெங்கும் இவரைக் கண்டு வணங்கிய முருக அன்பர்கள் “தண்டபாணி சுவாமிகள்” என்று அழைக்கத் தொடங்கினர். அந்தப் பெயரே இவருக்கு இறுதிவரை நிலைத்தது.

தமிழன்பர்கள் இவரின் பெயருக்கு முன்னால் “வண்ணச்சரபம்” என்பதையும் இணைத்தனர். புராணக் கதைகளில் சிங்கத்தை வெற்றி கொள்ளும் எட்டுகால் பறவைக்கு ‘சரபம்’ என்று பெயர். இதனை சிம்புட் பறவை என்று கூறுவாருமுண்டு. இவர் சந்தப்பாடல்களில் வண்ணம் எழுதுவதில் சிறந்து விளங்கியதாலும் “வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்” என்றே அனைவரும் அழைத்தனர்.

கொடுங்கோல் புரியும் பிரித்தானியர் ஆட்சியை கண்டித்து ஆங்கிலியர் அந்தாதியில், “அவர் குடியை மாய்ப்பவரே எமது குலதெய்வம்” என்று பாடினார்.

பெண் கல்வியைப் போற்றிப் புகழ்ந்தும், பெண்கல்வியை மறுப்பவரிடம்,

“நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்”

என்று கடிந்து பேசவும் துணிந்தார்.

கணவனை இழந்த கைம்பெண்கள் மறுமணம் செய்யுமாறு தன்பாடலில்,

“நூலிழந்தும் கேளிச்சை நூறாதான் மற்றுமொரு தாலி கட்டிக் கொள்ளத்தகும்”
என்றும்,

“தாய் தந்தை ஆதியர் தற்கு ஆகான்தனைக் கொள் எனில் வாய் திறந்து ஒவ்வேன் எனலாம் மாது”

என்றும் கூறினார்.

பெண்களை ‘தீட்டு’ என்று புறக்கணிக்கும் கொடுமைக்கு எதிராக முதன் முதலில் கலகம் செய்தவர் திருமூலர். பெண்கள் தீட்டு என்றால் அதிலிருந்து உருவான மானுடமும் தீட்டு என்பதை தனது திருமந்திரம் (2551) நூலில், “ஆசூச மானிடம் ஆசூசம் ஆகுமே, ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்” என்று வசைமொழி கூறிப் பாடினார். திருமூலர் வழியில் தண்டபாணி சுவாமிகளும் தீட்டிற்கு எதிராக உரத்துக் குரல் எழுப்பினார்.

அவர் காலத்திலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்குச் செல்லக்கூடாது என்று பழைமைவாதிகள் கூறி வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் தனது ‘புலவர் புராணம்’ நூலில்,

“வீங்கு புண் முலையாள்
மாதவிடாயினள் ஒருத்தி
வேட்கை தாங்குறாது இரங்கி
அன்னோன் சரண் பணிந்து
அதனைச் சொன்னாள் ஏங்குறேல் பெரு நெருப்பிற்கு ஈரம் இன்றே என்றானே!”

அதாவது, பெரு நெருப்பாகிய இறைவனுக்கு தீட்டு இல்லை என்பதை திருஞான சம்பந்தர் கதை மூலம் எடுத்துரைத்தார்.

ஒருமுறை வடமொழி விற்பன்னர்கள் நான்கு வேதம் உள்ள வடமொழியே சிறந்தது என்று வாதிட்ட போது, எங்கள் வேத நூல் திருக்குறள் உள்ள தமிழ்மொழியே சிறந்தது என்று கூறி வாயடைத்தார்.

“தமிழே உயர்ச்சியென்று சீட்டு கொடுத்த பெருமானே!”

என்று பாடல் இயற்றி இறைவனுக்கு நன்றி கூறவும் தவறவில்லை.

தமிழ் அறியாத தெய்வத்தை விட தமிழ் அறிந்த பேயே உயர்ந்தது என்பதை,

“தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளது எனில் அது உணர் அவகையில் தாழ்வு எனல் அறமே”

என்று கூறுவதன் மூலம் தமிழ்மொழி அறியாத் தெய்வத்தை புறந்தள்ளுகிறார்.

இலக்கணத்தில் ஐந்திலக்கணம் உண்டு. இதனோடு ஆறாவதாக “புலமை இலக்கணம்” என்ற பெயரில் புதிதாக ஒன்றைப் படைத்தார். ஆறாம் இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு இவையெல்லாம் கூட வண்ணச்சரபரின் கை வண்ணத்திலே எழுதப்பட்டவையாகும்.

திருவரங்கத் திருவாயிரம், ஞாயிறு ஆயிரம், சடகோபார் சதகத்தந்தாதி, பழனித் திருவாயிரம், வருக்கக்குறள், குருபரத்தத்துவம், புலவர் புராணம், அருணகிரிநாதர் புராணம், ஆறாயிரம் தோத்திரப் பாடல்கள் ஆகியவை சுவாமிகளின் புகழ்பெற்ற நூல்களாகும்.

சுவாமிகள் இயற்றிய ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் கிடைத்தவையாக ஓலைச்சுவடியிலும், அச்சிலும் மட்டுமே 49,722 பாடல்கள் உள்ளன.

தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் விழுப்புரம் அருகில் உள்ள திருவாமாத்தூரில் திருமடம் அமைத்து இறைப்பணியைச் செய்து வந்த சுவாமிகள் 15.7.1898இல் இம்மண்ணை விட்டும் தான் நேசித்த தமிழை விட்டும் உயிர் துறந்தார்.
இவரது சீடராகிய இராமநந்த சுவாமிகள் சிரவணபுரத்தில் (கோயம்புத்தூர்) இன்னொரு திருமடத்தை நிறுவி தண்டபாணி சுவாமிகள் செய்த இறைப்பணியை தொடர்ந்து செய்து வந்தார். தற்போது இருமடங்களும் “கெளமாரமடம்” என்று அழைக்கப்படுகிறது.

சமூக சீர்திருத்த எண்ணம் கொண்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் புகழ் ஓங்குக!

TAGS: